Tuesday, April 07, 2009

பணவீக்கமும், பதற்றமும்!

- செல்லமுத்து குப்புசாமி

பணம் வீங்கும் விதம் என்ற தலைப்பில் உயிரோசை இணைய வார இதழுக்கு எழுதியது.

முன்பெல்லாம் அரசியல் வட்டாரங்களிலும், அறிவு ஜீவிகள் மட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு விவாதம் நடக்கும். விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறதே என்ற கவலை அந்த விவாதங்களின் மையக் கருத்தாக இருக்கும். ஆனால் இப்போது விவாதம் வேறு திசையில் நகர்கிறது. நமக்கு விவரம் தெரிந்து இந்த மாதிரி நடந்ததில்லை.

மார்ச் 14 ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் 0.44 சதவீதமாக நிலவிய பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த அளவு குறைவான பணவீக்கம் நிலவியதில்லை - இது செய்தி.

பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போனாலும் போகலாம் என்று கருதப்படுகிறது. அது குறித்து பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலைவாசியின் வீழ்ச்சி ஏற்படுத்தப் போகும் பாதகங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். எனினும் பூஜ்ஜியத்திற்குக் கீழே பணவீக்கம் சென்றாலும், அதே நிலை நீண்ட நாள் தொடராது என்று ஆறுதல் அடைகிறார்கள் - இது விவாத வியாக்கியானம்.

நமக்கெல்லாம் தெரியும், பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோல் என்பது. விலைவாசி அதிகரிக்கும் போதுதான் கவலைப்பட வேண்டும், குறைந்தால் நல்லதுதானே என்ற கேள்வி நம்மைக் குடைவது இயல்பு.

இன்னொரு குழப்பமும் கூடவே வருகிறது. விலைவாசி விகிதம் முப்பது வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அப்போது எட்டணாவுக்கு வாங்கிய பொருளை இப்போது நூறு ரூபாய் போட்டாலும் வாங்க முடியவில்லை. யார் காதில் பூவைச் சுற்றுகிறார்கள்? இந்தக் குழப்பம் கலந்த கோபமும் நியாயமானதே.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பணவீக்கம் என்பது விலைவாசியின் அளவுகோல் அல்ல. அது தற்போதையை விலைவாசிக்கும், இதே கால கட்டத்தில் சென்ற ஆண்டு நிலவிய விலைவாசிக்குமான ஒப்பீடு. அவ்வளவுதான். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் இந்த ஆண்டு 110 க்கு விற்றால் விலைவாசி ஏற்றம் - அதாவது பணவீக்கம் - பத்து சதவீதம் என்று பொருள்.

ஐந்து வருடத்திற்கு முன் 10 ரூபாய்க்கு விற்ற பொருள் சென்ற வருடம் 100 ரூபாய். இந்த வருடமும் அதே நூறு ரூபாய். அப்படியானால் இந்த ஆண்டிற்கான பணவீக்கம் 0 விழுக்காடு. அதாவது ஓராண்டு காலத்தில் விலைவாசி ஏற்றம் நிகழவில்லை. அவ்வளவுதானே ஒழிய ஐந்து வருடத்திற்கு முன் இருந்த அதே 10 ரூபாய்க்கு விலைகள் இறங்கி விட்டதாக நினைத்துக்கொள்ளக் கூடாது.

பணவீக்க விகிதம் பூஜ்ஜியத்தை நோக்கி வருகிறது என்றால் போன வருடம் என்ன விலைக்குக் கிடைத்ததோ அதே விலைக்குக் கிடைக்கிறது என்றுதான் பொருளே ஒழிய விலைவாசி குறைந்து விட்டது என்றோ அல்லது அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய விலைக்கே திரும்பிச் சென்று விட்டது என்றோ பொருளல்ல. 30 அல்லது 34 ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை இதே மாதிரி குறைவான பணவீக்கம் - அந்த வருடத்திற்கும் அதற்கு முந்தைய வருடத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலை - இருந்தது போலும்.

போன வருடம் பணவீக்கம் 13 விழுக்காடு வரையெல்லாம் ஏறியது. இப்போது அது பூஜ்ஜியத்தில் உள்ளதென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய் போட்டு வாங்கிய பொருளை போன வருடம் போலவே இப்போதும் 113 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். தொடர்ச்சியாக ஐந்தாறு ஆண்டுகள் விஷம் போல ஏறிய ஒரு ஆண்டு மட்டும் ஏறாமல் விட்டாலோ அல்லது சற்று குறைந்தாலோ அதனால் ஏற்படும் நிகர மாற்றம் விலைவாசி இறக்கமாக இருக்கப் போவதில்லை.

அப்படியென்றால் எதற்காக பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கிழே செல்வதைக் கண்டு வல்லுனர் சமூகம் விசனப்படுகிறது?

பணவீக்கம் என்பது வருடாந்திர விலைவாசி ஏற்றத்தின் குறியீடு. வேறு விதமாகச் சொன்னால் பணத்தின் மதிப்பு காலப் போக்கில் குறைவதன் குறியீடு. அதாவது கரன்சி நோட்டை அப்படியே வைத்திருப்பதை விட வேறு எதிலாது முதலீடு செய்யலாம் அல்லது வாங்கி அனுபவிக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக் காரணமானது.

அப்படி இல்லாமல் பொருட்களில் விலை காலப் போக்கில் குறைகிறது எனக் கருதுவோம். போன வருடத்தை விட இந்த வருடம் குறைகிறது. இந்த வருடத்தை விட வரும் வருடம் இன்னும் குறையும் என்று நம்புகிறோம் என்ற பட்சத்தில், “நன்றாகக் குறைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் குறையத்தானே போகிறது” என எல்லோரும் பணத்தைப் பூட்டி வைத்துக் கொள்வோம்.

அப்போது நாட்டில் வியாபாரம் மந்தமடையும். அதன் காரணமாக உற்பத்திகள் குறையும். தொழிலாளர்களின் தேவை குறையும். வேலை இழப்புகள் கூடும். அதனால் குடும்பங்களின் வருமானம் குறையும். அதனால் அவர்கள் செய்யும் செலவுகள் குறையும். மறுபடியும் அது பொருட்களின் தேவையைக் குறைக்கும். இப்படியே போனால் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகப் படுத்து விடும்.

வாடிக்கையாளர் தேவை அருகுவதும், அதனால் விலைகள் குறைவதும் - பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போவதும் – நம் நாட்டில் இது வரை நாம் கேள்விப்படாத ஒன்று. ஜப்பானுக்கு அதெல்லாம் புதிதில்லை. அந்த நாட்டில் எதிர்மறையான பணவீக்கம் (deflation) பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் விஷயம்.

ஆக பொருட்களின் ஒட்டுமொத்த விலைகள் தொடர்ச்சியாகக் குறைவது உவப்பானதல்ல என்று உணர்கிறோம். அதே சமயம் விலைவாசி ஏற்றம் அபரிமிதமாக இருக்கக் கூடாது என்றும் ஏற்கிறோம். ஒரு வகையில் மிதமான விலைவாசி ஏற்றம் அவசியமானதே.

அது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் நாம் சொல்லுகிற பணவீக்கம் துல்லியமானதா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. அரசாங்கம் வாரா வாரம் ஒரு விழுக்காட்டைச் சொல்லுகிறது. நாமும் அதை நம்புகிறோம். உண்மையான நிலைமையை பணவீக்கம் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி விவரம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் எழுகிறது.

சராசரி மனிதனை, அவனது தேவைகளை, வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிற காரணிகளை சரியாக வெளிப்படுத்துவதற்கு பணவீக்க எண் தவறி விட்டதென்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக முன் வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

முதலாவதாக முன்னேறிய நாடுகளைப் போல நாம் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணை (CPI – Consumer Price Index) அடிப்படியாகக் கொண்டு பணவீக்கம் கணக்கிடுவதில்லை. நமது கணக்கீட்டுக்கு மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை (WPI – Wholesale Price Index) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

இது மிகப் பெரிய தவறு. இப்போது என்னதான் பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கி விட்டது என்று சொன்னாலும் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணும், மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலையும் குறையவில்லை.

“Pulses and cereals, the two most commonly consumed items, are at 9.97 per cent and 10.12 per cent, respectively. The inflation rate for sugar is at 20.97 per cent,”என்கிறது செய்தி.
நம் நாட்டில் மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை அளவிட 435 பொருட்களின் விலையை எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை பயன்பாட்டு முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

இன்னொரு முக்கியமான சங்கதி பணவீக்கக் கணக்கீட்டில் நாம் பொருட்களின் விலையை (அதுவும் தவறான முறையில்) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நமது செய்யும் செலவில் பொருட்களைப் போலவே சேவைகளும் பிரதான இடம் பெறுகின்றன.

மாறிய பொருளாதாரச் சூழலில் பொருட்களின் தேவையைக் காட்டிலும் சேவைகளின் தேவை பெருகி விட்ட சூழலில், பொருட்களின் விலையேற்றத்தைக் காட்டிலும் சேவைகளின் விலையேற்றம் பெருகிவிட்ட காலத்தில், அவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக விளங்கும் நிலையில் பணவீக்க எண் அதைப் பிரதிபலிப்பதில்லை.
எனக்கு முடிவெட்ட ஐம்பது ரூபாய் ஆகிறது. மூன்று ஆண்டுகளில் என் வீட்டு வாடகை இரு மடங்கு கூடியிருக்கிறது. இரண்டு பேர் நடுத்தரமான உணவகத்தில் திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பினால் 300-400 ரூபாயாவது ஆகிறது.

ஆக மொத்தத்தில், பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாச் சொன்னாலும், இவர்கள் சொல்லுகிற பணவீக்கம் சில காலம் பூஜ்ஜியத்திற்குக் கீழே நிலவும் சூழல் வந்தாலும், அது வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்காத வரை அதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

வெளிப்படையானதும், துல்லியமானதுமானதும், நாமெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்வில் கண்டு உணரக் கூடியதுமான கணக்கீட்டு முறை ஒரு நாள் உருவாகும்.