Saturday, November 04, 2006

கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!!

- குப்புசாமி செல்லமுத்து

சற்றுத் தாமதமாகவே இருந்தாலும்....தவிர்க்க முடியாத பதிவு..

சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு சா·ப்ட்வேர் கம்பெனி வாசல். கழுத்தில் ஐடி கார்டைத் தொங்கவிட்டபடி தம் அடிக்க வெளியே வரும் ஒரு இளைஞனை நான்கு நபர்கள் சூழ்கிறார்கள். வெவ்வேறு வங்கிகளில் இருந்து வந்திருக்கும் அந்தப் பிரதிநிகள், "சார் சார் லோன் வாங்கிக்குங்க சார். எந்த டாக்குமென்டும் தேவையில்லை சார். போன மாச சேலரி ஸ்லிப் மட்டும் போதும்" என்று மொய்க்கிறார்கள்.

இன்னொரு காட்சி. அந்த இளைஞனை விட பத்து மடங்கு மாதம் சம்பாதிக்கிற வளரும் தொழிலதிபர் ஒருவர் இரண்டு மாதமாக வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார். எல்லாம் ஐந்து இலட்ச ரூபாய் கடனுக்காகத்தான். தாத்தாவோட பான் நம்பர், பாட்டியோட வருமான வரித் தாக்கல் விவரம் என்று விவகாரமான ஆவணங்களைக் கேட்டு அவரைக் குடைகிறார்கள்.

நகைச்சுவைக்காக சற்று மிகைப்படுத்திச் சொன்னது போலத் தோன்றினாலும் சோகம் இழையோடும் உண்மை இதுதான். இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில் முனைவர்களுக்கே இந்த நிலை என்றால் அன்றாடம் காய்ச்சிகளின் கதி என்ன? பூ வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் அன்றைய வியாபாரத்திற்கு ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு எந்த ஒரு வங்கிக் கிளையையும் நாட முடியாதே! பிறகு, கந்து வட்டிக்காரர்களே கதி என்று சரணடைய வேண்டியதுதான். நாளெல்லாம் உழைத்து கிடைக்கும் சொற்ப இலாபத்தின் பெரும் பகுதியை மீட்டர் வட்டி தின்றது போக மிச்சமிருப்பது இவர்களின் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருக்கிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அத்தி பூத்தாற்போல சில வங்கிகள் கடன் கொடுத்தாலும், தவணை தேதி தவறினால் மூன்றாவது நாளே வந்து குரல்வலையில் காலை வைத்து மிதித்து விடுவார்கள்.

சாமானிய மனிதனுக்கான நியாயமான சிறு நிதித்தேவைகள் இப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிற சூழ்நிலையில் வசிக்கும் நமது கவனத்தை பங்களாதேஷைச் சேர்ந்த பொருளாதார மேதை முகமது யூனுஸ் பெற்றுள்ள நோபெல் பரிசு 'அட' போட்டு ஈர்க்கிறது. பங்களாதேஷ் மக்களோடு கூடச்சேர்ந்து நமது மேற்கு வங்காள மக்களும் 'எங்கள் பெங்காளி' என்று கொண்டாடும் இவர் 'மைக்ரோகிரெடிட்' எனப்படும் குறுங்கடன்களின் தந்தை என அறியப்படுகிறார். ஏழ்மைக்கு தானமோ தர்மமோ முடிவல்ல. அது மேலும் சோம்பேறித்தனத்தை வளர்க்கும். அதை விட, சுயமாக உழைத்து தன்மானத்துடன் பிழைக்க வைப்பதே வழி என்று உறுதியாகச் சொல்பவர் அவர்.

ஒரு சினிமா கதாநாயகனைப் போல யூனுஸ் வாழ்க்கை ஆரம்பித்தது. அவர் அமெரிக்காவில் டாக்டர் படிப்பு மேற்கொண்ட போது மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவின் ஆதரவோடு பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியது, கிழக்கு பாகிஸ்தான் ஊழியர்களை தூதரகத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தது என்று புகழ்பெற்றார். அதன் பிறகு அங்கு பார்த்த பொருளாதாரப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு தாய்நாடு வந்து சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் அதே பணியை ஏற்றார்.

அந்தச் சமயத்தில் களப்பணியின் போது மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கிராமப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் 5 டாகா(பங்ளாதேஷ் நாணயம்) பணம் கடன் வாங்கியதால் வட்டிக்கடைக்காரருக்குக் கிட்டத்தட்ட அடிமையாகவே மாறியிருந்தார். மேலும் விசாரித்த போது அதே போல 42 பெண்கள் அந்த ஊரில் இருந்ததைக் கண்டார். அவர்களின் ஒட்டு மொத்த 856 டாகா (27 டாலர்) கடனை எல்லாம் தானே அடைத்து அது வரை அவர்களைப் பீடித்திருந்த அநியாய வட்டியில் இருந்து விடுவித்தார்.

பிறகென்ன? கைவினைப் பொருளில் கிடைத்த இலாபத்தைக் கொண்டு வெகு சீக்கிரத்தில் அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டார்கள்.
இந்த எளிமையான தத்துவத்தின் அடியொட்டி அவரது கிராமின் வங்கி நிறுவப்பட்டது. இப்போது 65 இலட்சம் பேர் அதில் கடன் வசதி பெறுகிறார்கள். அதில் 96 சதவீதம் பெண்கள். 98.5 சதவீதம் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஏய்ப்பதெல்லாம் இல்லை. தவணை செலுத்த முடியவில்லை என்றாலும் கூட என்ன பிரச்சினை என்று ஆராய்ந்து அடுத்த முறை செலுத்துமாறு ஊக்குவிக்கிறார்கள், மிரட்டுவதில்லை. தேவையானால் மேலும் மேலும் கடன் தருகிறார்கள். ஆனால் தள்ளுபடி மாத்திரம் இல்லை.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள் என்ற கூற்று உண்டு. பரவலாக விவாதிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி மேல்தட்டு மக்களை மேலும் உயர வைக்கிறதே தவிர ஏழைகளை முன்னேற்றினோமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் பெண்களின் பாடு மிகவும் பரிதாபமானது. நியாயமான வட்டியில் ஒரு சிறு தொகை கடன் கிடைத்தால் அவர்களே சுயமாக தொழில் முனைய முடியும். காந்திகிராமப் பல்கலைக் கழகம் போன்ற அமைப்புகள் சுய உதவிக் குழுக்களை உருவாக்க பெரும் தூண்டுதலாக இருக்கின்றன.

ஆனால் கடன் கொடுக்க யாரும் இல்லை. கண்ணியமாக உழைத்து வாங்கிய கடனைப் பொறுப்போடு திரும்பச் செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தால் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் கெளரவமான கல்வி, சுகாதரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற முடியும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். வறுமையும், ஏற்றத்தாழ்வும் ஒழிந்தாலன்றி குற்றங்களும், தீவிரவாதமும் குறையாது.

வங்கிகள் நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று குறுங்கடன் வழங்குவதில் சிரமம் இருக்கலாம். சொகுசாக இருந்து பழக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் அலைவதற்கு முகம் சுழிக்கலாம். அது போக நிறையச் செலவுகளும் ஏற்படும். அதற்காகவே மைக்ரோ ·பைனான்ஸ் இன்ஸ்டிடூஷன் (MFI) என்ற தனி அமைப்புகள் அமைத்து அவற்றை சுய உதவிக் குழுவோடு இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி வழி செய்திருக்கிறது. சாதாரண வங்கி அலுவலுக்கு அப்பால் கூட்டுறவுக் கட்டமைப்புப் போல இந்த இரு அமைப்புகளும் தன்னார்வத்துடன் இயங்கி பணத்தேவை உடையவர்களைக் கண்டறிந்து உதவ இயலும். இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் குறுங்கடன்கள் மூலம் பயன் அடைந்த நிகழ்வுகள் பல உள்ளன. இருந்தாலும் நமது மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இது போதுமானதாக இல்லை. அது தவிர இந்த முறையில் வழங்கபட்ட கடனை வசூலிக்க ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட வற்புறுத்தல்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் முகமது யூனுசுக்கு நோபெல் பரிசு தந்திருக்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டன் சொன்னார். அதற்கு யூனுஸ், "கிளிங்டன் எனது நண்பர். நண்பர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வது இயல்புதான்" என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார்.

இப்போதாவது கிடைத்திருக்கிறதே என்ற திருப்தி ஒரு பக்கம் இருந்தாலும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுதான் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று கருதுவது இயல்பு. ஆனால், "சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வறுமையில் இருந்து விடுபட்டால் ஒழிய நீடித்த அமைதியை ஏற்படுத்த முடியாது. அதற்குக் குறுங்கடனின் பங்களிப்பு முக்கியமானது. அந்த முயற்சியைக் கெளரவிக்கும் விதமாகத்தான் அமைதிக்கான பரிசு" என்று நோபெல் கமிட்டி தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

இந்தக் கெளரவம் முகமது யூனுஸ் என்ற தனிமனிதனுக்கோ அவரது வங்கிக்கோ பெருமை சேர்ப்பதை விட, 'மைக்ரோ கிரெடிட்' கோட்பாடு ஏற்படுத்தும் பொருளாதார, சமூக மாற்றங்களை உலகம் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும், மூன்றாம் உலக நாடுகள், ஏன் முன்னேறிய நாடுகளே கூட, இதில் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமையுமானால் மகிழ்ச்சி. இதை நாம் சொல்லவில்லை. 66 வயதாகும் யூனுஸ் சொல்கிறார்.

நமது வங்கிகளுக்கு, அதிலும் அரசு வங்கிகளுக்கு இது எட்ட வேண்டும். அநியாய வட்டிக் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காக்க வேண்டும். அதே போல கடன் தள்ளுபடி செய்வதை விட மக்களுக்கு மேலும் கடன் வழங்கி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை அவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கம் அளித்துக் காத்திருக்கும் துணிச்சல் உள்ள அரசும் வேண்டும். அடிக்கடி வெள்ளத்திலும், புயலிலும் சிதறும் ஒரு சிறு நிலப்பரப்பில் இருந்து முகமது யூனுஸ் என்ற தனிமனிதன் செய்ததை பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களான நம்மால் செய்ய முடியாதா என்ன?