Thursday, April 19, 2007

வலுவான ரூபாய்..

- செல்லமுத்து குப்புசாமி

இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தகம் குறித்தான விமர்சனத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

//பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை ஏற்றுகிறது. அதே நேரம் டாலருக்கும் நிகராக இந்திய ரூபாயில் மதிப்பு உயர்ந்து போகாமல் இருப்பதற்காக டாலரை வாங்கிக் குவித்து பணப்புழக்கத்தைக் (ரூபாயை) கூட்டுகிறது. வலுவான இந்திய ரூபாயைத் தாங்கி முன்னேறும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லையென்று நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் நினைக்கிறார்களா?//

ஆனால், நாம் கேள்வியுறும் செய்தி இதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வலுவேறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் காணாத அளவுக்கு நாணயமாற்று விகிதம் உள்ளது. 1 டாலர் = 41.XX என்று எதோ ஒரு இலக்கத்தை அறிகிறோம்.

டாலருக்கு நிகராக ரூபாய் பலம் பெற வேண்டும் என்று நினைப்பது பாமரத்தனமானது. (ஏன் என்ற விளக்கம் வெகு நீளமாக அமையக்கூடும்)நிபுணர்கள் 44 ரூபாய் என்ற அளவில் எக்சேஞ்ச் ரேட் இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர். புத்தக விமர்சனத்தின் முடிவில் குறிப்பிட்டது போல, ரிசர்வ் வங்கி சந்தையில் புழங்கும் டாலரை வாங்கிக் குவித்து இந்திய ரூபாயை வலுவிழக்கச் செய்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அதைச் செய்யாமல் மெளனம் சாதிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

காரணம் உ.பி. மாநிலத் தேர்தலா என்ற ஐயம் எழுகிறது. தேர்தல் என்றால் விலைவாசி, பணவீக்கம் என்ற காரணிகள் முக்கிய இடம் பிடிக்கும். Inflation is more of a political, than economic factor, now.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வட்டியை ஏற்றியது. அதனால் கூடுதல் புழக்கம் உறிஞ்சப்படலாம். நல்ல செயல். ஆனால், இந்தியாவில் அதிகமான வட்டி வீதம் என்றால் மற்ற நாடுகளில் இருந்து (டாலர் என்க) பணம் இங்கே பாயும். அப்போது ரூபாய்க்கான தேவை கூடும். டாலர் வலுவிழக்கும். (அதைத்தான் இப்போது காண்கிறோம். ) அது போன்ற நேரத்தில் RBI டாலரை வாங்கி அந்நியச் செலவாணி மாற்று விகிதத்தைப் பேணும். அப்போது நிறைய ரூபாய் புழக்கத்திற்கு வரும். பின் கதவு வழியாக பணவீக்கம் கூடுவதற்கு இது காரணமாகி விடும்.

பணவீக்கமா அல்லது எக்சேஞ்ச் ரேட்டா என்ற கேள்வி எழுகிற போது பொருளாதாரம் கொஞ்ச நேரம் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என நினைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முனைந்துள்ளது. Thanks to elections. எனக்கென்னவோ, வலுவான ரூபாயைத் தாங்கி இந்தியப் பொருளாதாரம் முன்னேறும் என்ற நம்பிக்கையில் நடக்கும் காரியமாக இது தெரியவில்லை.

5 comments:

மா சிவகுமார் said...

ஏற்றுமதியைப் பெருக்க நாணய மதிப்பை செயற்கையாகக் குறைத்துப் பிடிப்பதை விட, இயல்பாக ரூபாயின் மதிப்பை அதிகரிக்க விடுவது பொருளாதாரத்துக்கு நல்லது என்றே தோன்றுகிறது.

1. குறைந்த செலவில் தேவையான பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்து கொள்ளலாம். இதனால் ஏற்றுமதிகளும் மறைமுகமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வெளிநாட்டில் நிறுவனங்களை வாங்க முயலும் இந்திய நிறுவனங்களுக்குக் கூட உதவியாக இருக்கும்.

பொதுவாக வலிமையான தேசிய நாணயம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு உதவுவதாகவே பார்க்கிறேன். சீனா போன்ற ஏற்றுமதியையே நம்பி வாழும் பொருளாதாரங்களுக்கு பொருந்தும் கொள்கைகள் உள்நாட்டுப் பொருளாதாரம் வலிமையாக இருக்கும் இந்தியாவுக்கு பொருந்தாது.

சுருக்கமாக ரூபாயின் மதிப்பு உயர்வதால் நமக்கு நன்மைதான்.

அன்புடன்,

மா சிவகுமார்

மாசிலா said...

நல்ல கட்டுரை. ஆனால் புரிவதற்கு அதிக கடினமாக உள்ளது. இன்னும் விரிவாக விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

தொடர்ந்து எழுதி வாருங்கள் Chellamuthu Kuppusamy.

நன்றி.

வடுவூர் குமார் said...

ஹோஹோ! அதான் காரணமா?
நடக்கட்டும்

Chellamuthu Kuppusamy said...

சில பேர் பேசும்போது கவனமா உக்காந்து கேக்கத் தோணும். அந்த ரகத்துல நீங்க இருப்பதாக எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

நீங்கள் சொல்லும் சித்தாந்தமும் சரியானதே. ஆனால், நிறுவனங்களின் வலுவான lobby மற்றும் தாராளமயமாக்கலைப் பின் தொடர்ந்து நாம் பலனடைந்ததால் உருவாக்கிய கொள்கைகள் அந்த ரீதியல் அமையாததும் உண்மையல்லவா! உங்கள் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Chellamuthu Kuppusamy said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மாசிலா. புரியற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்; எனக்கும் தெளிவாகப் புரிந்த பிறகு.. ( இது சும்மா சைட் ஃபிட்டிங் ஃபார் சிரிப்பு)

வடுவூர் குமாருக்கும் நன்றிகள்!!