Tuesday, February 09, 2010

காக்கும் கரங்கள்

- செல்லமுத்து குப்புசாமி

எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள் அவர்கள், கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்களும். முதல் பெண் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இரண்டாவது பெண் பதினொன்றாம் வகுப்பு. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடான தோற்றம் கொண்டிருந்தாலும் நெருங்கிப் பழகினால் மிகவும் மென்மையான மனிதர்கள் என்று உணர்த்தும் குடும்பம்.


எங்கள் வீதி வழியாக பூக்காரர் கடந்து செல்லும் போது நானாக மனது வந்து ஒரு போதும் பூ வாங்கித் தந்ததில்லை என்று என் மனைவி குறைபடுவது வாடிக்கை.

நமது அதீதப் பகுத்தறவு காரணமாக சில மணி நேரத்தில் வாடிப் போகும் மலரில் என்னால் value addition ஐ அதிகம் கண்டுணர முடிந்ததில்லை. ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் அவராகவே பூவண்டியை நிறுத்தி அவர்கள் வீட்டில் மூன்று பெண்களுக்கும் வாங்கிய பிறகுதான் உள்ளே போவார்.

அந்த நண்பர் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரி முதல் தேதி காலமாகிவிட்டார்.

மூளையில் கட்டி என்று மருத்துவமனையில் காரணம் சொன்னார்களாம். சென்னைதான் அவர்களுக்குச் சொந்த ஊர். ஒரு கிரவுண்ட் நிலம் சுமார் 40 முதல் 50 இலட்சம் வரை தற்போது விற்கும் பகுதியில் (இரண்டு கிரவுண்ட் இடத்தில்) சுமார் ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டியுள்ளனர். உறவினர்கள் எல்லோரும் மேடவாக்கத்திலேயே உள்ளனர்.

எத்தனை இருந்தாலும் அந்த மனிதரின் இழப்பை இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய இயலாது. அவர் மூலமாகக் கிடைக்கும் பாதுகாப்பையும், அணுசரணையையும் வேறு எந்த சக்தியாலும் தர முடியாது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. என்னதான் அந்த மனிதரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், அந்த இழப்பினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடு செய்திருக்க முடியும், அவர் இன்ஷூர் செய்திருந்தால்.

"இன்சூரன்ஸ் கிளைம் புராசஸிங் ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. செய்து தருகிறேன்" அவரது மனைவியிடம் விசாரித்தேன்.

"குளோபல் ஆஸ்பத்திரிலதான் பாத்தோம். பாதிக்கும் மேல இன்சூரன்ஸ்ல வந்துருச்சுங்க" - என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.

"மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லைங்க, லைஃப் இன்சூரன்ஸ். எல்.ஐ.சி ல கிளைம் செய்யணும்னா சொல்லுங்க"

அவர் ஒன்றும் புரியாமல் குழப்பமாகப் பார்த்தார். ஒன்று அவருக்கு ஆயுள் காப்பீடு குறித்து ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவரது கணவர் ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன்.

"தெரியலீங்களே . . " சுரத்தே இல்லாத பதில்.

அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் இருந்த இன்னொரு நபர் பேசினார். அந்த அம்மாவுக்கு அவர் ஒரு வகையில் தம்பி முறை. இறந்து போன நபர் தனது உயிரை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இன்ஷூர் செய்திருப்பதாகவும், இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் மேற்படி வேலைகளைச் செய்து விடுவோம் என்றும் கூறினார்.

அந்தத் தகவல் அந்த அம்மாவுக்கு புதிதாக இருந்தது. "அப்படியாடா?" என்று திருப்பிக் கேட்டதில் கேள்வியில் ஆச்சரியத்தைக் காண முடிந்தது.

இது போன்ற காட்சிகளும், சூழ்நிலைகளும் புதிதல்ல. நடுத்தர வயது நடுத்தர வர்க்கத்து சம்பாதிக்கும் ஆண்கள் பொறுப்பானவர்களாகவும், பாசம் மிக்கவர்களாகவும் இருப்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தான் இல்லாமல் தன் குடும்பம் தனியாக விடப்பட்டால் அவர்களுக்கு போதுமான பொருளாதார ரீதியான பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது ஆயுளை எல்லோரும் காப்பீடு செய்திருப்பார்களா என்பதில் மாற்றுக் கருத்து உண்டு.

லைஃப் இன்சூரன்ஸ் என்பது சம்பாதிக்கும் ஆண்கள் (பெண்களும் கூட) செய்ய வேண்டிய கடமை. அவரைச் சார்ந்து இருக்கக் கூடிய குடும்பத்தினரது உரிமை.

எவ்வளவு தொகைக்கு இன்ஷூர் செய்திருக்கிறோம், அது தொடர்பான ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறோம் முதலிய தகவல்களை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் பிழை. Life insurance is not for the people who die, it is for those who are alive! நெருக்கமானவர்களின் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்ற போதும், அந்த இழப்பினால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவைச் சரி செய்ய ஆயுள் காப்பீடு உதவும்.

இன்சூரன்ஸ் எடுத்ததை மனைவியிடம் சொல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், குறைவான தொகைக்கு காப்பீடு செய்திருப்பதும் குற்றமே. எங்கள் எதிர் வீட்டுக்காரர் வெறும் ஐம்பதாயிரத்துக்குத்தான் இன்ஷூர் செய்திருந்தார்.

இரண்டு பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க அது போதுமாக இருக்குமா? (நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் சராசரி இன்ஷூரன்ஸ் மதிப்பு சுமார் 90 ஆயிர ரூபாய் மட்டுமே என்கிறது ஒரு புள்ளி விவரம்)

எவ்வளவுக்கு இன்ஷூர் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் ‘குறைந்தது உங்களது ஐந்தாண்டு வருமானம்’ என்பதே. உதாரணத்துக்கு உங்களது ஆண்டு வருமானம் ரூ 5 இலட்சம் என்றால் குறைந்தது ரு 25 இலட்ச ரூபாய்க்காவது ஆயுள் காப்பீடு செய்து கொள்வது நலம். அப்போதுதான் நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்கள் குடும்பம் ஐந்து வருடத்திற்காவது சிரமப்படாமல் வாழ முடியும். அதன் பிறகு ஏதாவது செய்து சமாளித்துக் கொள்வார்கள்.

வழக்கமாக நாம் எடுக்கும் பாலிசிகளில் சுமார் 5 இலட்ச ரூபாய் கவரேஜ் வேண்டினால் ஆண்டுக்கு சுமார் முப்பதாயிரம் கட்டுவோம். அப்படியானல் 25 இலட்சத்துக்கு ஒன்றரை இலட்சம் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆண்டு வருமானம் ஐந்து இலட்சத்தில் ஒன்றரை இலட்சத்தை இன்சூரன்ஷுக்கே கட்டி விட்டால் வேறு செலவே இல்லையா என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அந்தக் கவலையைப் போக்குகின்றன.

டெர்ம் பிளான்களில் ஆண்டுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாய் செலுத்தினால் 25 இலட்சம் கவரேஜ் கிடைக்கும். ஆனால் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது.

காப்பீடு செய்தவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு 25 இலட்சம், உயிரோடு இருந்தால் எட்டாயிர ரூபாய் பிரீமியம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு.

"எனக்குத் திரும்பக் கிடைக்காத பணத்தை எதற்குப் போட வேண்டும்"?""" இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதில் ஒரு நண்பரிடம் திருப்பிக் கேட்டேன்.

"உங்க காருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க?"

"வருசம் ஆறாயிரம்"

"நீங்க யார் மேலேயும் மோதாம ஒரு வருசம் காரை ஓட்டினா அந்த ஆறாயிரம் இன்சூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?"

"ஆமாம்"

"ஐந்து இலட்சம் மதிப்புள்ள காருக்கு வருசம் ஆறாயிரம் கட்டுறீங்க. வருசம் எட்டு இலட்சம் சம்பாதிக்கும் உங்க வாழ்க்கைக்கு எட்டாயிரம் கட்ட மாட்டீங்களா?"

யோசித்தார். நீங்களும் யோசியுங்கள், குறிப்பாக உங்கள் வயது முப்பதுக்கும் மேலே ஆகியிருந்தால். இல்லையேல் வழக்கமான இன்சூரன்ஸ் திட்டத்தில் 5 இலட்சம் இன்ஷூரன்ஸ் போதுமென்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆயுளை காப்பீடு செய்யாமல் இருப்பது உங்களை நம்பி இருப்போருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

நன்றி: உயிரோசை