Saturday, November 04, 2006

கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!!

- குப்புசாமி செல்லமுத்து

சற்றுத் தாமதமாகவே இருந்தாலும்....தவிர்க்க முடியாத பதிவு..

சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு சா·ப்ட்வேர் கம்பெனி வாசல். கழுத்தில் ஐடி கார்டைத் தொங்கவிட்டபடி தம் அடிக்க வெளியே வரும் ஒரு இளைஞனை நான்கு நபர்கள் சூழ்கிறார்கள். வெவ்வேறு வங்கிகளில் இருந்து வந்திருக்கும் அந்தப் பிரதிநிகள், "சார் சார் லோன் வாங்கிக்குங்க சார். எந்த டாக்குமென்டும் தேவையில்லை சார். போன மாச சேலரி ஸ்லிப் மட்டும் போதும்" என்று மொய்க்கிறார்கள்.

இன்னொரு காட்சி. அந்த இளைஞனை விட பத்து மடங்கு மாதம் சம்பாதிக்கிற வளரும் தொழிலதிபர் ஒருவர் இரண்டு மாதமாக வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார். எல்லாம் ஐந்து இலட்ச ரூபாய் கடனுக்காகத்தான். தாத்தாவோட பான் நம்பர், பாட்டியோட வருமான வரித் தாக்கல் விவரம் என்று விவகாரமான ஆவணங்களைக் கேட்டு அவரைக் குடைகிறார்கள்.

நகைச்சுவைக்காக சற்று மிகைப்படுத்திச் சொன்னது போலத் தோன்றினாலும் சோகம் இழையோடும் உண்மை இதுதான். இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில் முனைவர்களுக்கே இந்த நிலை என்றால் அன்றாடம் காய்ச்சிகளின் கதி என்ன? பூ வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் அன்றைய வியாபாரத்திற்கு ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு எந்த ஒரு வங்கிக் கிளையையும் நாட முடியாதே! பிறகு, கந்து வட்டிக்காரர்களே கதி என்று சரணடைய வேண்டியதுதான். நாளெல்லாம் உழைத்து கிடைக்கும் சொற்ப இலாபத்தின் பெரும் பகுதியை மீட்டர் வட்டி தின்றது போக மிச்சமிருப்பது இவர்களின் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருக்கிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அத்தி பூத்தாற்போல சில வங்கிகள் கடன் கொடுத்தாலும், தவணை தேதி தவறினால் மூன்றாவது நாளே வந்து குரல்வலையில் காலை வைத்து மிதித்து விடுவார்கள்.

சாமானிய மனிதனுக்கான நியாயமான சிறு நிதித்தேவைகள் இப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிற சூழ்நிலையில் வசிக்கும் நமது கவனத்தை பங்களாதேஷைச் சேர்ந்த பொருளாதார மேதை முகமது யூனுஸ் பெற்றுள்ள நோபெல் பரிசு 'அட' போட்டு ஈர்க்கிறது. பங்களாதேஷ் மக்களோடு கூடச்சேர்ந்து நமது மேற்கு வங்காள மக்களும் 'எங்கள் பெங்காளி' என்று கொண்டாடும் இவர் 'மைக்ரோகிரெடிட்' எனப்படும் குறுங்கடன்களின் தந்தை என அறியப்படுகிறார். ஏழ்மைக்கு தானமோ தர்மமோ முடிவல்ல. அது மேலும் சோம்பேறித்தனத்தை வளர்க்கும். அதை விட, சுயமாக உழைத்து தன்மானத்துடன் பிழைக்க வைப்பதே வழி என்று உறுதியாகச் சொல்பவர் அவர்.

ஒரு சினிமா கதாநாயகனைப் போல யூனுஸ் வாழ்க்கை ஆரம்பித்தது. அவர் அமெரிக்காவில் டாக்டர் படிப்பு மேற்கொண்ட போது மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவின் ஆதரவோடு பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியது, கிழக்கு பாகிஸ்தான் ஊழியர்களை தூதரகத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தது என்று புகழ்பெற்றார். அதன் பிறகு அங்கு பார்த்த பொருளாதாரப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு தாய்நாடு வந்து சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் அதே பணியை ஏற்றார்.

அந்தச் சமயத்தில் களப்பணியின் போது மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கிராமப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் 5 டாகா(பங்ளாதேஷ் நாணயம்) பணம் கடன் வாங்கியதால் வட்டிக்கடைக்காரருக்குக் கிட்டத்தட்ட அடிமையாகவே மாறியிருந்தார். மேலும் விசாரித்த போது அதே போல 42 பெண்கள் அந்த ஊரில் இருந்ததைக் கண்டார். அவர்களின் ஒட்டு மொத்த 856 டாகா (27 டாலர்) கடனை எல்லாம் தானே அடைத்து அது வரை அவர்களைப் பீடித்திருந்த அநியாய வட்டியில் இருந்து விடுவித்தார்.

பிறகென்ன? கைவினைப் பொருளில் கிடைத்த இலாபத்தைக் கொண்டு வெகு சீக்கிரத்தில் அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டார்கள்.
இந்த எளிமையான தத்துவத்தின் அடியொட்டி அவரது கிராமின் வங்கி நிறுவப்பட்டது. இப்போது 65 இலட்சம் பேர் அதில் கடன் வசதி பெறுகிறார்கள். அதில் 96 சதவீதம் பெண்கள். 98.5 சதவீதம் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஏய்ப்பதெல்லாம் இல்லை. தவணை செலுத்த முடியவில்லை என்றாலும் கூட என்ன பிரச்சினை என்று ஆராய்ந்து அடுத்த முறை செலுத்துமாறு ஊக்குவிக்கிறார்கள், மிரட்டுவதில்லை. தேவையானால் மேலும் மேலும் கடன் தருகிறார்கள். ஆனால் தள்ளுபடி மாத்திரம் இல்லை.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள் என்ற கூற்று உண்டு. பரவலாக விவாதிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி மேல்தட்டு மக்களை மேலும் உயர வைக்கிறதே தவிர ஏழைகளை முன்னேற்றினோமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் பெண்களின் பாடு மிகவும் பரிதாபமானது. நியாயமான வட்டியில் ஒரு சிறு தொகை கடன் கிடைத்தால் அவர்களே சுயமாக தொழில் முனைய முடியும். காந்திகிராமப் பல்கலைக் கழகம் போன்ற அமைப்புகள் சுய உதவிக் குழுக்களை உருவாக்க பெரும் தூண்டுதலாக இருக்கின்றன.

ஆனால் கடன் கொடுக்க யாரும் இல்லை. கண்ணியமாக உழைத்து வாங்கிய கடனைப் பொறுப்போடு திரும்பச் செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தால் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் கெளரவமான கல்வி, சுகாதரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற முடியும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். வறுமையும், ஏற்றத்தாழ்வும் ஒழிந்தாலன்றி குற்றங்களும், தீவிரவாதமும் குறையாது.

வங்கிகள் நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று குறுங்கடன் வழங்குவதில் சிரமம் இருக்கலாம். சொகுசாக இருந்து பழக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் அலைவதற்கு முகம் சுழிக்கலாம். அது போக நிறையச் செலவுகளும் ஏற்படும். அதற்காகவே மைக்ரோ ·பைனான்ஸ் இன்ஸ்டிடூஷன் (MFI) என்ற தனி அமைப்புகள் அமைத்து அவற்றை சுய உதவிக் குழுவோடு இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி வழி செய்திருக்கிறது. சாதாரண வங்கி அலுவலுக்கு அப்பால் கூட்டுறவுக் கட்டமைப்புப் போல இந்த இரு அமைப்புகளும் தன்னார்வத்துடன் இயங்கி பணத்தேவை உடையவர்களைக் கண்டறிந்து உதவ இயலும். இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் குறுங்கடன்கள் மூலம் பயன் அடைந்த நிகழ்வுகள் பல உள்ளன. இருந்தாலும் நமது மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இது போதுமானதாக இல்லை. அது தவிர இந்த முறையில் வழங்கபட்ட கடனை வசூலிக்க ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட வற்புறுத்தல்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் முகமது யூனுசுக்கு நோபெல் பரிசு தந்திருக்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டன் சொன்னார். அதற்கு யூனுஸ், "கிளிங்டன் எனது நண்பர். நண்பர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வது இயல்புதான்" என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார்.

இப்போதாவது கிடைத்திருக்கிறதே என்ற திருப்தி ஒரு பக்கம் இருந்தாலும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுதான் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று கருதுவது இயல்பு. ஆனால், "சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வறுமையில் இருந்து விடுபட்டால் ஒழிய நீடித்த அமைதியை ஏற்படுத்த முடியாது. அதற்குக் குறுங்கடனின் பங்களிப்பு முக்கியமானது. அந்த முயற்சியைக் கெளரவிக்கும் விதமாகத்தான் அமைதிக்கான பரிசு" என்று நோபெல் கமிட்டி தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

இந்தக் கெளரவம் முகமது யூனுஸ் என்ற தனிமனிதனுக்கோ அவரது வங்கிக்கோ பெருமை சேர்ப்பதை விட, 'மைக்ரோ கிரெடிட்' கோட்பாடு ஏற்படுத்தும் பொருளாதார, சமூக மாற்றங்களை உலகம் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும், மூன்றாம் உலக நாடுகள், ஏன் முன்னேறிய நாடுகளே கூட, இதில் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமையுமானால் மகிழ்ச்சி. இதை நாம் சொல்லவில்லை. 66 வயதாகும் யூனுஸ் சொல்கிறார்.

நமது வங்கிகளுக்கு, அதிலும் அரசு வங்கிகளுக்கு இது எட்ட வேண்டும். அநியாய வட்டிக் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காக்க வேண்டும். அதே போல கடன் தள்ளுபடி செய்வதை விட மக்களுக்கு மேலும் கடன் வழங்கி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை அவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கம் அளித்துக் காத்திருக்கும் துணிச்சல் உள்ள அரசும் வேண்டும். அடிக்கடி வெள்ளத்திலும், புயலிலும் சிதறும் ஒரு சிறு நிலப்பரப்பில் இருந்து முகமது யூனுஸ் என்ற தனிமனிதன் செய்ததை பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களான நம்மால் செய்ய முடியாதா என்ன?

14 comments:

பங்காளி... said...

வாங்க குப்புசாமி,

என்ன ஆச்சு கொஞ்ச நாளா ஆளக்காணோம்....இம்மாதிரியான பதிவுகளை இங்கே எழுத யாருமில்லை, எனவே தயவு செய்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுமாறு வேண்டுகிறேன்.

சபாபதி சரவணன் said...

குப்புசாமி,

நல்லதொரு பதிவு.

//கண்ணியமாக உழைத்து வாங்கிய கடனைப் பொறுப்போடு திரும்பச் செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தால் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் கெளரவமான கல்வி, சுகாதரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற முடியும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். வறுமையும், ஏற்றத்தாழ்வும் ஒழிந்தாலன்றி குற்றங்களும், தீவிரவாதமும் குறையாது.//

முதிற்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. பாராட்டு.

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல பதிவு குப்புசாமி,
தமிழ்நாட்டில் கூட மதுரை பகுதியை சேர்ந்த சின்ன பாப்பா என்ற பெண்மணி இது மாதிரியான ஒரு முயற்சி எடுத்து அது வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது அல்லவா? அவர்களுக்கு அப்துல் கலாம் கூட விருது கொடுத்தார் இல்லையா?

Sivabalan said...

குப்புசாமி,

நல்ல பதிவு.

நன்றாக எழுதியுள்ளீர்கள்


//சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வறுமையில் இருந்து விடுபட்டால் ஒழிய நீடித்த அமைதியை ஏற்படுத்த முடியாது. அதற்குக் குறுங்கடனின் பங்களிப்பு முக்கியமானது. //

ஆழ்ந்த வரிகள்

பொன்ஸ்~~Poorna said...

இன்னும் இந்த வலைப்பூ இருக்கா? நாணயம் விகடன் தவிர எதுவுமே நினைவில்லையோன்னு நினைச்சேன் :))))

Kuppusamy Chellamuthu said...

வாங்க பங்காளி. கொஞ்ச நாளா திசை மாறிப்போய் விட்டேன். அதான்.. மற்றபடி இது பற்றியெல்லாம் எழுத நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

நன்றி சபாபதி சரவணன். மகிழ்ச்சியாக இருக்கிறது

Kuppusamy Chellamuthu said...

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் சந்தோஷ். அந்த அம்மாவைப் பற்றி.

நன்றிங்க சிவபாலன்.

வாம்மா பொன்ஸ்..உங்களத்தான் தேடிட்டு இருந்தேன்.

மங்கை said...

ரொம்ப நல்லா எழுது இருக்கீங்க..

மனித வள மேம்பாடிற்கு உறுதுணையான நிற்கும் திட்டம் இது.. ஏழ்மை நிலையில் உள்ளோர் தன்மானத்துடன், கண்ணியத்தை இழக்காமல், தங்கள் நிலையை மேம்படுத்த நல்லதொரு திட்டம்

அவசியமான ஒரு பதிவு...

நாணயம் விகடன்ல எழுதினதுக்கும் பாராடுக்கள்.. என்ன மாதிரி மக்குக்கெல்லாம் புரியர மாதிரி எழுதி இருந்தீங்க

வாழ்த்துக்கள்

மங்கை

C.M.HANIFF said...

Nalla payanulla pathivu :)

Anonymous said...

Very good post!! It make us to think... We expect more posts like this from you.

Anonymous said...

thalaivaa, budget patti edavattu eluduvingala? aavalaa irukkoom thalaivaa...

சக்தி www.sakthi-ennangal.blogspot.com said...

மிகவும் நேர்த்தியாக, எளிமையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்துக்களில் அனுபவ முதிர்ச்சி தெரிகின்றது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

K.R.அதியமான். 13230870032840655763 said...

Interest rates are directly proportional to inlfation (which is a funtion of deficts).
Pls see :
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

Pls see this excellent blog of a young american working in a microfinance org in Delh :
http://www.bankerinindia.typepad.com/

புரட்சி தமிழன் said...

அந்த புதிய கட்சியில் கொள்கை பரப்பு செயலர் அறிக்கைகளை படித்துக்கொண்டிருக்கிறார்.

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிச்சை காரர்கள், அனாதைகள், ஏழைகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.
2. லஞ்சமும் ஊழலும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
3. மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்
4. சிறைகள் வெறுமையாகவே இருக்கும்
5. குற்றம் முற்றிலும் ஒழிந்திருக்கும் யாரும் குற்றம் செய்யும் வாய்ப்பின்றி இருக்கும்
6. நீதி மன்றங்கள் நிற்க ஆளின்றி இருக்கும்
7. குறைந்த பட்ச்சம் இலநிலைப்பட்டம் பெறாதவர்கள் ஒருவர்கூட இருக்கமாட்டார்
8. பசி எப்படி இருக்கும் என்று மறந்திருப்பர்.
9. திருடு கொலை கொள்ளை எல்லாம் ஒரு பழைய தமிழ் சொல்லாக இருக்கும்.
10. சாலைகள் நெறிசல் இன்றியும் பழுது இன்றியும் பராமரிக்கப்படும்.
11. தெருக்களும் சாலைகளும் மண் தூசியின்றி சுத்தமாக பராமரிக்கப்படும்.
12. அனைத்து கடைகளிலும் பயன் பாட்டிற்க்கு உகந்த தரமான பொருட்களே கிடைக்கும்
13. குடினீர் முற்றிலும் சுத்தம் செய்து வழங்கப்படும்.
14. உணவு விடுதிகள் நியாயமான விலையில் சுத்தமான உணவுகள் சுத்தமான சூழலில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
15. சுகாதாரம் நன்றாக பராமரிக்கப்படுவதால் பிரசவத்திற்க்கு தவிற வேறு எதற்க்கும் மருத்துவமணைக்கு வரமாட்டார்கள்.
16. அனைத்து மக்களுக்கும் வருடாந்திர சோதனைகள் செய்து உடலில் உருவாகும் ஊட்டச்சத்து குறைகள் சமன் படுத்தப்படும்.
17. அனைத்து வாகனங்களும் மாதாந்திர சோதனை செயவதின் மூலமும் சிறப்பான சாலை அமைப்பாலும் விபத்தே ஏற்ப்படாதிருக்கும்.
18. யாரும் யாரையும் எதையும் ஏமாற்ற முடியாத அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.
19. அனைவருக்கும் அமெரிக்க குடிமகனைக்காட்டிலும் ஒரு படி மேலான வசதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கும்.
20. 24 மனி நேரமும் உதவி மையம் தயாராக இருக்கும் யாரும் எப்போதும் தொலைபேசி மூலமும் இனையம் மூலமும் உதவி கோரலாம்.
21. நாடு முழுவதும் மாசற்ற வாழ் நிலை சூழ்னிலையாக மாற்றப்பட்டிருக்கும்.
22. அனைத்து மாநகரங்களும் அதிவேக மாநில அரசு இரயிலினால் இனைக்கப்பட்டிருக்கும்.
23. அனைவரின் உரிமைகளும் பாது காக்கப்பட்டிருக்கும்.
24. வேலை வாய்ப்பின்றி யாருமே இருக்க மாட்டார்கள்.
25. அனைத்து வாகனங்களும் நவீன மயமாக்கப்பட்டு ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு விபத்தேதும் நடக்காமல் சாட்டிலைட் மூலம்
கண்கானிக்கப்படும்.
26. அனைத்து விடுதிகளும் நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற்ற ஓட்டல்களுக்கு இனையாக சுகாதாரம் பராமரிக்கப்பட்டிருக்கும்.
27. உலகில் உள்ள அனைத்து நவீன தயாரிப்புகளின் தொழிர்ச்சாலைகளும் அரசினாலேயே நிறுவப்பட்டிருக்கும்.
28. ஆராய்ச்சி ஆர்வமுள்ள அனைவருக்கும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டிருக்கும்.
29. வெளி மாநிலங்களில் உள்ளோர் இங்கு குடியேறவோ வேலை செய்யவோ இயலாதவாறு அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும்.
30. மது வகைகள் மற்றும் புகையிலை தயாரிப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கும்.
31. மக்களின் பணத்திற்க்கும் உழைப்பிற்க்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும். 32. அடகு கடைகள் தனியார் வட்டித்தொழில் முழுவது மாக ஒழிக்கப்பட்டிருக்கும்.
33. அனைவருக்கும் குறைந்தபட்ச்ச எல்லையில் கடன் அட்டைகள் வட்டியின்றி அரசினால் வழங்கப்படும்.
34. அனைத்து நகரங்கள் பேரூர்களில் 24 மனி நேரமும் உணவு முதல் அத்தனை அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்க செய்யப்பட்டிருக்கும்.
35. அனைத்து துறைகளிலும் முன்னேற அனைவருக்கும் தேவையான பயிற்ச்சிகள் அரசினாலேயே அளிக்கப்படும்.
36. உலகிலேயே மிகச்சிறந்த பாடதிட்டம் மானவர்களுக்கு வழங்கப்படும்.
37. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் நவீன உள்கட்டமைப்புடன் மாற்றப்பட்டு தூய்மையாக பராகரிக்கப்படும்.
38. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் ஆன் லைன் மற்றும் செயற்க்கை கோள் மூலம் இனைக்கப்படும்.
39. எல்லா பாடங்களும் எளிதில் அனைத்து மானவர்களும் புரிந்துகொள்ளும் அளவிற்க்கு பாடதிட்டம் இருக்கும்.
40. பாடதிட்டங்கள் வீடியோ காட்ச்சிகளாக விளக்கங்களுடனும் கதை தொகுப்புகளுடன் நேரடி ஒளிபரப்பாக திரையிட்டு காட்டப்படும்.
41. ஆசிரியர்கள் மானவர்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களை தீர்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
42. காலத்தை வீனடிக்கும் தேவயற்ற அலுவலக வழிமுறைகள் அனைத்தும் மாற்றப்படும்.
43. அனைத்து திட்டங்களும் ஒப்பந்ததாரார் இன்றி அரசினாலேயே துரிதமாக செய்யப்படும்.
44. அனைத்து பணிகளுமே போர்க்கால அடிப்படை பணிகள் போலவே நடத்தப்படும்.
45. ஒரு நாளைக்கு 6 மனி நேரம் மட்டுமே பணி செய்யும் நேரமாக மாற்றப்படும்.
46. யாருக்கும் அதிக பணி சுமை மற்றும் கடினமான வேலைகள் செய்ய நேரிடாமல் வேலை அமைப்பு இருக்கும்.
47. அனைத்து பணியாளர்களும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின்படியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
48. அனை வருக்கும் சராசரி ஆயுட்க்காலம் 90 ஆண்டுகளாக மாற்ற முயற்சி செய்யப்படும்.
49. ஒருவரின் வீட்டுக்கு வேறொருவர் வேலைக்காரார் களாக இருக்கமாட்டார்கள்.
50. அனைவரின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் முழு உத்திரவாதம் அளிக்கப்படும்.
etc.......
இப்படி இருந்தா எப்படி இருக்கும்