Monday, November 23, 2009

Best insurance plan

LIC இன் ஜீவன் ஆனந்த் பாலிசி குறித்த பதிவைத் தொடர்ந்து, Term Insurance மற்றும் Endowment Plans குறித்த ஒப்பீடு India Next யாஹூ குழுமத்தில் ஒரு விவாதத்தைக் கிளப்பியது. அதைக் காண இங்கே அழுத்தவும்.

உதிரித் தகவல்:
Endowment திட்டங்களிலேயே கூடுதலாக டெர்ம் பெனிஃபிட் ரைடர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து Term Insurance மற்றும் Endowment Plans ஆகிய இரண்டின் அனுகூலங்களை ஒரு சேரப் பெறலாம். அதைப் பற்றி பின்வரும் பகுதிகளில் காணவிருக்கிறோம்.

Thursday, November 19, 2009

Whole Life பாலிசிகள் . . .

- செல்லமுத்து குப்புசாமி

பாகம் 1
பாகம் 2

கடந்த இரு பகுதிகளில் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றியும், Endowment plans பற்றியும் கண்டோம்.

அதாவது, Endowment பாலிசிகளுக்கு குறிப்பிட்ட கால அளவு இருக்கும். அதற்குள் ரிஸ்க் ஏற்பட்டால் Sum Assured இழப்பீட்டுத் தொகையும், அது வரைக்குமான போன்ஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மாறாக, பாலிசி முதிர்வு எய்தும் வரை பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் முழு Sum Assured + போனஸ் எல்லாம் கிடைக்கும்.

இப்போது இவ்விரு வகையான திட்டங்களைத் தவிர்த்து Whole Life Plans என்ற மூன்றாவது ஒரு பிரிவையும் பார்த்து விடுவோம்.

கிட்டத்தட்ட இது டெர்ம் இன்சூரன்ஸ் போலத்தான். மெச்சூரிட்டி அல்லது முதிர்வு என்பதே கிடையாது. ஆயுட்காலம் முழுவதும் பிரீமியம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு ஆள் பத்து வயதில் பாலிசி எடுத்திருந்தாலும் கூட அவர் 80 வயதில் இறக்கும் போது மட்டுந்தான் அவர் குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும்.

எனினும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து Whole Life பாலிசி வேறுபடத்தான் செய்கிறது.

* டெர்ம் இன்சூரன்ஸில் பிரீமியம் பணம் செலுத்தினால் அவ்வளவுதான். அது திரும்பக் கிடைக்காது. Whole Life திட்டத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை முறித்துக்கொண்டு வெளியே வரலாம். அது வரை செலுத்திய பிரீமியத்தின் ஒரு பகுதி திரும்பக் கொடுத்து விடுவார்கள்.

* டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் மரணத்தின் போது Sum Assured தொகை மட்டுமே கிடைக்கும். Whole Life திட்டத்தில் மரணத்தின் போது Sum Assured + போனஸ் ஆகிய இரண்டும் கிடைக்கும்.

இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் Whole Life திட்டங்களைக் காட்டிலும் Endowment பாலிசிகளே அதிகம் வரவேற்பைப் பெறுகின்றன. அதற்குக் காரணங்கள்..

Endowment பாலிசியில் 10, 15 அல்லது 20 என நிச்சயிக்கப்பட்ட முதிர்வு காலம் உண்டு. அதற்குப் பிறகு பாலிசிதாரரே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் Whole Life இல் மரணத்திற்குப் பிறகுதான் பணம் வரும்.

பல தனியார் பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் Whole Life திட்டங்களையே மார்க்கெட் செய்கின்றன. ஒரு நபர் வாழும் வரை அவரிடமிருந்து பிரீமியம் தொகையைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம் என்பது முக்கியமான காரணம். அதாவது 10 அல்லது 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை அல்லவா!

--
சென்ற பதிவைத் தொடர்ந்து சில பேர் என்னிடம் தெரிவித்த ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

I just thought that the blog regarding insurance is some what misleading, It gives an impression that the returns are excellent compared to other assets.

இது உண்மை. இன்சூசன்ஸ் என்பது முதலீடு அல்ல.

முதலீடு என்றாலே கூடவே ஒரு நிச்சயமற்ற தன்மையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் ஒரே வருடத்தில் நமது முதலீடு இரட்டிப்பாகலாம் அல்லது பாதியாகவும் குறையலாம். அது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

நான் இன்சூரன்ஸை முதலீடு என்று கூறவில்லை. அது ஒரு வகையான சேமிப்பு. ஒரு பாதுகாப்பு.

இந்தியாவில் இன்சூரன்ஸை இன்சூரன்ஸாக மட்டும் மக்கள் அணுகுவதில்லை என்பதாலாயே சேமிப்பு என்ற வடிவில் இங்கு Endowment திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன.

”நான் இறந்து போனால் என் குடும்பத்துக்கு எவ்வளவு வரும் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இன்சூரன்ஸை முதலீடு போலத்தான் அணுகுகிறேன்” – என்று யாராவது சொன்னால் அவர்கள் வேறு எதிலாவது முதலீடு செய்யலாம்.

என்னைக் கேட்டால் அத்தனை பேரும் முதலீடு செய்ய வேண்டும். அதில் உள்ள நெளிவு சுழிவுகளையும், நிச்சயமற்ற தன்மையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். அதற்காக இன்சூரன்ஸ் கூடவே கூடாது என்று எண்ணி விட வேண்டாம்.

Butterfly emerges from caterpillar. எட்டாம் வகுப்புக்குப் பிறகுதான் ஒன்பதாம் வகுப்பு. சேமிப்புக்குப் பிறகுதான் முதலீடு. இன்சூரன்ஸ் என்பது சேமிப்பையும் தாண்டி பாதுகாப்பு என்ற நோக்கில் அணுக வேண்டியது.

வீட்டுக்கு பூட்டு வாங்குவதைப் போல, தலைக்கு ஹெல்மெட் வாங்குவதைப் போல மனிதனுக்கு ஆயுள் காப்பீடு முக்கியம். ஐநூறு ரூபாய் போட்டு ஹெல்மெட் வாங்கினால் பத்து வருடத்தில் என் பணம் எத்தனை மடங்கு பெருகும் என்று கேட்டால் நன்றாகவா இருக்கும்?

ஏன் இன்சூரன்ஸ் வேண்டும் என்பது அடுத்த பதிவிலும் ..

Wednesday, November 11, 2009

போனஸ் தரும் இன்சூரன்ஸ்

- செல்லமுத்து குப்புசாமி


முந்தைய பதிவில் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றிப் பார்த்தோம். பாலிசி அமலில் இருக்கும் போது பாலிசிதாரர் இறந்தால் முழு Sum Assured தொகையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால் பிரீமியம் தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வைத்துக்கொள்ளும் என்றாலும் கூட அந்தத் தொகையை வைத்தே இறந்தவர்களின் குடும்பத்திற்கு செட்டில் செய்கிறார்கள்.

இப்படியாக்கப்பட்ட டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் தொகை மிகக் குறைவாக இருக்கும். எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பைச் சரி செய்ய மட்டுமே இது பயன்படுவதால் இத்தகையை பிரீமியத்தை ரிஸ்க் பிரீமியம் என்கிறார்கள்.

Risk premium is enough to pay the death claim in case of term assurance

ஆனால் உண்மையில் நாம் எதிர்பார்ப்பது வேறு. நான் கட்டும் பிரீமியம் இறப்பின் போது பெரும் தொகையைத் திரும்பத் தருவதாகவும் இருக்க வேண்டும். மாறாக, பாலிசி காலம் முடிந்து உயிரோடு இருந்தாலும் நாம் கட்டிய பிரீமியம் தொகை நாம் கட்டியதைக் காட்டிலும் அதிக அளவில் திரும்பக் கிடைக்க வேண்டும்.

அதாவது, இன்சூரன்ஸ் பாலிசிகள் இங்கே இன்சூரன்ஸ் தேவையைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சேமிப்பு உபகரணமாகச் செயல்படுவதே அதிகம். சில பேர் சேமிப்பு என்பதையும் கடந்து ‘முதலீடு’ என்ற ரீதியில் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள்.

இத்தகையை பாலிசிகள் Endowment பாலிசிகள் என அறியப்படுகின்றன. நம் நாட்டில் பெரும்பாலான இன்சூரன்ஸ் திட்டங்கள் இத்தகையவையே.

உதாரணத்துக்கு LIC இல் ‘ஜீவன் ஸ்ரீ’ என்றொரு பாலிசி. இப்போது அதை மாற்றி விட்டார்கள். பிரீமியமாக வருடம் ரூ 35,000 கட்ட வேண்டும். அப்படிக் கட்டிக்கொண்டு வருகையில் நான் இறந்திருந்தால் ரூ 5 இலட்சம் + போனஸ் (இதைப் பற்றி பிறகு பேசுவோம்) என் குடும்பத்திற்குக் கிடைத்திருக்கும். இப்படியே 12 ஆண்டுகள் கட்டுவேன்.

பாலிசி காலம் முடிந்த பிறகு நான் உயிரோடு உள்ளேன். அப்போது பாலிசி முதிர்ச்சி எய்தி விட்டது. அதாவது Maturity.

இப்போது LIC எனக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கும்?

1) எனது Sum assured ரூ 5 இலட்சம் +
2) பாலிசி காலத்தில் வருடா வருடம் வழங்கப்பட்ட போனஸ் +
3) போனல் முடிவில் வழங்கப்படும் கூடுதல் போனஸ் +
4) உத்திரவாத போனஸ் +
5) விசுவாச (Loyalty) போனஸ்

எல்லாம் சேர்ந்து எனக்கு 14 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை கணிசமான ஒரு தொகை கிடைக்கும்.

ஆக எண்டோவ்மெண்ட் பாலிசிகள் முதிர்ச்சி எய்தும் போது பெரிய தொகை ஒன்றை ஈட்டித் தருகின்றன. நாம் போட்ட பணத்தில் மதிப்பு பெரும்பாலும் வங்கிகள் தருகின்ற வட்டியைக் காட்டிலும் கூடுதலான வேகத்தில் பெருகியிருக்கும்.

எனினும் எதற்காக, எப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போனஸ் அளிக்கின்றன என்று தெரிந்து கொள்வது முக்கியம்.

பாலிசிதாரர்களிடம் வசூலிக்கும் பிரீமியம் தொகையில் ஒரு சிறு விழுக்காடு death claims அனைத்தையும் செட்டில் செய்யப் போதுமானது. மீதமுள்ள தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதுகாப்பான, அதே நேரம் இலாபகரமான வகையில் முதலீடு செய்கின்றன. அப்படி முதலீடு செய்யும் பணம் இலாபத்தை ஈட்டித் தருகிறது.

இந்த இலாபம் இன்சூரன்ஸ் கம்பெனி ஈட்டியதுதான் என்றாலும் அதற்குச் சொந்தமில்லை. ஏனென்றால் முதலீடு செய்யப்பட்டது எல்லாமே பாலிசிதாரர்களின் பணம். ஆகையால் அவ்வாறு முதலீடு செய்து ஈட்டிய இலாபத்தை பாலிசிதாரர்களுக்கே பகிர்ந்து கொடுப்பதுதான் முறை. முறை என்பதையும் தாண்டி சட்டமும் அதை வலியுறுத்துகிறது.

இங்குதான் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும், இன்சூரன்ஸ் பாலிசி வாயிலாக சேமிப்பு/முதலீடு செய்வதற்கும் இடையேயான வேறுபாடு புலனாகிறது.

உதாரணத்திற்கு வங்கியொன்று நமது டெபாசிட் பணத்தை 6 % வட்டிக்கு வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தை இன்னொருவருக்கு 12 % வட்டிக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வித்தியாசம் வங்கிக்கு இலாபத்தை அளிக்கிறது.

இருந்தாலும் இந்த இலாபத்தை டெபாசிட் செய்வதரிடம் வங்கி பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. வங்கிக்குக் கிடைக்கும் இலாபம் முழுவதும் அதன் முதலாளிகளுக்கு (அதாவது ஷேர்ஹோல்டர்களுக்கு)

இன்சூரன்ஸில் அப்படிக் கிடையாது. உதாரணத்திற்கு LIC ஐ எடுத்துக் கொள்வோம். கடந்த ஆண்டு அந்த நிறுவனம் செய்த முதலீடுகள் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலே. அது அரசாங்கத்திற்குக் கடன் கொடுத்ததாக இருக்கலாம் அல்லது பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்ததாக இருக்கலாம் அல்லது நெடுஞ்சாலை, அணைக் கட்டுகள், முன் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ததாக இருக்கலாம் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்ததாக இருக்கலாம்.

இத்தகைய முதலீடு ஈட்டித் தரும் இலாபம் முழுவதும் LIC இன் முதலாளிக்கு (LIC பொதுத்துறை நிறுவனம் ஆகையால் அதன் முதலாளி இந்திய அரசாங்கம் ஆகும்) உரித்தானதல்ல.

இன்சூரன்ஸ் தொழிலில் ஈட்டும் இலாபத்தின் 90 சதவீதம் அதன் பாலிச்தாரர்களுக்கு போனஸ் வடிவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது IRDA (The Insurance Regulatory and Development Authority) விதிமுறை.

இந்த போனஸ் தொகை எல்லாம் முதிர்வின் போது மட்டுந்தான் கிடைக்கும் என்றில்லை. உதாரணத்துக்கு ரூ 5 இலட்சம் Sum Assured கொண்ட 15 வருட பாலிசியில் 5 ஆம் வருடமே இறந்து போனால் கூட 5 இலட்சம் + பாலிச்தாரர் இறக்கும் வரையிலான போனஸ் தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து கிடைக்கும்.

தொடரும் . . .

Tuesday, November 03, 2009

இன்சூரன்ஸ் தொடர் - பாகம் 1

இன்சூரன்ஸ் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மெகா ஹிட் ஆகியிருக்கும் இன்றைய சூழலில் இது பொருத்தமான ஒரு செயலாகவே அமையும். ஒரு தேர்ந்த திரைக்கதை மாதிரி விறுவிறுப்பாக இல்லாவிடினும் இயன்ற அளவுக்கு கோர்வையாகத் தரும் முயற்சியைத் துவங்குகிறேன்.

**
தீபாவளிக்கு ஊருக்குப் போக எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவேயில்லை. அதனால் காரில் செல்வதென்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். சென்னையின் நகர எல்லையைத் தாண்டி வெளியே நீண்ட தூரம் பயணித்ததென்று பார்த்தால் ஒரு முறை பாண்டிச்சேரி சென்று வந்ததுதான். அதை விட அதிகத் தொலைவு காரில் பயணித்தது கிடையாது.

ஆகையால் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பயணம் என்பதைக் எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டியிருந்தது. முந்தைய நாளே பவர் ஸ்டியரிங் ஆயிலும், ரேடியேட்டரில் தண்ணீரும் ஊற்றி வைத்தாயிற்று. கூடவே ஜாக்கி, அதை ஆபரேட் செய்ய ஸ்பேனர் எல்லாம் தேடி எடுத்து வைத்துக்கொண்டோம். ஸ்டெப்னி டயர் நல்ல கண்டிஷனில் உள்ளதா என்றும் உறுதி செய்துகொண்டோம்.

இது பள்ளிக்கூட நாட்களை எனக்கு நினைவில் கொண்டு வந்தது. தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று பேனா எடுத்து வைப்பது, அவற்றில் மையிட்டு நிரப்பிக் கொள்வது எல்லாம் ஞாபகத்தில் வந்து போனது.

பரீட்சை எழுதுகையில் ஒரு பேனா பழுதானாலும் இன்னொரு பேனாவை வைத்து ஜமாய்த்து விடலாம் - எழுதுவதற்கு சரக்கு மட்டும் இருந்தால். அதே போல வழியில் ஏதாவது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதமானாலும் ரயிலைத் தவறவிடாமல் இருப்பதற்காகவே முன் கூட்டியே கிளம்புகிறோம்.

வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பதில் தவறேதுமில்லை. அப்படி இல்லாமல் போனால்தான் தவறு. நானெல்லாம் பத்தரை மணி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒன்பதுக்கே சென்ட்ரல் சென்றடைகிற ஆள்.

இன்சூரன்ஸின் அடிப்படைத் தத்துவமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. எதிர்பாராத நிகழ்வு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. சுனாமி ஏற்படுவதையோ, பஞ்சம் ஏற்படுவதையோ அல்லது கார் பஞ்சர் ஆவதையோ நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் அப்படி ஒரு துரதிர்ஷ்ட நிகழ்வு நடக்கும் போது அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளின் தாக்கத்தை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் பாருங்கள் இதில் ஒரு சிக்கல். கார் பஞ்சர் ஆனால் மாற்று டயரை மாட்டி ஓட்டி விடலாம். விபத்தாகி காரே ஒட்டு மொத்தமாக நொறுங்கிப் போனால் என்னா செய்வது? ஸ்டெப்னி டயர் மாதிரி ஸ்டெப்னி கார் சாத்தியமில்லை.

வேறு வழி? நாம் காருக்கு இன்சூர் செய்திருந்தால் காரை ரிப்பேர் செய்வதற்கோ அல்லது அதை பயன்படுத்தவே முடியாது எனும் பட்சத்தில் வேறொரு கார் வாங்குவதற்கோ ஆகும் செலவை இன்சூரன்ஸ் கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.

இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மாருதி 800 வண்டியை தென்னந்தோப்புக்குள் நிறுத்தி வைத்திருக்க அதன் மீது தேங்காய் உடைந்து கண்ணாடி காலி. ஃபுல் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்ததால் அதை மாற்றுவதற்கு ஆன செலவு எல்லாத்தையும் இன்சூரன்ஸில் வசூல் செய்து விட்டார்.

இன்னொருவர் தனது காரை பாலத்தில் பக்கச் சுவர் மீது மோதி விட்டார். காருக்கு பலத்தை சேதம். அறுபதாயிரம் ஆச்சு. அவர் third party insurance (அதாவது இவர் யார் மீதாவது காரை இடித்து அடி பட்டவர்களுக்கு ஏதாவது நேர்ந்து அதனால் ஆகும் செலவுக்கு மாத்திரம் இன்சூரன்ஸ்) மட்டும் போட்டு வைத்திருந்த காரணத்தால் எல்லாச் செலவையும் அவரே ஏற்க வேண்டியானது.

ஃபுல் இன்சூரன்ஸுக்கும், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸுக்கும் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் வேறுபடுகிறது.

பிரீமியம் என்பது இழப்பு ஏற்படும் போது நமது இழப்பை இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொண்டு ஈடுகட்டுவதற்கு முன் கூட்டியே நாம் கொடுக்கும் விலை. அதாவது இன்சூரன்ஸ் கவரேஜை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். அந்த விலைதான் பிரீமியம்.

உதாரணத்துக்கு ஒரு ஊரில் 400 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு 20,000 ரூபாய். ஒரு வருடத்தில் நான்கு வீடுகள் தீப்பிடுத்து முற்றிலும் எரிந்து போகின்றன. ஆனால் எந்த வீடு எரியும் என்பதைச் சொல்ல முடியாது. அதனால் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள்.

மொத்தமாக நாலு வீடு எரிந்து போவதால் ஏற்படும் இழப்பு 4 X 20,000 = ரூ 80,000. இந்தப் பணம் இருந்தால் அந்த நாலு குடும்பத்தினரும் தமது வீடுகளை மீள் நிர்மாணம் செய்துகொள்ளலாம். அதனால் வருடத் தொடக்கத்தில் வீடொன்றுக்கு ரூ 200 வசூல் செய்கிறார்கள். 400 வீட்டுக்கு 80,000 ஆச்சா?

அந்த 400 பேரில் யார் வீட்டுக்கு பாதகம் வந்தாலும் அவர்களது 20,000 ரூபாய் இழப்பு வெறும் 200 ரூபாய் பணம் போட்டதால் சரி செய்யப்படுகிறது. வீட்டுக்கு ஆபத்து வரவில்லை என்றால் மிச்சமுள்ள 398 பேருக்கும் 200 ரூபாய் இழப்புதான்.

இன்சூனஸின் அடிப்படை இதுதான். 20,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டை இன்சூர் செய்ய ஒவ்வொருவரும் கொடுக்கும் விலை ரூ 200. அந்த விலைதான் பிரீமியம் எனப்படுகிறது.

சுருங்கச் சொன்னால் ஒரு ஆளுக்கு ஏற்படும் இழப்பை அல்லது பாதிப்பை பல பேர் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஏற்பாடுதான் இன்சூரன்ஸ்.

யார் மீதாவது காரை மோதி செலவு வைத்தால் எனக்கு இலாபம். இல்லாவிட்டால் எனது பிரீமியத் தொகை செலவுதான்.

இதே கான்செப்ட் ஆயுள் காப்பீட்டுக்கும் பொருந்துகிறது. ஒரு ஊரில் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 3 பேர் இறக்கக் கூடும் என்பது கணிப்பு. ஒரு ஆள் மரணமடைவதால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ 10,000 என வைத்துக் கொள்வோம்.

மொத்தமாக மூன்று குடும்பத்தின் இழப்பையும் ஈடு கட்ட ரூ 30,000 ஆகிறது. ஊரில் உள்ள ஆயிரம் பேரில் தலைக்கு முப்பது ரூபாய் முன் கூட்டியே வசூல் செய்து வைத்துக்கொண்டால் முப்பதாயிரம் ஆயிற்று.

ஆக இங்கே பத்தாயிரம் ரூபாய் இழப்பைச் சரி செய்ய ஒவ்வொரு ஆளும் முப்பது ரூபாய் போட்டு தங்களை இன்சூர் செய்கிறார்கள்.

எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டும் போது கிடைக்கும் இழப்பீடு ரூ 10,000 அல்லவா? இதத்தான் Sum Assured அல்லது SA என்று இன்சூரன்ஸ் மொழியில் குறிக்கிறார்கள்.

பத்தாயிரம் ரூபாய் Sum Assured க்கு ஒருவர் செலுத்து ஆண்டு பிரீமியம் ரூ 30. ஆனால் இதில் ஒரு சிக்கல்.

செத்துப் போனால் மட்டுந்தான் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும். ஆண்டு முடிவில் உயிரோடு இருக்கும் பட்சத்தில் 30 ரூபாய் பிரீமியம் போனதுதான். வருடாவருடம் இப்படி ஒரு தொகையை பிரீயம் தொகையை செலுத்திக்கொண்டே வர வேண்டியிருக்கும்.

இப்படியாகப்பட்ட ஒரு ஏற்பாடு டெர்ம் இன்சூரன்ஸ் (Term insurance) எனப்படுகிறது.

அப்படியானால் பத்து வருடம் இடைவிடாமல் பிரீமியம் என்ற பெயரில் பணம் போட்டால் முடிவில் தனக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை.

”பிரீமியம் கட்டுவேன். இடையே எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் எனது குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். ஆண்டவன் புண்ணியத்தில் பத்து வருடம் கழித்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நான் போட்ட பணம் திரும்பக் கிடைத்து விட வேண்டும். முடிந்தால் வட்டி, போனல் எல்லாம் சேர்த்து” – இப்படி ஒரு சிந்தனை வரும்.

பெரும்பாலான திட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அதற்கு என்ன பெயர் தெரியுமா?

அடுத்த பதிவில்..

Friday, October 16, 2009

இன்சூரன்ஸ் தொடர் அறிவிப்பு

அன்பர்களுக்கு,

இந்த வலைப்பூவில் பல காலமாக பதிவுகள் எதுவும் எழுதப்படவில்லை. பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகளை சமூகச் சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளி விட்டதே இதற்குக் காரணம்.

இன்சூரன்ஸ் குறித்த தொடர் ஒன்றை எளிமையாக இங்கே எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். சில ஆங்கிலச் சொற்களை அப்படியே கையாள்வதாகவும் உத்தேசம். குறிப்பாக இன்சூரன்ஸ் என்பதற்கு ஈட்டுறுதி எனச் சொல்வதோ அல்லது அதற்குப் பதிலாக வாக்குறுதி, உத்திரவாதம் என தான்தோன்றித் தனமாக தமிழாக்கம் செய்வதோ வேண்டாம் எனவும் கருதுகிறேன்.

வரும் வாரங்களில் நேரம் கிடைக்கும் போது இதைச் செய்வேன்.

Friday, July 17, 2009

லஞ்ச் வித் வாரன் பஃபட்

- செல்லமுத்து குப்புசாமி

உங்களுக்கு வாரன் பஃபெட் பற்றித் தெரிந்திருக்கும். அவர் உலகிலேயே முதன்மையான, திறமையான பங்கு முதலீட்டாளர். உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர்; 78 வயது இளைஞர். தன் செல்வத்தின் 85 சதவீதத்தை அறக்கட்டளைக்கு தானமாகக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

சமீப ஆண்டுகளில் அவர் இம்மாதிரியான காரியங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாகக் கலந்து கொள்ளாமல் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கும் வாரனை தனிப்பட்ட முறையில் சந்திப்பது அரிது. அதிலும் அவரோடு சேர்ந்து மதிய உணவு கொள்வதென்றால் நிஜமாலுமே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்!

பங்குச் சந்தை முதலீட்டின் பிதாமகர் வாரன் பஃபெட்டோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு போட்டா போட்டி. அந்த வாய்ப்பை ஈ-பே மூலம் ஏலத்தில் எடுக்க வேண்டும். அப்படி ஏலத்தில் கிடைக்கும் தொகையை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது வாரனின் பழக்கம்.

இந்த முறை அந்த வாய்ப்பை வென்றவர் ஒரு சீனர். அதற்கு அவர் கொடுத்த விலை 2,110,100 டாலர். நம்ம ஊர் பணத்தில் பத்துக் கோடிக்கும் மேலே. ஒரு கிழவனோடு சோறு தின்ன இவ்வளவு செலவழிக்கும் அளவுக்கு ஒரு சீனாக்காரர் தயாராக இருக்கிறார் என்றால் வாரன் பஃபெட் உலகலாவிய அளவில் எவ்வளவு செல்வாக்கும், ஆளுமையும், மதிப்பும் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது.

37 வயதாகும் அந்த சீன பிஸ்னஸ்மேன் பெயர் Zhao Danyang. உலகமே பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் போது அவ்வளவு பணத்தைக் கொடுத்து போன மாதத்தின் கடைசி வாரம் வாரன் பஃபெட்டுடன் லஞ்ச் சாப்பிட்டார்.

இதில் வேடிக்கை, அவர் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்ததுதான். “நாளை அவரைச் சந்திக்கும் போது WuMart என்ற சீன சில்லறை வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு ஆலோசனை கூறுவேன் என்று லஞ்சுக்கு முந்தைய நாள் அவர் பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார். என்ன ஷேர் வாங்கலாம் என்று வாரனுக்கு டிப்ஸ் கொடுப்பதும் திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதும் ஒன்றுதான்.

உடன் இணைந்து சாப்பிடும் போது அந்த யோசனையை Zhao வாரனுக்குச் சொன்னாரோ அல்லது வாரன் அதில் முதலீடு செய்வதாக ஒத்துக்கொண்டாரா தெரியாது. ஆனால் அவர் சீனாவுக்குத் திரும்பிய போது WuMart பங்குகள் 25 சதவீதம் உயர்ந்திருந்தன. ஷேர் விலை ஏறியதால் அதில் Zhao போட்டிருந்த முதலீட்டின் மதிப்பு 16 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றம் கண்டது.

வெறும் 2.1 மில்லியன் போட்டு 16 மில்லியன் எடுத்தார் அந்த பிசினஸ்மேன். சொல்லுங்கள், இதுதானே வியாபார நுணுக்கம்!

Tuesday, April 07, 2009

பணவீக்கமும், பதற்றமும்!

- செல்லமுத்து குப்புசாமி

பணம் வீங்கும் விதம் என்ற தலைப்பில் உயிரோசை இணைய வார இதழுக்கு எழுதியது.

முன்பெல்லாம் அரசியல் வட்டாரங்களிலும், அறிவு ஜீவிகள் மட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு விவாதம் நடக்கும். விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறதே என்ற கவலை அந்த விவாதங்களின் மையக் கருத்தாக இருக்கும். ஆனால் இப்போது விவாதம் வேறு திசையில் நகர்கிறது. நமக்கு விவரம் தெரிந்து இந்த மாதிரி நடந்ததில்லை.

மார்ச் 14 ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் 0.44 சதவீதமாக நிலவிய பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த அளவு குறைவான பணவீக்கம் நிலவியதில்லை - இது செய்தி.

பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போனாலும் போகலாம் என்று கருதப்படுகிறது. அது குறித்து பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலைவாசியின் வீழ்ச்சி ஏற்படுத்தப் போகும் பாதகங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். எனினும் பூஜ்ஜியத்திற்குக் கீழே பணவீக்கம் சென்றாலும், அதே நிலை நீண்ட நாள் தொடராது என்று ஆறுதல் அடைகிறார்கள் - இது விவாத வியாக்கியானம்.

நமக்கெல்லாம் தெரியும், பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோல் என்பது. விலைவாசி அதிகரிக்கும் போதுதான் கவலைப்பட வேண்டும், குறைந்தால் நல்லதுதானே என்ற கேள்வி நம்மைக் குடைவது இயல்பு.

இன்னொரு குழப்பமும் கூடவே வருகிறது. விலைவாசி விகிதம் முப்பது வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அப்போது எட்டணாவுக்கு வாங்கிய பொருளை இப்போது நூறு ரூபாய் போட்டாலும் வாங்க முடியவில்லை. யார் காதில் பூவைச் சுற்றுகிறார்கள்? இந்தக் குழப்பம் கலந்த கோபமும் நியாயமானதே.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பணவீக்கம் என்பது விலைவாசியின் அளவுகோல் அல்ல. அது தற்போதையை விலைவாசிக்கும், இதே கால கட்டத்தில் சென்ற ஆண்டு நிலவிய விலைவாசிக்குமான ஒப்பீடு. அவ்வளவுதான். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் இந்த ஆண்டு 110 க்கு விற்றால் விலைவாசி ஏற்றம் - அதாவது பணவீக்கம் - பத்து சதவீதம் என்று பொருள்.

ஐந்து வருடத்திற்கு முன் 10 ரூபாய்க்கு விற்ற பொருள் சென்ற வருடம் 100 ரூபாய். இந்த வருடமும் அதே நூறு ரூபாய். அப்படியானால் இந்த ஆண்டிற்கான பணவீக்கம் 0 விழுக்காடு. அதாவது ஓராண்டு காலத்தில் விலைவாசி ஏற்றம் நிகழவில்லை. அவ்வளவுதானே ஒழிய ஐந்து வருடத்திற்கு முன் இருந்த அதே 10 ரூபாய்க்கு விலைகள் இறங்கி விட்டதாக நினைத்துக்கொள்ளக் கூடாது.

பணவீக்க விகிதம் பூஜ்ஜியத்தை நோக்கி வருகிறது என்றால் போன வருடம் என்ன விலைக்குக் கிடைத்ததோ அதே விலைக்குக் கிடைக்கிறது என்றுதான் பொருளே ஒழிய விலைவாசி குறைந்து விட்டது என்றோ அல்லது அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய விலைக்கே திரும்பிச் சென்று விட்டது என்றோ பொருளல்ல. 30 அல்லது 34 ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை இதே மாதிரி குறைவான பணவீக்கம் - அந்த வருடத்திற்கும் அதற்கு முந்தைய வருடத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலை - இருந்தது போலும்.

போன வருடம் பணவீக்கம் 13 விழுக்காடு வரையெல்லாம் ஏறியது. இப்போது அது பூஜ்ஜியத்தில் உள்ளதென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய் போட்டு வாங்கிய பொருளை போன வருடம் போலவே இப்போதும் 113 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். தொடர்ச்சியாக ஐந்தாறு ஆண்டுகள் விஷம் போல ஏறிய ஒரு ஆண்டு மட்டும் ஏறாமல் விட்டாலோ அல்லது சற்று குறைந்தாலோ அதனால் ஏற்படும் நிகர மாற்றம் விலைவாசி இறக்கமாக இருக்கப் போவதில்லை.

அப்படியென்றால் எதற்காக பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கிழே செல்வதைக் கண்டு வல்லுனர் சமூகம் விசனப்படுகிறது?

பணவீக்கம் என்பது வருடாந்திர விலைவாசி ஏற்றத்தின் குறியீடு. வேறு விதமாகச் சொன்னால் பணத்தின் மதிப்பு காலப் போக்கில் குறைவதன் குறியீடு. அதாவது கரன்சி நோட்டை அப்படியே வைத்திருப்பதை விட வேறு எதிலாது முதலீடு செய்யலாம் அல்லது வாங்கி அனுபவிக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக் காரணமானது.

அப்படி இல்லாமல் பொருட்களில் விலை காலப் போக்கில் குறைகிறது எனக் கருதுவோம். போன வருடத்தை விட இந்த வருடம் குறைகிறது. இந்த வருடத்தை விட வரும் வருடம் இன்னும் குறையும் என்று நம்புகிறோம் என்ற பட்சத்தில், “நன்றாகக் குறைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் குறையத்தானே போகிறது” என எல்லோரும் பணத்தைப் பூட்டி வைத்துக் கொள்வோம்.

அப்போது நாட்டில் வியாபாரம் மந்தமடையும். அதன் காரணமாக உற்பத்திகள் குறையும். தொழிலாளர்களின் தேவை குறையும். வேலை இழப்புகள் கூடும். அதனால் குடும்பங்களின் வருமானம் குறையும். அதனால் அவர்கள் செய்யும் செலவுகள் குறையும். மறுபடியும் அது பொருட்களின் தேவையைக் குறைக்கும். இப்படியே போனால் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகப் படுத்து விடும்.

வாடிக்கையாளர் தேவை அருகுவதும், அதனால் விலைகள் குறைவதும் - பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போவதும் – நம் நாட்டில் இது வரை நாம் கேள்விப்படாத ஒன்று. ஜப்பானுக்கு அதெல்லாம் புதிதில்லை. அந்த நாட்டில் எதிர்மறையான பணவீக்கம் (deflation) பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் விஷயம்.

ஆக பொருட்களின் ஒட்டுமொத்த விலைகள் தொடர்ச்சியாகக் குறைவது உவப்பானதல்ல என்று உணர்கிறோம். அதே சமயம் விலைவாசி ஏற்றம் அபரிமிதமாக இருக்கக் கூடாது என்றும் ஏற்கிறோம். ஒரு வகையில் மிதமான விலைவாசி ஏற்றம் அவசியமானதே.

அது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் நாம் சொல்லுகிற பணவீக்கம் துல்லியமானதா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. அரசாங்கம் வாரா வாரம் ஒரு விழுக்காட்டைச் சொல்லுகிறது. நாமும் அதை நம்புகிறோம். உண்மையான நிலைமையை பணவீக்கம் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி விவரம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் எழுகிறது.

சராசரி மனிதனை, அவனது தேவைகளை, வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிற காரணிகளை சரியாக வெளிப்படுத்துவதற்கு பணவீக்க எண் தவறி விட்டதென்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக முன் வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

முதலாவதாக முன்னேறிய நாடுகளைப் போல நாம் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணை (CPI – Consumer Price Index) அடிப்படியாகக் கொண்டு பணவீக்கம் கணக்கிடுவதில்லை. நமது கணக்கீட்டுக்கு மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை (WPI – Wholesale Price Index) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

இது மிகப் பெரிய தவறு. இப்போது என்னதான் பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கி விட்டது என்று சொன்னாலும் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணும், மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலையும் குறையவில்லை.

“Pulses and cereals, the two most commonly consumed items, are at 9.97 per cent and 10.12 per cent, respectively. The inflation rate for sugar is at 20.97 per cent,”என்கிறது செய்தி.
நம் நாட்டில் மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை அளவிட 435 பொருட்களின் விலையை எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை பயன்பாட்டு முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

இன்னொரு முக்கியமான சங்கதி பணவீக்கக் கணக்கீட்டில் நாம் பொருட்களின் விலையை (அதுவும் தவறான முறையில்) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நமது செய்யும் செலவில் பொருட்களைப் போலவே சேவைகளும் பிரதான இடம் பெறுகின்றன.

மாறிய பொருளாதாரச் சூழலில் பொருட்களின் தேவையைக் காட்டிலும் சேவைகளின் தேவை பெருகி விட்ட சூழலில், பொருட்களின் விலையேற்றத்தைக் காட்டிலும் சேவைகளின் விலையேற்றம் பெருகிவிட்ட காலத்தில், அவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக விளங்கும் நிலையில் பணவீக்க எண் அதைப் பிரதிபலிப்பதில்லை.
எனக்கு முடிவெட்ட ஐம்பது ரூபாய் ஆகிறது. மூன்று ஆண்டுகளில் என் வீட்டு வாடகை இரு மடங்கு கூடியிருக்கிறது. இரண்டு பேர் நடுத்தரமான உணவகத்தில் திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பினால் 300-400 ரூபாயாவது ஆகிறது.

ஆக மொத்தத்தில், பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாச் சொன்னாலும், இவர்கள் சொல்லுகிற பணவீக்கம் சில காலம் பூஜ்ஜியத்திற்குக் கீழே நிலவும் சூழல் வந்தாலும், அது வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்காத வரை அதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

வெளிப்படையானதும், துல்லியமானதுமானதும், நாமெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்வில் கண்டு உணரக் கூடியதுமான கணக்கீட்டு முறை ஒரு நாள் உருவாகும்.