Tuesday, April 20, 2010

Power of compounding - எட்டாம் அதிசயம்

வரவு எட்டணா என்ற தலைப்பில் உயிரோசையில் வெளியான கட்டுரை.

- செல்லமுத்து குப்புசாமி

நாங்கள் வாடிக்கையாளர்களோடு பேசும் போது ஒவ்வொரு முறையும் சந்திக்கிற சவால் அவர்களது தேவையை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். ஒவ்வொரு முறை பத்தி எழுதும் போதும் அதற்கான ‘ஓப்பனிங் லைன்’ தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலைக் காட்டிலும் பெரிய சவால் இது. ஆனால் ஒரு Ice breaking நடந்து விட்டால் மிச்சமெல்லாம் இலகுவாக நடந்து விடும்.


சம்பாதிப்பது, அதைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததைச் செலவு செய்வது என்ற வரிசை எல்லாம் சென்ற நூற்றாண்டின் சங்கதிகளாகி விட்டன. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கான வரிசை பாருங்கள். a) செலவு செய்வது b) செலவு செய்வதை நிறுத்துவது c) அதற்குப் பதிலாக சேமிப்பது d) சேமிப்பதற்குப் பதிலாக முதலீடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலானோர் a ஐத் தாண்டி வருவதே கிடையாது.

Personal Finance பரிணாமத்தின் நான்கு படிநிலைகளாக இவற்றை நான் கருதுகிறேன். கூடவே, இந்த இடத்தில் ஒரு anecdote இன் துணையை நாடலாம் எனவும் கருதுகிறேன்.

அவன் 24 வயது இளைஞன் – பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை. ஒரு குறிப்பிட்ட பாருக்கு மட்டும் வாராவாரம் 2000 முதல் 2500 ரூபாய் வரை செலவாகிறது. இது கடந்த இரண்டு வருடமாக நடக்கிறது.

ஏதேட்சையாக ஒரு நாள் அவனோடு உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. மாதம் எட்டாயிரம் ரூபாய் கேளிக்கைக்கு மட்டும் செலவழிக்கிறோமே என்ற விசனமே அவனுக்கு இருக்கவில்லை என்பதை அப்போது என்னால் உணர முடிந்த்து. எட்டாயிரம் என்பது நான்கு இலக்கத்தில் உள்ள சிறு தொகை என்பதாக அவன் எண்ணிக்கொண்டிருந்தான்.

அவனை குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்த மனது வரவில்லை. ஆனால் எங்கே குடிக்க வேண்டும் அல்லது குடிக்க்க் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் உதவ விரும்பினேன். பாருக்குச் செல்வதை விட டாஸ்மாக் துணையுடன் வீட்டிலேயே தண்ணி அடித்தால் மாதம் 2000 ரூபாய் மட்டுமே ஆகும் என்று தெரிந்தது.

ஆக, மாதம் ஆறாயிரம் ரூபாய் மிச்சம் செய்ய முடியுமென்ற சூழலை ஒரு சின்ன லைஃப்ஸ்டைல் மாற்றம் மூலம் உருவாக்க முடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சிறிய தொகையே.

ஆனால் இந்தத் தொகையை 18% வீதம் வளர்கிற வகையில் முதலீடு செய்தால் இருபது ஆண்டுகளில் ரூ 1,38,53,126 (ரூ 1.39 கோடி) கிடைக்க வாய்ப்பு உண்டு. உண்மையில் அவன் முதலீடு செய்து வைக்கும் தொகை 6000 X 12 X 20 = ரூ 14,40,000 (ரூ 14.4 இலட்சம்) மட்டுமே.

இதுதான் நீண்ட கால முதலீட்டின் ஆற்றல். ஒயின் மட்டுமல்ல, முதலீடு கூட நீண்ட காலம் வைத்திருந்தால் சிறக்கும். சரி.. இதே நம்ம பையன் இரண்டு வருடத்துக்கு முன்பாகவே வீட்டில் சரக்கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அப்போதிருந்தே இந்த வகையில் முதலீடு செய்தால் அவனுக்கு ரூ 1,99,74,884 (ரூ 1.98 கோடி) கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 6000 வீதம் அவன் கூடுதலாக முதலீடு செய்திருக்க்க் கூடியது வெறும் ரூ 1.44 இலட்சம் மட்டுமே. ஆனால் இறுதியில் (1,99,74,884 - 1,38,53,126) ரூ 61.22 இலட்சம் கூடுதலாகக் கிடைக்கும்.

அதுதான் Power of compounding is the eighth wonder of the world என்று ஐன்ஸ்டீன் சொன்னதற்குக் காரணம்.

மேலே சொன்ன anecdote இன் முக்கியமான சாரம்சம்: “எவ்வளவு விரைவாக, எவ்வளவு சின்ன வயதில் முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக துவங்கி விடுவது நல்லது”

http://www.indiamoneycenter.com/invest.html இல் உள்ள கால்குலேட்டர் உணர்ந்தும் இன்னொரு முக்கியமான விஷயம் எம்மாதிரியான முதலீடு அல்லது சேமிப்பில் பணத்தைப் போடுகிறோம் என்பதில் உள்ளது.

உதாரணத்துக்கு நம்ம பையனையெ எடுத்துக் கொள்வோம். மாதாமாதம் 6000 ரூபாயை 8% வட்டி கொடுக்கக் கூடிய வங்கி வைப்பீட்டில் போட்டால் இருபது ஆண்டு முடிவில் ரூ 35,34,122 கிடைக்கும். இதே பணத்தை 10% வளர்ச்சி தரும் வகையில் சேமித்தால் ரூ 45,56,213 கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 2 சதவீதம் என்பது சாதாரணமாத் தோன்றினாலும், இறுதியில் 29 சதவீதம் அதிகமாக்க் கிடைக்கிறது.

இப்போது 8% வட்டி தரும் சேமிப்பையும், 15% வளர்ச்சி தரும் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இறுதியில் ரூ 35,34,122 Vs ரூ 89,83,437. எத்தனை வித்தியாசம்!!

இதுதான் Power of Compounding உணர்த்தும் இரண்டாவது பாடம் – சேமிப்பிற்கும், முதலீட்டுக்குமான வேறுபாட்டை உணர்த்தும் பாடம்.

என்னைப் பொறுத்த மட்டிம் பணவீக்கத்தை விட அதிகமான வேகத்தில் வளர்வது முதலீடு. பணவீக்கத்திற்கு இணையாக அல்லது அதை விடக் குறைவாக வளர்வது சேமிப்பு. செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு சேமிப்பது என்பது நல்ல பழக்கம்தான். ஆனால் சேமிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் எதிர்காலப் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொள்வது சரியானதல்ல.

அதனால்தான், பர்சனல் ஃபைனான்ஸ் பரிணாம வளர்ச்சியில் செலவு, செலவைக் குறைப்பது, சேமிப்பு, முதலீடு என்று நான் வரிசைப்படுத்துகிறேன்.

செலவே செய்யாமல் நேரடியாக முதலீட்டுக்கு வந்தால், அதுவும் திருமணம் ஆவதற்கு முன்பாக இருபதுகளின் முதல் பாதியில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

”இப்ப என்ன அவசரம். இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்றது? எல்லாம் கல்யாணம் ஆன பின்னாடி பாத்துக்கலாம்” என்று நினைத்தால்.. ஆல் த பெஸ்ட்.. வேறென்ன சொல்ல!

அது கூடப் பரவாயில்லை. மேலே சொன்ன கதையை அதே வயதொத்த இன்னொரு இளைஞனோடு பகிர்ந்த போது, “அண்ணா, வீட்ல வாங்கி தண்ணி அடிச்சாலே மாசம் ஆறாயிரம் ஆகுது. என்ன செய்ய?” என்று திருப்பிக் கேட்டான்.

இதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் இருந்தன.

ஒன்று: “குட் கொஸ்டீன்”

இரண்டு: “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க”

Tuesday, March 02, 2010

பட்ஜெட் - சில துளிகள்

- செல்லமுத்து குப்புசாமி

(உயிரோசை இணைய இதழுக்கு எழுதியது)


வழக்கமாக ஃபிப்ரவரி மாதம் இரண்டு சடங்குகள் நடக்கும். இரண்டையுமே மீடியா நன்றாக கவர் செய்யும். முதலாவது 14 ஆம் தேதி அரங்கேறும் காதலர் தினம், அதிலிருந்து 14 நாள் கழித்து அரங்கேறும் பட்ஜெட் இரண்டாவது. இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதால 26 ஆம் தேதியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பிரணாஃப் முகர்ஜி.

இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட், நிதித் துறை பட்ஜெட் இரண்டையுமே தாக்கல் செய்தவர்கள் வங்காளிகள். இருந்தாலும் மம்தாவைப் போல அல்லாமல் பிரணாஃப் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாகூரின் பெயரை வைக்கவில்லை என்பதால் சற்று ஆறுதல். கூடவே பட்ஜெட் பரபரப்பைக் குறைக்க சச்சின் டெண்டுல்கரும் இன்றைக்கு(பிப் 26) 200 அடிக்கவில்லை.

இப்போதெல்லாம் பட்ஜெட் அறிக்கையில் ஏதேனும் ஒரு வகையில் சலுகையை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் புதிய சலுகைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை அரசு விலக்கிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த முறை அனைவர் மனதிலும் இருந்த அவா.

2009-10 நிதியாண்டு அளவுக்கு வரவிருக்கும் நிதியாண்டு சவாலாக இருக்காது என்பதும், இதே நேர சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்போது நிலைமை மேம்பட்டிருப்பதாலும் சலுகைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்று கருதப்பட்டது. நல்ல வேளையாக அது ஒரே நாளில் நடக்காது என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அதே போல நாடு தழுவிய GST அறிமுகப்படுத்தப்படும் எனவும் கருதப்பட்டது. அதையும் ஓராண்டு தள்ளிப் போட்டிருக்கிறது அரசு. புதிதாக எதிர்பார்க்கப்படும் New Tax code வரி முறை 2011 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையை மேம்படுத்த அறிவித்த நிதிச் சலுகைகள் பட்ஜெட்டில் கூடுதல் பற்றாக்க்குறையை உண்டுபண்ணுகின்றன. உதாரணத்திற்கும் 2009-10 நிதியாண்டில் 6.9% பற்றாக்குறை. 2012-13 இல் இதை 4.1% ஆகக் குறைக்க முயற்சிகள் நடக்குமெனத் தெரிகிறது.

இன்ஃபோசிஸ் நந்தன் நிலாகேனி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் UID புராஜெக்ட்டுக்கு ரூ 1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ 1,47,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு ஆயிரத்து முன்னூற்றுச் சொச்ச ரூபாய் இராணுவத்திற்காகச் செலவழிக்கிறான்.

கார்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல இந்த வருடமும் சிகரெட்டின் விலை கூடுவதற்கான சாத்தியம் உள்ளது. பெட்ரொல், டீசல் விலையும் கூடும். மைக்ரோவேவ், மொபைல் போன் விலை குறையும்.

மற்றபடி ஊரக வேலை வாய்ப்புகள், சுகாதாரம், உள் கட்டமைப்பு வளர்ச்சி, நெசவுத் தொழிலுக்கு ஊக்கம், விவசாயக் கடனுக்கு சலுகை என சுவாரசியம் இல்லாத, அதே நேரம் முக்கியமான, அம்சங்கள் பட்ஜெட்டில் நிறைய உண்டு. அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் தனி நபர் வருமான வரி வரம்பை அகலப்படுத்தி சுவாரசியம் ஏற்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

ரூ 1.6 இலட்சம் முதல் ரூ 3 இலட்சம் வரையிலான 10% வருமான வரி வரம்பு ரூ 5 இலட்சம் வரை உயர்கிறது

ரூ 3 இலட்சம் ரூ 5 இலட்சம் வரையிலான 20% வரம்பு ரூ 5 இலட்சம் முதல் ரூ 8 இலட்சமாக உயர்கிறது

ரூ 5 இலட்சத்து மேல் இருந்த 30% வரம்பு ரூ 8 இலட்சத்துக்கு மேல் உயகிறது.

அதனால் எட்டு இலட்ச ரூபாய் (அல்லது அதற்கு மேல்) சம்பாதிக்கும் ஒரு நபரின் வருமான வரி ஐம்பதாயிர ரூபாய் குறையும்.

கூடவே செக்‌ஷன் 80C இன் கீழ் இருந்த ஒரு இலட்ச ரூபாய் வரம்பு ரூ 1,20,000 ஆக உயகிறது. இதனால் 30% வருமான வரம்பில் உள்ள நபருக்கு ஆறாயிரம் மிச்சமாகும்.

மொத்தமாக 56 ஆயிர ரூபாய். பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் பரவாயில்லை. வெள்ளிக் கிழமை டெண்டுல்கர் இன்னொரு இரட்டைச் சதம் அடித்திருந்தாலும் பிரணாப் மீது மீடியா வெளிச்சம் இருந்திருக்கும்.

Tuesday, February 09, 2010

காக்கும் கரங்கள்

- செல்லமுத்து குப்புசாமி

எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள் அவர்கள், கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்களும். முதல் பெண் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இரண்டாவது பெண் பதினொன்றாம் வகுப்பு. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடான தோற்றம் கொண்டிருந்தாலும் நெருங்கிப் பழகினால் மிகவும் மென்மையான மனிதர்கள் என்று உணர்த்தும் குடும்பம்.


எங்கள் வீதி வழியாக பூக்காரர் கடந்து செல்லும் போது நானாக மனது வந்து ஒரு போதும் பூ வாங்கித் தந்ததில்லை என்று என் மனைவி குறைபடுவது வாடிக்கை.

நமது அதீதப் பகுத்தறவு காரணமாக சில மணி நேரத்தில் வாடிப் போகும் மலரில் என்னால் value addition ஐ அதிகம் கண்டுணர முடிந்ததில்லை. ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் அவராகவே பூவண்டியை நிறுத்தி அவர்கள் வீட்டில் மூன்று பெண்களுக்கும் வாங்கிய பிறகுதான் உள்ளே போவார்.

அந்த நண்பர் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரி முதல் தேதி காலமாகிவிட்டார்.

மூளையில் கட்டி என்று மருத்துவமனையில் காரணம் சொன்னார்களாம். சென்னைதான் அவர்களுக்குச் சொந்த ஊர். ஒரு கிரவுண்ட் நிலம் சுமார் 40 முதல் 50 இலட்சம் வரை தற்போது விற்கும் பகுதியில் (இரண்டு கிரவுண்ட் இடத்தில்) சுமார் ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டியுள்ளனர். உறவினர்கள் எல்லோரும் மேடவாக்கத்திலேயே உள்ளனர்.

எத்தனை இருந்தாலும் அந்த மனிதரின் இழப்பை இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய இயலாது. அவர் மூலமாகக் கிடைக்கும் பாதுகாப்பையும், அணுசரணையையும் வேறு எந்த சக்தியாலும் தர முடியாது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. என்னதான் அந்த மனிதரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், அந்த இழப்பினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடு செய்திருக்க முடியும், அவர் இன்ஷூர் செய்திருந்தால்.

"இன்சூரன்ஸ் கிளைம் புராசஸிங் ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. செய்து தருகிறேன்" அவரது மனைவியிடம் விசாரித்தேன்.

"குளோபல் ஆஸ்பத்திரிலதான் பாத்தோம். பாதிக்கும் மேல இன்சூரன்ஸ்ல வந்துருச்சுங்க" - என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.

"மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லைங்க, லைஃப் இன்சூரன்ஸ். எல்.ஐ.சி ல கிளைம் செய்யணும்னா சொல்லுங்க"

அவர் ஒன்றும் புரியாமல் குழப்பமாகப் பார்த்தார். ஒன்று அவருக்கு ஆயுள் காப்பீடு குறித்து ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவரது கணவர் ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன்.

"தெரியலீங்களே . . " சுரத்தே இல்லாத பதில்.

அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் இருந்த இன்னொரு நபர் பேசினார். அந்த அம்மாவுக்கு அவர் ஒரு வகையில் தம்பி முறை. இறந்து போன நபர் தனது உயிரை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இன்ஷூர் செய்திருப்பதாகவும், இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் மேற்படி வேலைகளைச் செய்து விடுவோம் என்றும் கூறினார்.

அந்தத் தகவல் அந்த அம்மாவுக்கு புதிதாக இருந்தது. "அப்படியாடா?" என்று திருப்பிக் கேட்டதில் கேள்வியில் ஆச்சரியத்தைக் காண முடிந்தது.

இது போன்ற காட்சிகளும், சூழ்நிலைகளும் புதிதல்ல. நடுத்தர வயது நடுத்தர வர்க்கத்து சம்பாதிக்கும் ஆண்கள் பொறுப்பானவர்களாகவும், பாசம் மிக்கவர்களாகவும் இருப்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தான் இல்லாமல் தன் குடும்பம் தனியாக விடப்பட்டால் அவர்களுக்கு போதுமான பொருளாதார ரீதியான பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது ஆயுளை எல்லோரும் காப்பீடு செய்திருப்பார்களா என்பதில் மாற்றுக் கருத்து உண்டு.

லைஃப் இன்சூரன்ஸ் என்பது சம்பாதிக்கும் ஆண்கள் (பெண்களும் கூட) செய்ய வேண்டிய கடமை. அவரைச் சார்ந்து இருக்கக் கூடிய குடும்பத்தினரது உரிமை.

எவ்வளவு தொகைக்கு இன்ஷூர் செய்திருக்கிறோம், அது தொடர்பான ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறோம் முதலிய தகவல்களை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் பிழை. Life insurance is not for the people who die, it is for those who are alive! நெருக்கமானவர்களின் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்ற போதும், அந்த இழப்பினால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவைச் சரி செய்ய ஆயுள் காப்பீடு உதவும்.

இன்சூரன்ஸ் எடுத்ததை மனைவியிடம் சொல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், குறைவான தொகைக்கு காப்பீடு செய்திருப்பதும் குற்றமே. எங்கள் எதிர் வீட்டுக்காரர் வெறும் ஐம்பதாயிரத்துக்குத்தான் இன்ஷூர் செய்திருந்தார்.

இரண்டு பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க அது போதுமாக இருக்குமா? (நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் சராசரி இன்ஷூரன்ஸ் மதிப்பு சுமார் 90 ஆயிர ரூபாய் மட்டுமே என்கிறது ஒரு புள்ளி விவரம்)

எவ்வளவுக்கு இன்ஷூர் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் ‘குறைந்தது உங்களது ஐந்தாண்டு வருமானம்’ என்பதே. உதாரணத்துக்கு உங்களது ஆண்டு வருமானம் ரூ 5 இலட்சம் என்றால் குறைந்தது ரு 25 இலட்ச ரூபாய்க்காவது ஆயுள் காப்பீடு செய்து கொள்வது நலம். அப்போதுதான் நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்கள் குடும்பம் ஐந்து வருடத்திற்காவது சிரமப்படாமல் வாழ முடியும். அதன் பிறகு ஏதாவது செய்து சமாளித்துக் கொள்வார்கள்.

வழக்கமாக நாம் எடுக்கும் பாலிசிகளில் சுமார் 5 இலட்ச ரூபாய் கவரேஜ் வேண்டினால் ஆண்டுக்கு சுமார் முப்பதாயிரம் கட்டுவோம். அப்படியானல் 25 இலட்சத்துக்கு ஒன்றரை இலட்சம் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆண்டு வருமானம் ஐந்து இலட்சத்தில் ஒன்றரை இலட்சத்தை இன்சூரன்ஷுக்கே கட்டி விட்டால் வேறு செலவே இல்லையா என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அந்தக் கவலையைப் போக்குகின்றன.

டெர்ம் பிளான்களில் ஆண்டுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாய் செலுத்தினால் 25 இலட்சம் கவரேஜ் கிடைக்கும். ஆனால் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது.

காப்பீடு செய்தவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு 25 இலட்சம், உயிரோடு இருந்தால் எட்டாயிர ரூபாய் பிரீமியம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு.

"எனக்குத் திரும்பக் கிடைக்காத பணத்தை எதற்குப் போட வேண்டும்"?""" இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதில் ஒரு நண்பரிடம் திருப்பிக் கேட்டேன்.

"உங்க காருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க?"

"வருசம் ஆறாயிரம்"

"நீங்க யார் மேலேயும் மோதாம ஒரு வருசம் காரை ஓட்டினா அந்த ஆறாயிரம் இன்சூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?"

"ஆமாம்"

"ஐந்து இலட்சம் மதிப்புள்ள காருக்கு வருசம் ஆறாயிரம் கட்டுறீங்க. வருசம் எட்டு இலட்சம் சம்பாதிக்கும் உங்க வாழ்க்கைக்கு எட்டாயிரம் கட்ட மாட்டீங்களா?"

யோசித்தார். நீங்களும் யோசியுங்கள், குறிப்பாக உங்கள் வயது முப்பதுக்கும் மேலே ஆகியிருந்தால். இல்லையேல் வழக்கமான இன்சூரன்ஸ் திட்டத்தில் 5 இலட்சம் இன்ஷூரன்ஸ் போதுமென்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆயுளை காப்பீடு செய்யாமல் இருப்பது உங்களை நம்பி இருப்போருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

நன்றி: உயிரோசை

Friday, January 29, 2010

விலையேற்றம் . . .

பணவீக்கம் பூஜ்ஜியத்துக்குக் கீழே போய் விட்டது என்ற மீடியா அலறல் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. இப்போது விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்துக் குற்றம் சாட்டுவதில் பல பேர் மும்முரம் ஆகியிருக்கிறார்கள்.


எதிர்க் கட்சிகள் சரத் பவாரைக் குற்றம் சாட்ட, அவரோ விலையேற்றத்துக்கு தான் மட்டும் காரணமல்ல அமைச்சரவையில் உள்ள அத்தனை பேருமே காரணம் என்று சமாளிபிகேஷன் செய்திருக்கிறார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17.40 விழுக்காட்டை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்த பணவீக்கம் 6 விழுக்காட்டுக்குப் பக்கத்தில் உள்ளது. அதாவது மற்ற பொருட்களைக் காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்வது இன்றியமையாதது. ஒரு தேசம் பொருளாதார ரீதியாக முன்னேறிய தேசமாக மாறும் போது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்து போவதும், கிராமப்புறத்தில் இருந்து நகரங்களுக்கு மக்கள் நகர்வதும் நடந்தேறுகிறது. அதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல.

அதே போல விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும், மற்ற வேலை செய்து ஈட்டும் வருவாய்க்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே வேளாண்மைக்கான இடுபொருட்களின் விலை, கூலி ஆகியனவும் கூடுகின்றன. அதனால் விளைபொருட்களுக்கும், தேவைக்குமான இடைவெளியும் அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. என்றாலும் கூட. . .

இந்தியாவைப் பொறுத்தமட்டில் உணவுப் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலையில் குடியானவனுக்கும் எத்தனை விழுக்காடு சென்று சேர்கிறது, இடைத் தரகர்களுக்கு எவ்வளவு மிஞ்சுகிறது எனக் கண்டறிந்து அதைச் சரி செய்தாலே பல பிரச்சினைகள் ஓயும் எனத் தெரிகிறது. ஆனால் அப்படியெல்லாம் நடக்காது என்றும் தெரிகிறது.