Tuesday, March 02, 2010

பட்ஜெட் - சில துளிகள்

- செல்லமுத்து குப்புசாமி

(உயிரோசை இணைய இதழுக்கு எழுதியது)


வழக்கமாக ஃபிப்ரவரி மாதம் இரண்டு சடங்குகள் நடக்கும். இரண்டையுமே மீடியா நன்றாக கவர் செய்யும். முதலாவது 14 ஆம் தேதி அரங்கேறும் காதலர் தினம், அதிலிருந்து 14 நாள் கழித்து அரங்கேறும் பட்ஜெட் இரண்டாவது. இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதால 26 ஆம் தேதியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பிரணாஃப் முகர்ஜி.

இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட், நிதித் துறை பட்ஜெட் இரண்டையுமே தாக்கல் செய்தவர்கள் வங்காளிகள். இருந்தாலும் மம்தாவைப் போல அல்லாமல் பிரணாஃப் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாகூரின் பெயரை வைக்கவில்லை என்பதால் சற்று ஆறுதல். கூடவே பட்ஜெட் பரபரப்பைக் குறைக்க சச்சின் டெண்டுல்கரும் இன்றைக்கு(பிப் 26) 200 அடிக்கவில்லை.

இப்போதெல்லாம் பட்ஜெட் அறிக்கையில் ஏதேனும் ஒரு வகையில் சலுகையை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் புதிய சலுகைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை அரசு விலக்கிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த முறை அனைவர் மனதிலும் இருந்த அவா.

2009-10 நிதியாண்டு அளவுக்கு வரவிருக்கும் நிதியாண்டு சவாலாக இருக்காது என்பதும், இதே நேர சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்போது நிலைமை மேம்பட்டிருப்பதாலும் சலுகைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்று கருதப்பட்டது. நல்ல வேளையாக அது ஒரே நாளில் நடக்காது என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அதே போல நாடு தழுவிய GST அறிமுகப்படுத்தப்படும் எனவும் கருதப்பட்டது. அதையும் ஓராண்டு தள்ளிப் போட்டிருக்கிறது அரசு. புதிதாக எதிர்பார்க்கப்படும் New Tax code வரி முறை 2011 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையை மேம்படுத்த அறிவித்த நிதிச் சலுகைகள் பட்ஜெட்டில் கூடுதல் பற்றாக்க்குறையை உண்டுபண்ணுகின்றன. உதாரணத்திற்கும் 2009-10 நிதியாண்டில் 6.9% பற்றாக்குறை. 2012-13 இல் இதை 4.1% ஆகக் குறைக்க முயற்சிகள் நடக்குமெனத் தெரிகிறது.

இன்ஃபோசிஸ் நந்தன் நிலாகேனி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் UID புராஜெக்ட்டுக்கு ரூ 1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ 1,47,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு ஆயிரத்து முன்னூற்றுச் சொச்ச ரூபாய் இராணுவத்திற்காகச் செலவழிக்கிறான்.

கார்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல இந்த வருடமும் சிகரெட்டின் விலை கூடுவதற்கான சாத்தியம் உள்ளது. பெட்ரொல், டீசல் விலையும் கூடும். மைக்ரோவேவ், மொபைல் போன் விலை குறையும்.

மற்றபடி ஊரக வேலை வாய்ப்புகள், சுகாதாரம், உள் கட்டமைப்பு வளர்ச்சி, நெசவுத் தொழிலுக்கு ஊக்கம், விவசாயக் கடனுக்கு சலுகை என சுவாரசியம் இல்லாத, அதே நேரம் முக்கியமான, அம்சங்கள் பட்ஜெட்டில் நிறைய உண்டு. அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் தனி நபர் வருமான வரி வரம்பை அகலப்படுத்தி சுவாரசியம் ஏற்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

ரூ 1.6 இலட்சம் முதல் ரூ 3 இலட்சம் வரையிலான 10% வருமான வரி வரம்பு ரூ 5 இலட்சம் வரை உயர்கிறது

ரூ 3 இலட்சம் ரூ 5 இலட்சம் வரையிலான 20% வரம்பு ரூ 5 இலட்சம் முதல் ரூ 8 இலட்சமாக உயர்கிறது

ரூ 5 இலட்சத்து மேல் இருந்த 30% வரம்பு ரூ 8 இலட்சத்துக்கு மேல் உயகிறது.

அதனால் எட்டு இலட்ச ரூபாய் (அல்லது அதற்கு மேல்) சம்பாதிக்கும் ஒரு நபரின் வருமான வரி ஐம்பதாயிர ரூபாய் குறையும்.

கூடவே செக்‌ஷன் 80C இன் கீழ் இருந்த ஒரு இலட்ச ரூபாய் வரம்பு ரூ 1,20,000 ஆக உயகிறது. இதனால் 30% வருமான வரம்பில் உள்ள நபருக்கு ஆறாயிரம் மிச்சமாகும்.

மொத்தமாக 56 ஆயிர ரூபாய். பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் பரவாயில்லை. வெள்ளிக் கிழமை டெண்டுல்கர் இன்னொரு இரட்டைச் சதம் அடித்திருந்தாலும் பிரணாப் மீது மீடியா வெளிச்சம் இருந்திருக்கும்.

4 comments:

Anonymous said...

Good post. Thanks!!

perumal said...

பகிர்ந்தமைக்கு நன்றிங்க சார்.

பல வருடங்கள் பார்மில் இல்லை என்றாலும் அணியை விட்டு தூக்காமல் பல மாமாங்கமாக ஒருவரை அணியில் வைத்திருந்தால் யார்தான் இரட்டை சதம் அடிக்கமாட்டார்கள்.

பணிவன்புடன்
பெருமாள்
கரூர்

Nithya said...

Nice Post...Thank You for sharing....

Nainar said...

well done Mr.chellamuthu kuppusamy. keep it up.