Friday, July 17, 2009

லஞ்ச் வித் வாரன் பஃபட்

- செல்லமுத்து குப்புசாமி

உங்களுக்கு வாரன் பஃபெட் பற்றித் தெரிந்திருக்கும். அவர் உலகிலேயே முதன்மையான, திறமையான பங்கு முதலீட்டாளர். உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர்; 78 வயது இளைஞர். தன் செல்வத்தின் 85 சதவீதத்தை அறக்கட்டளைக்கு தானமாகக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

சமீப ஆண்டுகளில் அவர் இம்மாதிரியான காரியங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாகக் கலந்து கொள்ளாமல் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கும் வாரனை தனிப்பட்ட முறையில் சந்திப்பது அரிது. அதிலும் அவரோடு சேர்ந்து மதிய உணவு கொள்வதென்றால் நிஜமாலுமே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்!

பங்குச் சந்தை முதலீட்டின் பிதாமகர் வாரன் பஃபெட்டோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு போட்டா போட்டி. அந்த வாய்ப்பை ஈ-பே மூலம் ஏலத்தில் எடுக்க வேண்டும். அப்படி ஏலத்தில் கிடைக்கும் தொகையை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது வாரனின் பழக்கம்.

இந்த முறை அந்த வாய்ப்பை வென்றவர் ஒரு சீனர். அதற்கு அவர் கொடுத்த விலை 2,110,100 டாலர். நம்ம ஊர் பணத்தில் பத்துக் கோடிக்கும் மேலே. ஒரு கிழவனோடு சோறு தின்ன இவ்வளவு செலவழிக்கும் அளவுக்கு ஒரு சீனாக்காரர் தயாராக இருக்கிறார் என்றால் வாரன் பஃபெட் உலகலாவிய அளவில் எவ்வளவு செல்வாக்கும், ஆளுமையும், மதிப்பும் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது.

37 வயதாகும் அந்த சீன பிஸ்னஸ்மேன் பெயர் Zhao Danyang. உலகமே பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் போது அவ்வளவு பணத்தைக் கொடுத்து போன மாதத்தின் கடைசி வாரம் வாரன் பஃபெட்டுடன் லஞ்ச் சாப்பிட்டார்.

இதில் வேடிக்கை, அவர் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்ததுதான். “நாளை அவரைச் சந்திக்கும் போது WuMart என்ற சீன சில்லறை வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு ஆலோசனை கூறுவேன் என்று லஞ்சுக்கு முந்தைய நாள் அவர் பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார். என்ன ஷேர் வாங்கலாம் என்று வாரனுக்கு டிப்ஸ் கொடுப்பதும் திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதும் ஒன்றுதான்.

உடன் இணைந்து சாப்பிடும் போது அந்த யோசனையை Zhao வாரனுக்குச் சொன்னாரோ அல்லது வாரன் அதில் முதலீடு செய்வதாக ஒத்துக்கொண்டாரா தெரியாது. ஆனால் அவர் சீனாவுக்குத் திரும்பிய போது WuMart பங்குகள் 25 சதவீதம் உயர்ந்திருந்தன. ஷேர் விலை ஏறியதால் அதில் Zhao போட்டிருந்த முதலீட்டின் மதிப்பு 16 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றம் கண்டது.

வெறும் 2.1 மில்லியன் போட்டு 16 மில்லியன் எடுத்தார் அந்த பிசினஸ்மேன். சொல்லுங்கள், இதுதானே வியாபார நுணுக்கம்!

2 comments:

perumal said...

வாரன் தஞ்சாவூர் தசுக்கன் என்றால் Zhao Danyang மதுர எத்தனா இருக்காரே!!!

Anonymous said...

sir i cant read ur font