Tuesday, November 03, 2009

இன்சூரன்ஸ் தொடர் - பாகம் 1

இன்சூரன்ஸ் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மெகா ஹிட் ஆகியிருக்கும் இன்றைய சூழலில் இது பொருத்தமான ஒரு செயலாகவே அமையும். ஒரு தேர்ந்த திரைக்கதை மாதிரி விறுவிறுப்பாக இல்லாவிடினும் இயன்ற அளவுக்கு கோர்வையாகத் தரும் முயற்சியைத் துவங்குகிறேன்.

**
தீபாவளிக்கு ஊருக்குப் போக எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவேயில்லை. அதனால் காரில் செல்வதென்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். சென்னையின் நகர எல்லையைத் தாண்டி வெளியே நீண்ட தூரம் பயணித்ததென்று பார்த்தால் ஒரு முறை பாண்டிச்சேரி சென்று வந்ததுதான். அதை விட அதிகத் தொலைவு காரில் பயணித்தது கிடையாது.

ஆகையால் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பயணம் என்பதைக் எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டியிருந்தது. முந்தைய நாளே பவர் ஸ்டியரிங் ஆயிலும், ரேடியேட்டரில் தண்ணீரும் ஊற்றி வைத்தாயிற்று. கூடவே ஜாக்கி, அதை ஆபரேட் செய்ய ஸ்பேனர் எல்லாம் தேடி எடுத்து வைத்துக்கொண்டோம். ஸ்டெப்னி டயர் நல்ல கண்டிஷனில் உள்ளதா என்றும் உறுதி செய்துகொண்டோம்.

இது பள்ளிக்கூட நாட்களை எனக்கு நினைவில் கொண்டு வந்தது. தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று பேனா எடுத்து வைப்பது, அவற்றில் மையிட்டு நிரப்பிக் கொள்வது எல்லாம் ஞாபகத்தில் வந்து போனது.

பரீட்சை எழுதுகையில் ஒரு பேனா பழுதானாலும் இன்னொரு பேனாவை வைத்து ஜமாய்த்து விடலாம் - எழுதுவதற்கு சரக்கு மட்டும் இருந்தால். அதே போல வழியில் ஏதாவது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதமானாலும் ரயிலைத் தவறவிடாமல் இருப்பதற்காகவே முன் கூட்டியே கிளம்புகிறோம்.

வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பதில் தவறேதுமில்லை. அப்படி இல்லாமல் போனால்தான் தவறு. நானெல்லாம் பத்தரை மணி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒன்பதுக்கே சென்ட்ரல் சென்றடைகிற ஆள்.

இன்சூரன்ஸின் அடிப்படைத் தத்துவமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. எதிர்பாராத நிகழ்வு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. சுனாமி ஏற்படுவதையோ, பஞ்சம் ஏற்படுவதையோ அல்லது கார் பஞ்சர் ஆவதையோ நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் அப்படி ஒரு துரதிர்ஷ்ட நிகழ்வு நடக்கும் போது அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளின் தாக்கத்தை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் பாருங்கள் இதில் ஒரு சிக்கல். கார் பஞ்சர் ஆனால் மாற்று டயரை மாட்டி ஓட்டி விடலாம். விபத்தாகி காரே ஒட்டு மொத்தமாக நொறுங்கிப் போனால் என்னா செய்வது? ஸ்டெப்னி டயர் மாதிரி ஸ்டெப்னி கார் சாத்தியமில்லை.

வேறு வழி? நாம் காருக்கு இன்சூர் செய்திருந்தால் காரை ரிப்பேர் செய்வதற்கோ அல்லது அதை பயன்படுத்தவே முடியாது எனும் பட்சத்தில் வேறொரு கார் வாங்குவதற்கோ ஆகும் செலவை இன்சூரன்ஸ் கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.

இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மாருதி 800 வண்டியை தென்னந்தோப்புக்குள் நிறுத்தி வைத்திருக்க அதன் மீது தேங்காய் உடைந்து கண்ணாடி காலி. ஃபுல் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்ததால் அதை மாற்றுவதற்கு ஆன செலவு எல்லாத்தையும் இன்சூரன்ஸில் வசூல் செய்து விட்டார்.

இன்னொருவர் தனது காரை பாலத்தில் பக்கச் சுவர் மீது மோதி விட்டார். காருக்கு பலத்தை சேதம். அறுபதாயிரம் ஆச்சு. அவர் third party insurance (அதாவது இவர் யார் மீதாவது காரை இடித்து அடி பட்டவர்களுக்கு ஏதாவது நேர்ந்து அதனால் ஆகும் செலவுக்கு மாத்திரம் இன்சூரன்ஸ்) மட்டும் போட்டு வைத்திருந்த காரணத்தால் எல்லாச் செலவையும் அவரே ஏற்க வேண்டியானது.

ஃபுல் இன்சூரன்ஸுக்கும், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸுக்கும் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் வேறுபடுகிறது.

பிரீமியம் என்பது இழப்பு ஏற்படும் போது நமது இழப்பை இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொண்டு ஈடுகட்டுவதற்கு முன் கூட்டியே நாம் கொடுக்கும் விலை. அதாவது இன்சூரன்ஸ் கவரேஜை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். அந்த விலைதான் பிரீமியம்.

உதாரணத்துக்கு ஒரு ஊரில் 400 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு 20,000 ரூபாய். ஒரு வருடத்தில் நான்கு வீடுகள் தீப்பிடுத்து முற்றிலும் எரிந்து போகின்றன. ஆனால் எந்த வீடு எரியும் என்பதைச் சொல்ல முடியாது. அதனால் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள்.

மொத்தமாக நாலு வீடு எரிந்து போவதால் ஏற்படும் இழப்பு 4 X 20,000 = ரூ 80,000. இந்தப் பணம் இருந்தால் அந்த நாலு குடும்பத்தினரும் தமது வீடுகளை மீள் நிர்மாணம் செய்துகொள்ளலாம். அதனால் வருடத் தொடக்கத்தில் வீடொன்றுக்கு ரூ 200 வசூல் செய்கிறார்கள். 400 வீட்டுக்கு 80,000 ஆச்சா?

அந்த 400 பேரில் யார் வீட்டுக்கு பாதகம் வந்தாலும் அவர்களது 20,000 ரூபாய் இழப்பு வெறும் 200 ரூபாய் பணம் போட்டதால் சரி செய்யப்படுகிறது. வீட்டுக்கு ஆபத்து வரவில்லை என்றால் மிச்சமுள்ள 398 பேருக்கும் 200 ரூபாய் இழப்புதான்.

இன்சூனஸின் அடிப்படை இதுதான். 20,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டை இன்சூர் செய்ய ஒவ்வொருவரும் கொடுக்கும் விலை ரூ 200. அந்த விலைதான் பிரீமியம் எனப்படுகிறது.

சுருங்கச் சொன்னால் ஒரு ஆளுக்கு ஏற்படும் இழப்பை அல்லது பாதிப்பை பல பேர் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஏற்பாடுதான் இன்சூரன்ஸ்.

யார் மீதாவது காரை மோதி செலவு வைத்தால் எனக்கு இலாபம். இல்லாவிட்டால் எனது பிரீமியத் தொகை செலவுதான்.

இதே கான்செப்ட் ஆயுள் காப்பீட்டுக்கும் பொருந்துகிறது. ஒரு ஊரில் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 3 பேர் இறக்கக் கூடும் என்பது கணிப்பு. ஒரு ஆள் மரணமடைவதால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ 10,000 என வைத்துக் கொள்வோம்.

மொத்தமாக மூன்று குடும்பத்தின் இழப்பையும் ஈடு கட்ட ரூ 30,000 ஆகிறது. ஊரில் உள்ள ஆயிரம் பேரில் தலைக்கு முப்பது ரூபாய் முன் கூட்டியே வசூல் செய்து வைத்துக்கொண்டால் முப்பதாயிரம் ஆயிற்று.

ஆக இங்கே பத்தாயிரம் ரூபாய் இழப்பைச் சரி செய்ய ஒவ்வொரு ஆளும் முப்பது ரூபாய் போட்டு தங்களை இன்சூர் செய்கிறார்கள்.

எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டும் போது கிடைக்கும் இழப்பீடு ரூ 10,000 அல்லவா? இதத்தான் Sum Assured அல்லது SA என்று இன்சூரன்ஸ் மொழியில் குறிக்கிறார்கள்.

பத்தாயிரம் ரூபாய் Sum Assured க்கு ஒருவர் செலுத்து ஆண்டு பிரீமியம் ரூ 30. ஆனால் இதில் ஒரு சிக்கல்.

செத்துப் போனால் மட்டுந்தான் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும். ஆண்டு முடிவில் உயிரோடு இருக்கும் பட்சத்தில் 30 ரூபாய் பிரீமியம் போனதுதான். வருடாவருடம் இப்படி ஒரு தொகையை பிரீயம் தொகையை செலுத்திக்கொண்டே வர வேண்டியிருக்கும்.

இப்படியாகப்பட்ட ஒரு ஏற்பாடு டெர்ம் இன்சூரன்ஸ் (Term insurance) எனப்படுகிறது.

அப்படியானால் பத்து வருடம் இடைவிடாமல் பிரீமியம் என்ற பெயரில் பணம் போட்டால் முடிவில் தனக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை.

”பிரீமியம் கட்டுவேன். இடையே எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் எனது குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். ஆண்டவன் புண்ணியத்தில் பத்து வருடம் கழித்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நான் போட்ட பணம் திரும்பக் கிடைத்து விட வேண்டும். முடிந்தால் வட்டி, போனல் எல்லாம் சேர்த்து” – இப்படி ஒரு சிந்தனை வரும்.

பெரும்பாலான திட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அதற்கு என்ன பெயர் தெரியுமா?

அடுத்த பதிவில்..

7 comments:

அகில் பூங்குன்றன் said...

ஸூப்பருங்கோ....காத்திருக்கிறேன் விரிவாக அறிய,.

Anonymous said...

Nice attempt. Keep going

பல்லவநாடன் said...

நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

Chellamuthu Kuppusamy said...

நன்றி அகில் பூங்குன்றன, அனானி நண்பர் மற்றும் பல்லவநாடன்.

perumal said...

உயர்திரு சார்,
வணக்கம்.
இரண்டு நாட்களாக எனது இணைய இணைப்பு பழுதடைந்திருந்த காரணத்தால் இந்த பதிவை உடனே படிக்க இயலவில்லை.

//இது பள்ளிக்கூட நாட்களை எனக்கு நினைவில் கொண்டு வந்தது. தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று பேனா எடுத்து வைப்பது, அவற்றில் மையிட்டு நிரப்பிக் கொள்வது எல்லாம் ஞாபகத்தில் வந்து போனது.//

இது போன்ற உதாரணங்கள் தான் உங்களை மற்ற எழுத்தாளர்களில் (பொருளாதாரம் பற்றி எழுதுபவர்கள்)இருந்து வேறுபடுத்துகிறது. ஏனென்றால் இந்த உதாரணம் ஒரு நவீன எழுத்தாளனுக்குரிய பாங்கோடு உள்ளது.

தொடக்கமே அருமையாக அமைந்துள்ளது.

ஆவலுடன்

மிக்க நன்றி

Chellamuthu Kuppusamy said...

நன்றிகள் பெருமாள்.

Anonymous said...

thnak you sir by manoharganapathy