Wednesday, December 24, 2008

சத்யம் - நிஜ முகம்

- செல்லமுத்து குப்புசாமி

உலக வங்கி சத்யம் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இயிரோசை இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்கிறேன்.

*********************
சென்ற வாரம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு கரும் பக்கத்தை எழுதுவதற்கு முயன்று தோற்றுப் போயுள்ளது. 'சத்யம்' என்ற வட மொழிக்கு மாற்றாக வழங்கப்படும் 'உண்மை, நீதி, நேர்மை' ஆகிய சொற்களை எல்லாம் சத்யம் கம்யூட்டர்ஸ் பரிகாசம் செய்துள்ளது. பங்குதாரர்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தலைமை நிர்வாகிகள் கம்பெனியைச் சூறையாடுவதில் மூன்றாந்தர நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான சத்யம் நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனென்றால் வெளிப்படையான நிர்வாகம் இல்லாத இந்திய நிறுவனங்கள் போலன்றி கார்ப்பரேட் கண்ணியம் (corporate governance) அளவுகோலில் மிக உயரே நிற்பவையாகவும், முதலீட்டாளர் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவையாகவும் மென்பொருள் நிறுவனங்கள் கருதப்பட்டு வந்தன. குறிப்பாக சத்யம் நிறுவனத்தின் கார்ப்பரேட் கண்ணியம் சர்வதேச அளவில் வெகுவாகப் போற்றப்பட்டது. அதற்காக Golden Peacock Global Award விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அவ்வளவு நம்பிக்கை இருந்ததால் தானோ என்னவோ சிறு முதலீட்டாளர்களையும், நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கம் செலுத்தாத பெரு முதலீட்டாளர்களையும் ஏமாந்த சோனகிரி என்று சத்யம் நிர்வாகம் முடிவு செய்து விட்டது போலிருக்கிறது.

இந்தியச் சூழலில் கார்ப்பரேட் கண்ணியம் எப்போதுமே வெகு கீழே இருப்பதாகவே உணரப்பட்டு வந்துள்ளது. ஃபேமிலி பிசினஸ் நடத்தும் தொழிலதிபர்கள் கம்பெனியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பார்கள். அதனால் முழு நிர்வாகமும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தவிர சிறுபான்மைப் பங்குதாரர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பங்கு எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத காரணத்தால் நிர்வாகத்தில் அவர்கள் கட்டுப்பாடும், தலையீடும் இருக்காது. கம்பெனியின் தலைமை நிர்வாகியும், போர்ட் ஆஃப் டைரக்டர்கள் எனப்படும் வாரிய இயக்குனர்களும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் பெரும்பான்மை தொழிலதிபரின் ஆட்களே இயக்குனர்களாக இருப்பார்கள்.

நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இயக்குனர்களின் ஒப்புதல் தேவை. இயக்குனர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்கள் சம்மதித்தால் ஒட்டுமொத்த பங்குதாரர்களும் ஒப்புதல் கொடுப்பதாக அர்த்தம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களும், முதலமைச்சரும் மக்கள் நலனுக்காகச் செயல்படுவதாக நாம் நினைத்துக் கொள்வது போல, நிறுவனங்களின் இயக்குனர்களும் பங்குதாரர்களின் நலனுக்காக இயங்குவார்கள் என்று நினைக்க முடியாது. ஏனென்றால் இயக்குனர்கள் பெரும்பான்மை பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் சிறுபான்மையினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. என்ன செய்வது? சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டத்தில் யாராவது குரல் கொடுக்க வேண்டுமே! அதற்காக 'சுயேட்சை இயக்குனர்கள்' எனப்படும் independent directors வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள். இந்த சுயேட்சை இயக்குனர்கள் நிர்வாகம் என்ன சொன்னாலும் தலையாட்டாமல் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சுயேட்சையாக கருத்துக் கூறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சட்ட திட்டங்கள் எப்படி இருந்தாலும் அவை நடைமுறைக்கு வராத வரை எவ்விதப் பயனும் தருவதில்லை. சுயேட்சை இயக்குனர்களும் அப்படித்தான். ஒரு நிறுவனத்தில் 'போர்டில்' அங்கம் வகிப்பது அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழில். ஆகையால் நிர்வாகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதில் அப்படியே நீடிப்பது முக்கியமான நோக்கமாக இருக்குமே ஒழிய சிறுபான்மை பங்குதாரர் சார்பாகக் குரல் எழுப்புவதாக இருக்காது. அண்மையில் நாம் கண்ட சத்யம் சம்பவம் இந்தக் கருத்தை மீண்டும் ஒரு தடவை நீருபித்துள்ளது.

டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய மூன்று பெரிய ஜாம்பவான்களை அடுத்து 2 பில்லியன் டாலர் ஆண்டு வருமானம் ஈட்டிய நான்காவது மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகும். முதல் மூன்று கம்பெனிகளை விட வயதிலும் இளையது. 52 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். 66 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. தலைமையகம் ஹைதராபாத் நகரத்தில் அமைந்துள்ளது. சேர்மன் பெயர் ராமலிங்க ராஜு. அவரும் அவரைச் சார்ந்த புரமோட்டர்களும் சத்யம் கம்ப்யூட்டரில் 8.61 சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர்.

சத்யம் நிறுவனம் ஏகப்பட்ட பணம் வைத்துள்ளது. பணத்திலேயே மிதக்கிறது. அந்தத் தொகையை வைத்து மற்ற நிறுவனங்களை வாங்கித் தனதாக்கும் வேலையில் ஈடுபடலாம். ராமலிங்க ராஜு அந்த வேலையை முடுக்கி விட்டார். சிட்டி பேங்க் வங்கியின் சாஃப்ட்வேர் பிரிவு Citisoft, Knowledge Dynamics மற்றும் Bridge Strategy Group முதலிய சிறு நிறுவனங்களை வாங்கியது. அவையெல்லாம் மென்பொருள் அல்லது மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள். இது ஒன்றும் வித்தியாசமான நடவடிக்கை அல்ல. HCL, விப்ரோ, இன்ஃபோசிஸ் என எல்லா நிறுவனங்களுமே தம்மிடமுள்ள அபரிமிதமான பணத்தைக் கொண்டு சாஃப்ட்வேர் துறையில் சிறு கம்பெனிகளை சர்வதேச அரங்கில் வாங்கிப் போட்டு தமது எல்லையை விரிவாக்கிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

இந்தப் பின்னணியில் ராமலிங்க ராஜு & கோ ஒரு நூதனமான காரியத்தைச் செய்யத் துணிந்தது. சத்யம் நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் ரூ 8,235 கோடி அவர்களது கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். யாருமே எதிர்பாராத வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வாங்குவதாக சத்யம் நிர்வாகம் அறிவித்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ராஜு குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய மேட்டர். தாங்கள் நடத்தும் கம்பெனியை சத்யம் நிறுவனத்திற்கு விற்பதாக கணக்குக் காட்டி, சத்யம் கம்பெனியில் உள்ள ஒட்டு மொத்தப் பணத்தையும் அதற்கான விலை என்று சொல்லி தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு ஒரு திட்டம் போட்டனர்.

மேடாஸ் புராப்பர்ட்டீஸ் ராஜு குடும்பத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம். அதை சத்யம் அப்படியே காசு கொடுத்து வாங்குமாம். பிறகு மேடாஸ் இன்ஃப்ரா என்றொரு கம்பெனி. அதுவும் அவர்களது நிறுவனமே. சென்ற ஆண்டு அதன் பங்குகளை வெளியிட்டு பப்ளிக் லிமிடேட் நிறுவனமாக உருமாற்றம் செய்திருந்தனர். வெளியிட்ட பங்குகள் போக இன்னமும் ராஜு குடும்பத்தினர் வசமிருக்கும் 31 சதவீதம் பங்குகளையும் சத்யம் வாங்கிக் கொள்ளுமாம். ராமலிங்க ராஜுவின் இரு மகன்களும் நடத்தும் இவ்விரு கம்பெனிகளையும் டேக் ஓவர் செய்வதற்கு சத்யம் எட்டாயிரம் கோடி செலவழிக்கும்.

எப்படி இருக்கிறது திட்டம்? யார் அப்பன் வீட்டுப் பணத்தை யார் வாரிக் கொடுப்பது? வெறும் எட்டு சதவீதம் பங்குகளுக்கு மட்டுமே உரிமையாளரான ராமலிங்க ராஜு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பல இலட்சக் கணக்கான முதலீட்டாளர்களின் சம்மதமின்றி, அவர்கள் பணத்தை தனதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதா? அமெரிக்கா அரசு அங்கே திவாலாகும் கம்பெனிகளைக் மீட்பதற்காக bailout package அறிவிப்பது போல, ராமலிங்க ராஜு தனது மக்கள் நடத்தும் கம்பெனிகளுக்கான satyam sponcered bailout நடவடிக்கையா இது? துரோகம், சதி, ஊழல் என்று முதலீட்டாளர் சமுதாயம் கதறியது.

குடும்ப பிசினஸை சத்யம் நிறுவனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யும் காரியத்தை போர்ட் ஆஃப் டைரக்டர்கள் யாருமே எதிர்க்கவில்லை என்பதே முதலீட்டாளர் சமுதாயத்தின் கோபத்திற்கு முதன்மையான காரணம். அவர்கள் மேடாஸ் டேக்ஓவர் நடவடிக்கைக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். அந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் ஏழு இயக்குனர்கள் நேரில் கலந்து கொண்டனர். மற்ற இருவரும் போன் மூலம் பங்கெடுத்துப் பேசினர். சுயேட்சை இயக்குனர்களின் நேர்மையும் அந்தக் கூட்டத்தில் பல் இளித்தது. அவர்கள் "யெஸ்" என்றுதான் சொன்னார்கள்.

முதலீட்டாளர் சமுதாயம், ஊடகங்கள் என எல்லாமே பொங்கி எழுந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு தொழிலதிபர்கள் நாமம் போடுவது நம் நாட்டில் வழக்கமாக நடப்பது தான். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத மீடியாக்கள் இப்போது பரபரப்பு உண்டாக்கக் காரணமும் உண்டு. சத்யம் நிறுவனத்தின் 58 சதவீதம் பங்குகள் வெளிநாட்டினர் வசம். மேலும் பல பெரிய முதலீட்டு நிறுவனங்களும் கணிசமான ஷேர் வைத்துள்ளன. அவர்கள் விழித்துக் கொண்டு கேள்வி கேட்கும் போது மீடியா கவனிக்காமல் போகுமா!

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு, SBI மியூச்சுவல் ஃபண்டு, டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு முதலிய பரஸ்பர நிதிகளும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சத்யத்தில் வெகுவாக முதலீடு செய்துள்ளன. அரசாங்கம் தலையிட்டு நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை போட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தன. அந்த அழுத்தத்தை விட முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தமும் நிர்வாகத்தை கதி கலங்கச் செய்தது.

நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் CLSA ரேட்டிங் ஏஜென்சி இந்திய கார்ப்பரேட் கண்ணிய வரலாற்றில் மிக மோசமான செய்கையாக இதை வர்ணித்தது. எந்த அடிப்படையில் மேடாஸ் பங்குகளை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள் என்றும், எந்த அடிப்படையில் அதற்கு விலை நிர்ணயம் செய்தனர் என்றும் தெளிவாக விளக்கவில்லை. ஒரு வேளை ரியல் எஸ்டேட் துறையில் நுழைய விரும்பினால் மிக மலிவாகக் கிடைக்கும் யூனிடெக் போன்ற ஒரு கம்பெனியை டார்கெட் செய்திருக்கலாம்.

மேடாஸ் கம்பெனிகளை சத்யம் வாங்குவதாக உலகுக்கு அறிவித்த மறுநாள் ஷேர் மார்க்கெட் சத்யம் பங்குகளை சாத்து சாத்தென்று சாத்தியது. நாஸ்டாக் அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் அதன் ADR பங்குகள் ஒரே நாளில் 55 சதவீதம் வீழ்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் 30 சதவீதம் சரிவு. பல்லாயிரம் கோடிகள் ஒரே நாளில் காலி. மேடாஸ் பங்குகளும் கீழே இறங்கின. ராஜு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ 597 கோடி குறைந்தது.

ராமலிங்க ராஜுவும், சத்யம் உயர் மட்ட நிர்வாகத்தினரும் கலங்கிப் போனார்கள். இவ்வளவு எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ராஜு பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். "There will be no diversification or acquisition for now" என அந்தக் கம்பெனியின் CFO சீனிவாஸ் வட்லமணி அறிவித்தார். டேக்ஓவர் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிப்பு வெளியான மறு நாள் சத்யம் ஷேர் சற்று மேம்பட்டது.

ராமலிங்க ராஜுவின் நிலையை, "அவர் அப்செட் ஆக இருக்கிறார்" என்று சீனிவாஸ் கூறினார்.

புரமோட்டர்களும், தலைமை நிர்வாகிகளும் முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக தாங்கள் நினைத்தபடி ஆட முடியாது என்பது இந்தியாவில் முதன் முறையாக அழுத்தம் திருத்தமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் இது போதாது. கார்ப்பரேட் கண்ணியத்தில் நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் பாக்கியிருக்கிறது.

பின் குறிப்பு: பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த சமயத்தில் சத்யம் நிறுவனம் ரியல் எஸ்டேட் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்தால் அதன் பங்குதாரர்கள் குதூகலமாக வரவேற்றிருப்பார்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாகக் குதித்து ராமலிங்க ராஜுவை மிரட்டியிருக்க மாட்டார்கள்.