Thursday, April 26, 2007

கச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்

- செல்லமுத்து குப்புசாமி

(சென்ற 2006 ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தலும், அமெரிக்காவில் செனட் தேர்தலும் நடந்த சமயத்தில் எழுதியது. இப்போது தாமதமாக இங்கே வலையேறியிருக்கிறது)

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விவாதங்களும், ஆதரவு திரட்டலும் சூடு பிடிக்கிறது. தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். பிறகு?? அமெரிக்காவும் நவம்பரில் இடைக்கால 'செனட்' தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அது தொடர்பான பல அரசியல் வேடிக்கைகளைக் காண முடிகிறது.

அதிபர் ஜார்ஜ் புஷ் பெட்ரோல் விலையை முன் கூட்டியே ஏற்றி வைத்து, ஆட்சியின் சாதனையாக சமீபத்திய எண்ணெய் விலைச் சரிவைக் காரணம் காட்டித் தனது குடியரசுக் கட்சி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்காக நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். புஷ் எதிர்ப்பாளர்கள் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு "இப்ப இறங்கும் போது அதுக்கு நாங்கதான் காரணம்னு உரிமை கொண்டாடும் நீங்க ஏறினப்ப மட்டும் ஏன் பொறுப்பேத்துக்க முன் வரலை?" என்று வம்புக்கு இழுக்கிறார்கள். ஈராக்கைத் தாக்கிக் கைப்பற்றிய போது இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு புஷ் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியதற்கு இப்போது அவர்கள் செய்யும் கைமாறு என்கிறார்கள். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கேலன் 3 டாலராக இருந்த பெட்ரோல் தற்சமயம் 2 டாலருக்கு அருகில் ஊசலாடுகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'தாதா' நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. 'தேவை - உற்பத்தி' சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் 'நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்' என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.

மேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவிய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது.

தேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல சிக்கல்கள் உண்டாயின. கடந்த ஆண்டுகளில் அமெரிக்க மெக்சிகோ வளைகுடாவைத் தாக்கிய சூறாவளி அங்கே செறிந்திருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஈராக் யுத்தம், ஈரானில் பதட்டம், வெனிசுலா விவகாரம் ஆகியவையும் உடன் சேர்ந்து கொண்டன. கோடை காலத்தில் சகட்டு மேனிக்கு கார் ஓட்டுகிற மேலைநாட்டு வழக்கம் தேவையை மேலும் கூட்டியது. போதாக் குறைக்கு கச்சா எண்ணெய் டிரேடிங் செய்பவர்கள் எரிகிற எண்ணையில் எண்ணெய் வார்த்து போலியாக உயர்த்தினார்கள்.

இப்படியெல்லாம் ஏறிப்போன கச்சா எண்ணைய் ஒரு பேரல் 75 டாலரில் இருந்து மீண்டும் கீழிறங்கி வந்திருக்கிறது. தேர்தல் விளையாட்டுகள் அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் தென்படுகின்றன. அரசியல் காரணங்களைத் தாண்டி நோக்கினால் நிஜமாகவே நிலையான எண்ணெய் விலை இறங்கி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழுதுபட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பல மறுபடியும் இயங்கத் தொடங்கியதும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்ந்ததும், போலியாக விலையோடு விளையாடும் ஹெட்ஜ் ·பண்ட்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முதலீடுகளை எல்லாம் விற்று சரிவை மேலும் தீவிரமாக்கியதும், ஏறுவது எல்லாமே இறங்கித்தான் தீர வேண்டும் என்ற இயற்கை விதியும் ஒன்று சேர்ந்து கூட விலையைக் கீழே இழுத்திருக்கலாம்.

சர்வதேசக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அதைக் கடந்து நம்மை, நமது நாட்டை, நமது நிறுவனங்களை, பங்குச்சந்தையை கச்சா எண்ணைய் விலை எப்படிப் பாதிக்கிறது என்பதே நமக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை நிர்ணயிக்கும் பெருங்காரணியாக பெட்ரோல் விலை உள்ளது. போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, மூலப்பொருடகளுக்கான செலவு என எல்லா முனைகளிலும் பெட்ரோல் விலையேற்றம் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். அதனால் செலவுகள் கூடி நிறுவனங்களின் இலாப விகிதம் மந்தமடையும். இலாபம் குறைவதால் புதிய முதலீடுகள், விரிவாக்கம், வளர்ச்சி போன்றவை தடைபட்டுப் போகும். ஆகவே, பங்குச் சந்தையில் முதலிடப்படும் தொகை வற்றும், பங்குச்சந்தை முடங்கும். இந்த லாஜிக்கையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியப் பங்குச்சந்தை சென்ற மூன்றாண்டுகளாக கச்சா எண்ணெய் விலையை விட வேகமாக வளர்ந்தது.

இதற்கு ஒரு வகையில் மூலமாக அமைந்தது அரசின் தலையீடு. சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு வாங்கினாலும் உள்நாட்டில் சில்லறை விலை இதற்கு மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நட்டத்தை ஏற்றுக் கொண்டு வாடிக்கையாளருக்கு குறைவான தொகைக்கே வழங்கின. இதனால் மற்ற துறைகளின் எரிபொருள் செலவு ஏறவில்லை. இலாபத்தை பழைய அளவிலேயே பேண முடிந்தது. இந்தச் சுமை யாவும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்து ரூபாய் மானியம், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் இயங்கியது. நல்ல வேளையாக, இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இது போன்ற ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மறுபடியும் தம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் அதற்கு ஏற்ப சில்லறை விலை இறங்காது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா? பெட்ரோல் விற்பனையில் லேசான இலாபம் வந்தாலும், இன்னமும் சமையல் எரிபொருள் போனவற்றுக்கு அளிக்கும் மானியத்தால் இந்த நிறுவனங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதாம்.

மானியம் வழங்கி வழங்கியே கூறு கெடுவதால் இந்த ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளை முதலீட்டாளர்கள் ஒதுக்கி வைப்பது உண்மையே. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் விலை இதையே பிரதிபலிக்கிறது. ஆயினும், 2002-03 சமயத்தில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு சில்லறை விலையை மாற்றும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு விலை அமோகமாக வளர்ந்தது. இந்தியன் ஆயில் 300 சதவீதத்திற்கும் மேல் ஏறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எதற்காக பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள்? இந்தியாவில் அரசுத் தலையீட்டில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பினும், உலக அளவில் அப்படியில்லை. கச்சா எண்ணெய் விலை மூலப்பொருட்களின் விலையை ஏற்றும், அதன் மூலம் எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி உயரும், பணவீக்கம் பெருகும், வட்டி வீதம் அதிகரிக்கும், பணம் அரிதாகப் போகும்......என்ற கணிப்புகளின் படி பங்குச்சந்தையில் இருந்து பணம் வெளியேறி பங்குச்சந்தைக் குறியீட்டைச் சரிய வைக்கும். இந்தப் பணம் இந்தியப் பணம் மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகளிலும் இருந்து இங்கே முதலிட்டவர்கள் விற்க ஆரம்பித்ததும் குறியீடு படுத்து விடுகிறது.

இதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது எல்லாப் பொருட்களின் விலையையும் குறைக்கும். உலகெங்கும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்கும். அதன் ஒரு பகுதி இந்தியச் சந்தையிலும் பாயும். குறியீடு மேல் நோக்கிப் போகும். இதெல்லாம் பொதுவான விதிகள். விதிகள் என்றால் அவற்றோடு சில விதி விலக்குகளும் கூடவே இருக்கும். அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

நமது இந்திய எரிபொருள் தேவையில் முக்கால்வாசி இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. நமது மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் பெட்ரோல் பொருளுக்காக மட்டுமே ஒதுக்குகிறோம். கடந்த எட்டு வருடத்தில் இதற்கான அந்நியச்செலவாணி செலவு ஒன்பது மடங்கு கூடியிருக்கிறது. இது FY - 2006 இல் ஏழு இலட்சம் கோடிக்கு மேல். இறக்குமதி அதிகமாகிக் கொண்டே போவதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மூலம் வழங்கும் மானியமும் நாட்டின் வலுவைக் குலைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை ஈடுகட்டுவதற்கு அரசு வேறு ஏதாவது வழியில் மக்களிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ வரியாகப் பெறும். ஏற்றுமதிப் பற்றாக்குறை FY - 2005 ஐ விட FY - 2006 இல் நான்கு மடங்காகி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அதில் வரும் பணத்தில் இந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையை (current account deficit) நிவர்த்தி செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நாட்டைக் கூறு போட்டு விற்பதாக முடியும் என உள்நாட்டுப் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்போது சர்வதேசச் சந்தையில் விலை இறங்கியிருப்பதால் அரசு ஆனந்தமாக உணரும். முன்பே சொன்னது போல ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கும் மகிழ்ச்சி. இதற்கு நேர் மாறாக உள்நாட்டில் பெட்ரோல் கிணறு தோண்டி எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யைப் பார்க்கிறார்கள். உலகச் சந்தையில் விலை என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதே அளவு தானே இருக்கும்? இருந்தாலும் சர்வதேச விலைக்கு இணையாக இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்று பெரும் இலாபம் ஈட்டியது. சென்ற சில வருடங்களில் இதன் பங்கு விலை அமோகமாக ஏறியதற்கு இதுவே காரணமாகும். அதைக் கவனித்த அரசாங்கம், "இனி நீங்களும் மானியத்தில் பங்கு போட வேண்டும்" எனப் பணித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் விலை மாற்றம் எப்படி இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அந்த அளவு ஒரு பேரலுக்கு 50 டாலருக்கும் குறைவாக இருப்பதால், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.

சந்தையில் சில்லறை விற்பனையாகும் எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உண்மையாக இருக்கிற பட்சத்தில், சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை நமது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த விதமான அனுகூலமும் உருவாக்கவில்லை என்பதே நிஜம். ஆனால் அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் சற்று இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இளைப்பாறினால் இன்னொரு முறை நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆற்றலைக் கூட்டிக் கொள்வார்கள். நல்லது தான். ஒரு வேளை சர்வதேச விலை இதற்கும் கீழே போனால் அதன் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் நமது அரசாங்கம் சில்லறை விலையைக் குறைக்கவில்லை என்று குறை சொல்லாமல், சர்வதேசச் சந்தையில் விலை ஏறிய போது அதே வேகத்தில் இவர்கள் ஏற்றவில்லை என்பதில் மனதில் கொள்வோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு வாரப் பெட்ரோல் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலவாணியைத் தவிர ஏதும் இல்லாததால் நமது தங்கத்தை பேங்க் ஆ·ப் இங்கிலாந்தில் அடமானம் வைத்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் எத்தகைய வியத்தக முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது புரியும்.

Thursday, April 19, 2007

வலுவான ரூபாய்..

- செல்லமுத்து குப்புசாமி

இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தகம் குறித்தான விமர்சனத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

//பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை ஏற்றுகிறது. அதே நேரம் டாலருக்கும் நிகராக இந்திய ரூபாயில் மதிப்பு உயர்ந்து போகாமல் இருப்பதற்காக டாலரை வாங்கிக் குவித்து பணப்புழக்கத்தைக் (ரூபாயை) கூட்டுகிறது. வலுவான இந்திய ரூபாயைத் தாங்கி முன்னேறும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லையென்று நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் நினைக்கிறார்களா?//

ஆனால், நாம் கேள்வியுறும் செய்தி இதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வலுவேறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் காணாத அளவுக்கு நாணயமாற்று விகிதம் உள்ளது. 1 டாலர் = 41.XX என்று எதோ ஒரு இலக்கத்தை அறிகிறோம்.

டாலருக்கு நிகராக ரூபாய் பலம் பெற வேண்டும் என்று நினைப்பது பாமரத்தனமானது. (ஏன் என்ற விளக்கம் வெகு நீளமாக அமையக்கூடும்)நிபுணர்கள் 44 ரூபாய் என்ற அளவில் எக்சேஞ்ச் ரேட் இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர். புத்தக விமர்சனத்தின் முடிவில் குறிப்பிட்டது போல, ரிசர்வ் வங்கி சந்தையில் புழங்கும் டாலரை வாங்கிக் குவித்து இந்திய ரூபாயை வலுவிழக்கச் செய்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அதைச் செய்யாமல் மெளனம் சாதிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

காரணம் உ.பி. மாநிலத் தேர்தலா என்ற ஐயம் எழுகிறது. தேர்தல் என்றால் விலைவாசி, பணவீக்கம் என்ற காரணிகள் முக்கிய இடம் பிடிக்கும். Inflation is more of a political, than economic factor, now.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வட்டியை ஏற்றியது. அதனால் கூடுதல் புழக்கம் உறிஞ்சப்படலாம். நல்ல செயல். ஆனால், இந்தியாவில் அதிகமான வட்டி வீதம் என்றால் மற்ற நாடுகளில் இருந்து (டாலர் என்க) பணம் இங்கே பாயும். அப்போது ரூபாய்க்கான தேவை கூடும். டாலர் வலுவிழக்கும். (அதைத்தான் இப்போது காண்கிறோம். ) அது போன்ற நேரத்தில் RBI டாலரை வாங்கி அந்நியச் செலவாணி மாற்று விகிதத்தைப் பேணும். அப்போது நிறைய ரூபாய் புழக்கத்திற்கு வரும். பின் கதவு வழியாக பணவீக்கம் கூடுவதற்கு இது காரணமாகி விடும்.

பணவீக்கமா அல்லது எக்சேஞ்ச் ரேட்டா என்ற கேள்வி எழுகிற போது பொருளாதாரம் கொஞ்ச நேரம் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என நினைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முனைந்துள்ளது. Thanks to elections. எனக்கென்னவோ, வலுவான ரூபாயைத் தாங்கி இந்தியப் பொருளாதாரம் முன்னேறும் என்ற நம்பிக்கையில் நடக்கும் காரியமாக இது தெரியவில்லை.

Thursday, April 12, 2007

'A view from outside' by ப.சிதம்பரம் - ஓர் அலசல்

-செல்லமுத்து குப்புசாமி

அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணம், கொலம்பஸ் மாநகரில் இருந்து இதை எழுதுகிறேன். இந்த ஊரில் உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் பகிர்ந்த தகவல் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றியது.

அது 2002 அல்லது 2003 ஆம் வருடமாக இருக்கலாமென்று நண்பர் நினைவு கூர்ந்தார். சிதம்பரம் அந்தக் காலத்தில் ஆட்சியில் இருக்கவில்லை; காங்கிரஸ் கட்சியிலும் இருக்கவில்லை. கொலம்பஸ் நகரில் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு அவரை அழைத்திருந்தனர். பதவியில்லாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சர்வ சாதாரணம். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இந்தப் பொருளாதார வல்லுனரையும் அதே அளவுகோளில் புறந்தள்ளி விட இயலாது. அதற்குக் காரணம் அவரது 'எளிமை' என்று நண்பர் குறிப்பிட்டார்.

சிதம்பரம் இந்தியாவிலிருந்து எக்கானமி கிளாஸ் விமானச் சீட்டில் பயணித்தார். வந்திறங்கியதும் கனெக்ட்டிங் பிளைட் வேண்டுமென்று அடம் பிடிக்காமல் டெட்ராய்ட்டில் இருந்து கொலம்பஸ் வரை மூண்றரை மணி நேரம் காரில் வந்திருக்கிறார். வந்த இடத்தில் ஹோட்டல் ஜாகை வேண்டுமென்று நிர்ப்பந்திக்கவில்லை. மாறாக, நிர்வாகிகள் யாரோ ஒருவர் வீட்டில் தங்கினாராம். நிகழ்ச்சியில் பேசி முடித்த பிறகு ஊரைச் சுற்றிக் காட்டுவதாக ஆர்வலர்கள் அழைத்தார்களாம். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எழுத வேண்டுமென்று கூறி அவர்களது அழைப்பை ஏற்கவில்லையாம்.

உலக வெங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் இருந்தும், சான்றோர்கள் மத்தியில் இருந்தும் இடையிடையே வரும் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் சகித்துச் சமாளித்து விட்டு அதை எழுதி முடித்தாராம். சந்தையை நன்குணர்ந்த இந்த அரசியல்வாதியின் சுயக் கட்டுப்பாட்டுக்கு மிகச் சிறந்த சான்றாக இதைக் கருதலாம். இப்படியாக, ஆகஸ்ட் 2002 தொடங்கி மார்ச் 2004 வரை (இரு வாரங்கள் தவிர்த்து) எல்லா வாரமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு 'பத்தி' எழுதி வந்தார்.

அந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, அழகாக பைன்ட் செய்து 'A view from Outside' என்ற பெயரில் 372 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். (விலை ரூ500). ஒரு சராசரி இந்தியனுக்குரிய அணுகுமுறையோடு அந்தப் புத்தகத்தைப் பற்றி மேலோட்டமாக ஒரு பார்வை செலுத்த இந்தப் பதிவு முயற்சிக்கிறது.


முதல் கட்டுரையை இப்படித்தான் ஆரம்பிக்கிறார். "இந்தியா ஏழை நாடாகவே வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன். பெரும்பாலான மக்கள் ஏழையாக வாழும் நாடு என்று வேண்டுமானால் கூறலாம்"

உலகின் ஏனைய நாடுகளை விட வேகமாக வளரக் கூடிய வல்லமை இந்தியாவிற்கு உள்ளதாக அடித்துச் சொல்கிறார். ஆனால், வளர்ச்சி என்பது முதலீட்டைச் சார்ந்தது. ஆகையால், ஆக்கப்பூர்வமான முதலீட்டிற்குத் தடையாக உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டுமென்கிறார். உள்கட்டமைப்புப் பணிகளில் பொதுச்செலவு கூட வேண்டும். அரசு முதலீடுகளைத் துரிதப்படுத்தவும், தனியார் துறை முதலீடுகளுக்குக் குறுக்கே நிற்கும் தடைக் கற்களை அகற்றவும் வலியுறுத்தும் நிதியமைச்சரோடு நாமும் இணைவது அவசியமாகிறது.

பல இடங்களில் தன்னை ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக சிதம்பரம் நிலைநிறுத்துகிறார்.
பா.ஜ.க. மீதும் அதன் ஆட்சி மீதும் விமர்சனங்களை முன்வைக்கும் இடங்களில் காட்டமும், கிண்டலும் இழையோட விட்டிருக்கிறார். புத்தகத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை எழுதிய காலம் பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தது. அந்தக் கட்சியின் இந்துத்துவா கொள்கையையும் சாடுகிறார்.

அன்றைய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் பல காரணிகள் இன்று அவர் அங்கம் வகிக்கும் இன்றைய ஆட்சிக்கும் பொருந்துமென்பதில் சந்தேகமில்லை. வாஜ்பாய் குறித்து பின் வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தியாவை இதுவரை ஆண்ட கூட்டணிகளிலேயே மிகவும் பிளபுபட்ட (முரண்பட்ட) கூட்டணியை வழி நடத்திச் செல்கிறார்"

இடதுசாரிக் கட்சிகளுக்கும், தி.மு.க. போன்ற பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் வளைந்து கொடுத்துக் காலம் தள்ளும் நடப்பு அரசாங்கத்தை என்ன சொல்வது? எதைப் படித்தாலும் அப்படியே நம்பி விடும் மக்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் மட்டும்தான் கருத்து வேற்றுமைகள் நிலவியது போன்ற தோற்றம் ஏற்படலாம். வேறுபாடுகளும், சமரசங்களும் கூட்டணி ஆட்டத்தின் விதிமுறையாகவும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகவும் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. அரசாங்கம் கூட வரலாற்றிலே இதற்கு முன் காணாத வகையில் கூட்டணிக் கட்சிகளின், சிதம்பரத்தின் காங்கிரஸ் உட்பட, நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

நிதியமைச்சரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பொருளாதாரப் புத்திக் கூர்மை குறித்து நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் வளர்ச்சியும், அங்கு வசிக்கும் குடிமக்களின் வாழ்க்கைத் தரமும் அந்த தேசத்தில் தலைக்கும் எவ்வளவு மின்சாரம் செலவழிக்கிறோம் என்ற மிந்துய்வு (per-capita consumption) தீர்மானிக்கும் என்று ஆணித்தரமாக புத்தகத்தின் பல இடங்களில் குறிப்பிடுகிறார். பி.ஜே.பி. மின் துறையைச் சீரமைக்கத் தவறியதையும், நிர்ணயித்த இலக்கின் படி மின் நிலைய உருவாகத்தை நிறைவேற்றத் தவறியதையும், புதிய மெகா மின் உற்பத்தி நிலையங்களுக்கு உந்தம் கொடுக்காமல் விட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த விஷயத்தில் நிதியமைச்சரோடு நாம் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மின் உற்பத்தியில் நடப்பு அரசாங்கம் உறுதியான செயல்பாடுகள் மூலம் தீர்மானமாக இருப்பதை அறிகிறோம். 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளையும் மின்மயமாக்கும் உன்னதமான இலக்கு வெறும் காகித இலக்காக மட்டுமே நின்று விடாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

விவசாயத்தைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் தொட்டுச் செல்கிறார். முன்னுரையில் இவ்வாறு தெரிவிக்கிறார்."விவசாயம் குறித்து மூன்று துண்டுகள் (கட்டுரைகள்) மட்டுமே எழுதினேன். எனினும், சொற்பமான முதலீடு, போதுமான கடனுதவி கிடைக்காமை, விளை நிலத்தில் குடியானவனின் பொருளுக்குக் கிடைக்கும் மட்டமான விலை ஆகிய வேளாண்மைத் துறையைப் பீடித்த பிணிகளை அடையாளம் காண முடிந்தது. இப்பிரச்சினைகள் நீடித்தபடியே இருக்கின்றன. ஆனால், இந்தச் சூழ்நிலையைச் சரி செய்வதற்கான முயற்சி தொடங்கி விட்டது"

நமது அரசு நிர்வாக முறையும், அதை இயக்கும் விதிமுறைகளும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாறுவது அவசியம் என்கிறார். ஊழலும், இலஞ்சமும் எப்படி நுழைந்தன என்று அலசி அதன் ஆணி வேரைத் தொட முயற்சித்திருக்கிறார். நம் நாட்டில் அவை அழிவில்லாமல் தொடர்வதற்கான காரணத்தையும் அறிய முடிகிறது. லைசன்ஸ் ராஜ்ஜிய காலத்தில் பிசினஸ் செய்யும் முதலாளிமார்கள் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட 'நிதி' வழங்கினர்.

அதற்குக் கைமாறாக ஒருதலைப் பட்ச சலுகைகள் கம்பெனிகளுக்குக் கிடைத்தன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்படி அதிகாரிகள் நேர்மை தவறி நடக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். உயர் மட்டத்தில் தோன்றும் இந்த வியாதி படிப்படியாகப் பரவி ஒவ்வொரு தாலூக் ஆபீசுக்கும் வந்து சேர்கிறது. தேசத்தின் கடைசி பியூன், குமாஸ்தா எனப் பெரும்பாலானவர்கள் ஊருடன் ஒத்துப் போகிறார்கள். இதையெல்லா மாற்றியமைக்க அரசு அலுவலகங்களில் கணிணிமயமாக்கலும், மக்களுக்குத் தகவல் அறியும் உருமையும் நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்பதை சிதம்பரம் வலியுறுத்துகிறார். (சந்திர பாபு நாயுடு ஆட்சியில் தலைகீழாக மாறிய ஹைதராபாத் ஆர்.டி.ஓ. அலுவலகம் இதற்கு வாழும் சாட்சி)

காலங்காலமாக நம்மை அலைக்கழித்து வரும் காஷ்மீர் பிரச்சினையில் நமது நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்தியாவில் எதாவது பிரச்சினை எனும் போதும் மிகவும் செளகர்யமாக பாகிஸ்தானை நோக்கிக் கையைக் காட்டித் தப்பித்துக் கொள்வதை அரசுகள், (நூலாசிரியர் காங்கிரசை விட பி.ஜே.பி. மிக அப்படமாக இதைச் செய்வதாக உணர்கிறார்), உத்தியாகக் கடைபிடித்து வந்துள்ளன. 'War against terror' என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் சதாம் உசேனைக் குற்றம் சாட்டிய (சாட்டும்) ஜார்ஜ் புஷ்ஷ¤க்கும், நமக்கும் என்ன வேற்றுமை என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம்.

காஷ்மீரையும், அதன் மக்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தவறி விட்டோமென்று கோடி காட்டுகிறார். ஒரு காலத்தில் தனியாகப் பிரிந்து செல்லக் கோரிக் கலகம் செய்த பஞ்சாபிகள் (அதற்குரிய காரணங்களில் நியாயம் இருக்கலாம்) இன்று அனைத்துத் துறைகளிலும் பரவி நிற்கின்றனர். அவர்களைத் தேசிய மேடையில் ஏற்றுக் கொண்டோம். அண்ணா காலத்தில் தனி நாட்டுக் கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டது. இப்போது இந்திய தேசிய அரசியலில் மறுக்க முடியாத இடம் அந்தக் கட்சிக்குக் கிடடித்திருக்கிறது. கலந்துகொள்ளல் பெறுதல் மற்றும் ஈடுபாடு காரணமாக ஒரு மாநிலம் (அரசியல் குடும்பங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) எவ்வாறு செழிக்க முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கார்ஷ்மீர் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களைக் கைபிடித்து மேலே கொண்டு வராமல் விட்டது இந்தியாவின் (பல) அவமானச் சின்னங்களில் ஒன்றாகவே நிலவுகிறது.

தடையற்ற வியாபாரத்திற்கு வக்காலத்து வாங்கும் நிதியமைச்சரின் இந்தப் புத்தகத்தை பெரும்பாலும் அவரது பொருளாதார அணுகுமுறை என்ற ரீதியிலேயே நொக்க வேண்டியிருக்கிறது. புத்தகம் நெடுகிலும் நிறையப் புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். எதையுமே ஆதாரத்துடன், ஆணித்தரமாகப் பேச வேண்டும் என்ற அவரது வக்கீல் மூளை அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. பார்வை, விமர்சனம், கருத்து என எல்லாமே இதற்குப் பொருந்தும். (சில நெருடல்களை என்னால் கொள்கை நீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வேறு விஷயம்) தான் ஒரு சராசரி அரசியல்வாதியல்ல என்று நிரூபித்திருக்கிறார்.

பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தன் நிதியமைச்சரைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் சந்தேகப்பட ஒன்றுமேயில்லை. வெட்டியாக சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் இந்த மாதிரி (எழுத்து, கருத்துப் பகிரல்) உருப்படியாக எதாவது செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சிங் ஆலோசனை கூறியதையும் கவனிக்க வேண்டும்.

அரசியல், பொருளாதாரம் என்ற எல்லையைக் கடந்து பல பரிமாணங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. குழந்தைத் தொழிலாளர், அரசியல் நேர்மை, குறைவான வருமான வரி - நிறையைப் பேர் வரி கட்டுதல் என்ற சூழ்நிலை, நிதிப் பற்றாக்குறை, அந்நியச் செலவாணியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல், மகளிர் மேம்பாடு, உலக வர்த்தக நிறுவனம் (WTO), காவிரி நதி நீர்ப்பிரச்சினை, சுற்றுலாத் துறை, அரசுத் துறைப் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்பது (தனியார்மயமாக்கல்), அந்நிய முதலீடு, விடுதலைப் புலிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தான் ராஜீவ் காந்தியின் செல்லப்பிள்ளை என்பதைச் சில இடங்களில் நிரூபிக்கிறார். பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ராஜீவ் கனவு கண்டார். அதில் நமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், போபர்ஸ் ஆயுத விவகாரத்தில் ராஜீவை அளவுக்கு மீறிப் புனிதப்படுத்த முயல்வதாகத் தெரிகிறது. "இலஞ்சம் வாங்கினது உண்மை. ஆனா, யார் வாங்கினதுன்னு நிரூபிக்க முடியாது" என்று சொல்லி வாஜ்பாயைக் (அவரே ஒரு வார்த்தை அலங்கார மூர்த்தி) குழப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

'அறிஞர்' என்ற மயிலிறகைத் தனது தொப்பியில் சூடி, தெளிவாகப் பேசும் இந்த அரசியல்வாதி தனது ஓய்வு நேரத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்தி இந்த நூலை உருவாக்கியுள்ளார். அதைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தயங்காமல் சொல்வேன். அதே நேரம், "நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் உங்கள் ஆட்சிக்கும் பொருந்துமா?" என்ற கேள்வியையும் கேட்பேன்.

கூடவே இன்னொரு கேள்வி. பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை ஏற்றுகிறது. அதே நேரம் டாலருக்கும் நிகராக இந்திய ரூபாயில் மதிப்பு உயர்ந்து போகாமல் இருப்பதற்காக டாலரை வாங்கிக் குவித்து பணப்புழக்கத்தைக் (ரூபாயை) கூட்டுகிறது. வலுவான இந்திய ரூபாயைத் தாங்கி முன்னேறும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லையென்று நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் நினைக்கிறார்களா?