Friday, June 09, 2006

எரியும் பங்குச் சந்தை!!

- குப்புசாமி செல்லமுத்து

மே மாதம் 5 ஆம் தேதி "எரியும் பங்குச் சந்தையும் எண்ணெய் வார்க்கும் மியூச்சுவல் ஃபண்ட்களும்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு பதிவு, தலைப்பு நீளமாக இருந்தமையால் பிரசுரிக்கப்படாமல் அழிந்து விட்டது. அதே சரக்கு மீள் பதிவாக மீண்டுமொரு முறை இங்கே தலைப்பு மாறி வந்துள்ளது. I thought it is appropriate to re-publish this now just after reading, "mutual funds had been net sellers to the tune of Rs.500 redemption pressure". ஒரு மாதத்திற்கு முந்தையது போலவே இன்றும் இக்கட்டுரை பொருந்துமென்பதே எனது எண்ணம். சரி....கீழே வாசிப்போம்..
------------------------------------------------------------------

பாமரன் முதல் ப.சிதம்பரம் வரையில் அனைவரது பேச்சிலும் அடிக்கடி அடிபடுவது பங்குச்சந்தையும், பங்குசார் பரஸ்பர நிதிகளும் (equity mutual funds) தான் என்றால் அது மிகையல்ல.

பங்கு முதலீடு என்றாலே அஞ்சி ஓடிய பல்லாயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்து மக்களையும், அவர்தம் காசையும் திரும்பக் கையைப் பிடித்து அழைத்து வந்திருப்பன பரஸ்பர நிதி நிறுவனங்கள் தான். அதற்காக ஒரு ஸ்பெஷல் வந்தனம். இதுவரை இந்த நிறுவனங்கள் நமது நாட்டிலும், உலகின் ஏனைய பிற தேசங்களிலும் ஆற்றியுள்ள பணி பொற்றுதலுக்கு உரியது.

"மியூச்சுவல் ஃபண்ல போன வருசந்தான் பத்தாயிரம் பொட்டேன். இப்போ இருபது ஆயிரம் ஆகிடுச்சு. நீயும் உன்னோட பி.எஃப், பேங்க் பேலன்ஸ் எல்லாத்தையும் எடுத்து மியூச்சுவல் ஃபண்ல போட்ரு. கவலையே இல்ல. போட்ட பணம் கம்மியெல்லாம் ஆகாது. ஆனா ஷேர்ல மட்டும் போடாதே, அது ரொம்ப ரிஸ்க்" எனப் பல பேர் அவர்களுக்குத் தெரிந்த சில பேருக்கு உபதேசம் - நம் எதிரி தேசத்தை விடவும் அபாயகரமான தேசம் - செய்வதை என் காது கூடக் கேட்டிருக்கிறேன். பலமுறை கேட்ட இது போன்ற ஆபத்தான அறிவுரைகளின் விளைவே இந்தக் கட்டுரை.

"நான் இறக்கப்போகும் இடம் எது என்று முன் கூட்டியே தெரிந்தால், அந்த இடத்ததுக்குப் போவதைத் தவிர்த்து விடுவேன். எனக்கு மரணமே இருக்காது", என்று யாரோ சொன்னதாக நினைவு. புதிய மொழிகளைப் பயிலும் சமயங்களில் அவற்றிலுள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் அறிந்து வைத்துக்கொள்வது பலரது வாடிக்கை. அப்படித்தான் பங்கு வர்த்தகமும். அதிலுள்ள வசீகரமான அம்சங்களை கண்டு ஈர்க்கப்படும் முன், பின் வரக்கூடிய பிரச்சினைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது விவேகம். அட அவ்வளவு ஏங்க... விலைமாதர் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு, அங்கே கிடைக்கும் சுகத்தை மாத்திரம் நினைத்து மதியிழக்காமல், ஆணுறை எடுத்துச் செல்லச் சொல்லி வலியுறுத்துகிறது சமூகம். மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுபவர்களுக்கு மட்டும் அத்தகைய விழிப்புணர்வு கிடைக்கக்கூடாதென்பது சாபமா?

"என்ன மேன் நீ? நாமா இன்வெஸ்ட் பண்ணினாத்தான் வம்பு. திறமையான மியூச்சுவல் ஃபண்ட் மூலமா பண்ணா என்ன தப்பு? காரை நாம ஒட்டுறதுக்குப் பதிலா டிரைவர் வச்சு ஓட்ற மாதிரி தானே?" இது என்னுடன் வேலை செய்யும் ஒருவர் எங்கோ படித்து விட்டுச் செய்த வாதம். இந்த வாதத்திற்குப் பதிலளிக்கும் முன் நாம் சற்று அலச வேண்டியது கொஞ்சம் இருக்கிறது.

எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கையாண்டாலே ஏமாற்றங்களைத் தவிர்த்து விட முடியும். கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் இந்தியப் பங்குகள் எட்டிய வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொண்டு வருடந்தோறும் 40 - 45% வளர்ச்சியை ஈட்டி விட முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால், பல பரஸ்பர நிதிகளின் நிகர சொத்து மதிப்பு (net asset value) 2001-02 சமயத்தில் ஓராண்டிலேயே 30% குறைந்ததுண்டு. முதலீட்டின் மதிப்பு 33% குறைந்தால், நீங்கள் போட்ட காசை எடுக்க மறுபடியும் 50% அதிகரிக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ரூ.100 இல் மூன்றில் ஒரு பங்கு குறைந்தால் ரூ.66.66 ஆகி விடும். மீண்டும் அது ரூ.100 ஆக மாற, தற்போதைய 66.66 இல் பாதியை - அதாவது 33.33 - சம்பாதிக்க வேண்டியதாகிறது. அதே போல 50% நஷ்டத்தை சரி செய்ய அது இரு மடங்கா சம்பாதிக்க வேண்டும். 100 இல் பாதியை இழந்தால் அது 50 ஆகிவிடும். 50 மீண்டும் 100 ஆக அதை இரட்டிக்க வேண்டும்.

இந்த நாட்காட்டி வருடத்தில் - பொருளாதாரத்தில், நிதியாண்டு (financial year ஏப்ரல் முதல் மார்ச் வரை) மற்றும் நாட்காட்டி ஆண்டு (calender year - ஜனவரி முதல் டிசம்பர் வரை) இரண்டும் ஒன்றல்ல. யாராவது வெறுமனே ஒரு வருடத்தைக் குறிப்பிட்டால் குழப்பங்கள் நேரலாம். அதனாலாயே இவ்வாறு தெளிவாகச் சொல்லியாக வேண்டியிருக்கிறது - பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் புதிய நிதித் திட்டங்களின் (new fund offers எனப் படும் NFO) வாயிலாகத் திரட்டப்பட்டு இருக்கன்றன. வரலாறு காணாத வசூலாகும் இந்தத் தொகை. இந்தியப் பங்குகளின் விலை பாதுகாப்பான எல்லையைத் தாண்டி விற்று வருவதாகப் பல நிபுணர்களிம் விவாதித்து வரும் சமயத்தில் இது நடந்திருகிகிறது என்பது தான் வேடிக்கையே.

சமீபதிதில் பரஸ்பர நிதிகள் ஈட்டித்தந்த வியத்தகு இலாபம் பலரையும் ஈர்த்திருக்கிறது. தேவாமிர்தம் போன்ற அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாதென்று பலரும் புற்றீசலாய்ப் பறந்து வரும் FPO க்களில் பணத்தைக் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. நிதி நிறுவனங்கள் இவ்வாறு வசூலிக்கப்படும் அளவுக்கதிகமான பணத்தை அதிக விலையாக இருந்தாலும் சரி என்று பங்குகளில் தான் போட்டாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்கள் (left with few choices - all of them being bad). எல்லா நிதிகளும் இப்படிப் போட்டி போட்டு வாங்குவதால் விலை மேலும் அதிகரிக்காமல் என்ன செய்யும்? மீண்டும் விலையேற்றம், மீண்டும் FPO என இடை விடாத சுழற்சி.

இன்னுமொன்று கூறுகிறேன் கேளுங்கள். சந்தையின் உச்சியில் திரட்டப்பட்ட பணம் முழுவதுமாக முதலீடு செய்யப்படாது. சில மாதங்களில் சந்தை எப்படியும் சரியும் என்ற எதிர்பார்ப்பில் நிதி நிர்வாகிகள் பணத்தின் கணிசமான பகுதியை அப்படியே வைத்திருப்பர். கம்மியான மறுபடியும் வாங்கிக்கலாம்ங்கற நெனப்புல. நினைப்பது வேறு நடப்பது வேறு என்று தான் பெரும்பாலும் முடியும். நெடு நாள் ஏற்ற இறக்கமின்றி சந்தை நிலவினாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ முதலீடு செய்யப்படாமல் இருக்கும் தொகை எந்த பயனையும் தருவதில்லை. இதனால் கூட பரஸ்பர நிதிகளால் தனி நபர் முதலீட்டாளர் அளவுக்கு வளர்ச்சியை அடைய வைக்க முடியுமா என்பது சந்தேகமே.

பொருளாதார, அரசியல், பருவ மழை, தனிப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு முதலிய காரணங்களால் சந்தை ஒரு கால கட்டத்தில் வீழ்ந்தே தீரும். இத்தகு வீழ்ச்சி சில நாட்களிலிருந்து பல வருடங்கள் வரை நீடிக்கலாம். தரமான நிறுவனங்களில் பங்குகள் வாங்கி வைக்கத் தோதான விலையில் கிடைக்கும் காலமும் இது தான். ஆனால் அது மறுபடியும் மீண்டு வர நீண்ட காலம் பிடிக்கலாம். சரிவை ஒரு எல்லை வரை தாங்கிக் கொண்ட மக்க்ள் நேரப்போக்கில் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற ஆரம்பிப்பர். இவர்கட்கு பணத்தைத் தர நிதி நிர்வாகி சில பங்குகளை விற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார். விற்கிற காரணத்தால் விலை மேலும் சரியும், மேலும் பலர் பணத்தைத் திரும்பப் பெற ஆரம்பிப்பர், மேலும் விற்றல், மேலும் சரிவு என இங்கும் ஒரு சுழற்சி. பகுத்தறிந்து நோக்கினால் அதிகமான பணத்தை முதலீடு செய்யும் நேரம் இது தான். மக்களின் மந்தை மனோபாவமும் (herd psychology) பல்லாயிரக்கணக்கான நபர்களால் உருவான பங்குச் சந்தையில் நம்மை விட விவரம் தெரிந்தவர்களை விட நமக்கு என்ன தெரிந்து விடப்போகிறது எனும் சிந்தனையும் தான் இவ்வாறான தவறுகளுக்கெல்லம் விதை.

விதை மட்டுமல்ல, தவறுகளுக்கான விடையும் நம்மிடம் நமக்குள்ளேயே தான் ஒளிந்திருக்கும். அதைக் கண்டறியுங்கள்.


"காரை நாம ஒட்டுறதுக்குப் பதிலா டிரைவர் வச்சு ஓட்ற மாதிரி தானே?" என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்கிறேன். பரஸ்பர நிதி நிர்வாகியை ஓட்டுனர் எனக் கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்தச் சாலையில் பயணிக்க வேண்டும்? எங்கெ போக வேண்டும்? என்ன காரில் போக வேண்டும்? ராங் சைடில் ஓட்டுனர் போனால் பரவாயில்லையா? போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பது நீங்கள் தான். ஓட்டுனர் இல்லை. அவருக்கு சம்பளம் தான் குறி. நீங்கள் எக்கேடு கெட்டால் என்ன?

நிதி நிறுவனம் தான் நிர்வாகம் செய்யும் தொகையில் 2% அதற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வது இயல்பு. சுமார் பத்து பேரை மட்டும் கொண்டு பத்தாயிரம் கோடியை நிர்விகிக்கும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் தொகை இருநூறு கோடி. தான் கையாளும் தொகை தான் முதன்மைக் குறியாக இருக்குமே தவிர, பெற்றுத்தரும் இலாபமாக இருக்க முடியாது. ஆகவே காளன்களாய் புடைக்கும் புது நிதித் திட்டங்கள் ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளுவதில் வியப்பில்லை.

ஆட்சியாளர்கள் போலவே இவர்களது வருவாயும் - செயல்திறனுக்கேற்ப இல்லாமல் - நிலையானதாக இருக்க வைப்பதே இவர்கள் விருப்பம். தங்கள் திறமையின் மீது முழு நம்பிக்கை உடையவர்களாக நிதி நிர்வாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நிரந்தரமான சதவிகித ஊதியத்தை நிர்ப்பந்திக்காமல் செயல்திறனுக்கேற்ற ஊதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாமே!! நீங்கள் 20% இலாபம் பெற்றுத்தந்தால் 2% எடுத்துக் கொள்ளுங்கள். 40% இலாபமா? 4% அள்ளுங்கள். நிர்வகிக்கும் தொகை குறைந்தாலோ அல்லது அதே நிலையில் இருந்தாலோ உங்களுக்கு ஒன்றும் கிடையாது. தங்கள் திறமையில் முழு நம்பிக்கை உடைய நிர்வாகிகளும், நிறுவனங்களும் இதற்கு ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? சுய நம்பிக்கையற்ற உங்களை நம்பிப் பணம் போடச்சொல்லி நடுத்தர வர்க்கத்தினர் தூண்டிலிடப்படுவது எனக்கு நியாயமாகப் படவில்லை.

நன்பர்களே!! அடுத்த முறை பரஸ்பர நிதி விற்பனைப் பிரதிநிதி புதிய திட்டத்தை விற்க முயன்றால் இரையாகி விடாதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்டின் வண்டவாளத்தை அறியப் பங்குத் தரகர்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுப் பாருங்கள். பங்குத் தரகர்களின் வண்டவாளத்தை அறிய?? அதற்கு இன்னொரு கட்டுரையல்ல, புத்தகமே எழுத வேண்டும்.

ஆக.. உங்கள் செயல்கட்கும் அவற்றினால் உண்டாகும் விளைவுகட்கும் நீங்கள் எடுக்கும் முடிவு தான் தளமாக அமைய வேண்டுமே தவிர பிறரது அறிவுரையோ தூண்டுதலோ அல்ல. யாரோ சொல்வதால் மட்டும் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். யாரும் சொல்லவில்லை என்பதற்காக எதிலும் முதலீடு செய்யாமலும் இருக்க வேண்டாம்.

15 comments:

Senthil said...

Today the Markey has seen biggest intra-day gain after 1992. We saw the biggest intra-day fall on 22nd May this year.

ராபின் ஹூட் said...

//நீயும் உன்னோட பி.எ·ப், பேங்க் பேலன்ஸ் எல்லாத்தையும் எடுத்து மியூச்சுவல் ·பண்ல போட்ரு. கவலையே இல்ல. போட்ட பணம் கம்மியெல்லாம் ஆகது//

இப்படியெல்லாம் யாராவது ஏத்தி விட்டதைக் கேட்டு யாரும் முதலீடு செய்யாதீர்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். நான்கு ஆண்டுகள்(2000-2004) மியூச்சுவல் பண்டின் back-end
சிஸ்டத்தில் வேலை பார்த்தேன். அன்றய NAV எவ்வளவு வரும் என என்னால் ஓரளவிற்குக் கண்டுபிடிக்க(கணிக்க அல்ல) முடிந்தும் என்னால் பெரிய அளவில் சம்பாதிக்க முடியவில்லை.

சில நிறுவனங்களின் திட்டங்களில் உள்குத்து வேலைகள் அதிகமாக இருக்கும். நான் சொல்வது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். எல்லோருக்கும் dividend கொடுக்காமல் குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டும், வெளிப்படையாக அறிவிக்காமல், திருட்டுத்தனமாக dividend கொடுப்பது என்பது ரகசியமாக நடந்து வருகிறது. மக்களே உஷார். இதற்கு மேலும் சொன்னால் வீட்டுக்கு ஆட்டோ தேடிவரும் எனவே ஜூட்.

Kuppusamy Chellamuthu said...

செந்தில்..கலக்கறீங்க போங்க!

//இதற்கு மேலும் சொன்னால் வீட்டுக்கு ஆட்டோ தேடிவரும் எனவே ஜூட்// புரிந்து விட்டது. அனானியாக வந்து இன்னொரு பதிவில் இதே செய்தியை (நிரூபிக்கப்படாதவரை வதந்தி ;-)) பின்னூட்டமிட்டது நீங்கள் தானா? இப்போது புரிந்து விட்டது :-)

-குப்புசாமி செல்லமுத்து

Anonymous said...

Really nice article Kuppu! You are reiterating this point again and again!

Vish

Kuppusamy Chellamuthu said...

ஆஹா விசாகன்.. இப்படியே போனா ராபின் ஹ¤ட் வீட்டுக்கு ஆட்டோ வருதோ இல்லியோ என் வீட்டுக்கு வந்துரும் :-(

-குப்புசாமி செல்லமுத்து

Sivabalan said...

குப்புசாமி செல்லமுத்து,

மிக அருமையான பதிவு.

ஆனால் இன்னும் கொஞ்சம் வெளிபடையாக சில Mutual Fund & Plans பற்றியும் சொல்லியிருந்தால் மிக நன்றாக இருக்கும். இதில் ஏதேனும் பிரச்சனை என்றால் விட்டுவிடுங்கள்.

மிக்க நன்றி.

Kuppusamy Chellamuthu said...

சிவபாலன்.... டைபிங் வேகமாப் போய் 'சிலபாவம்'ன்னு முதல்ல அடிச்சுட்டேன்.. :-)

நீங்க இவ்வளவு நம்பிக்கை வைத்துக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கு. ஆனால் சில பேர் (இப்பவே) பதிவுகள் நீளமாக இருப்பதாகக் கருவதாய்ச் சொல்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ஒரு பதிவிலே நிறைய எழுதுவது முழுதுமாப் போய்ச் சேராது என்பதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. Its a dry subject you know..

-குப்புசாமி செல்லமுத்து

பொன்ஸ்~~Poorna said...

// உங்கள் செயல்கட்கும் அவற்றினால் உண்டாகும் விளைவுகட்கும் நீங்கள் எடுக்கும் முடிவு தான் தளமாக அமைய வேண்டுமே தவிர பிறரது அறிவுரையோ தூண்டுதலோ அல்ல//
ஓகே..

//ஒரு பதிவிலே நிறைய எழுதுவது முழுதுமாப் போய்ச் சேராது //
எழுதப் போறீங்கன்னா மகிழ்ச்சி..ஒண்ணு ரெண்டு எடுத்து எழுதினா நல்லாத் தான் இருக்கும். ஆனால் குறைகளை எழுதும் முன் ஆட்டோக்களை நினைத்துப் பார்ப்பது நலம் :)

ராபின் ஹூட் said...

இல்லை குப்புசாமி சார். நான் உங்கள் பதிவுகளில் அனானியாகப் பின்னூட்டியது இல்லை. அனானிப் பின்னூட்டம் அடாவடி ஆட்களுக்கு மட்டுமே( எதுகை மோனை எல்லாம் சரியா இருக்கா?).
நீங்கள் அந்தப் பதிவின் சுட்டியைத் தரமுடியுமா? நாங்கள் 30 பேர் அந்தக் குழுவில் பணியாற்றினோம். வேறு யாராவது பின்னூட்டம் செய்திருக்கலாம்.

(நிரூபிக்கப்படாதவரை வதந்தி ;-))
அமாம் குப்புசாமி சார், நான் நிரூபிக்கும் நிலையில் இல்லை. அதுவரை அது வதந்தி மட்டுமே. என் கருத்துகளை இந்த இடத்தில் சொல்ல உதவியதற்கு நன்றி.

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து !

பிளாக்கர் தொல்லையால் நேரத்திற்கு பின்னூட்டம் இட முடிவதில்லை! மியுட்வல் ஃப்ண்ட்களும் விதிவிலக்கல்ல சந்தை நெருக்கடிகளுக்கு என அழகாக சொல்லியுள்ளீர்கள் .சந்தை கரடிப்பிடியில் சிக்கி தினறிக்கொண்டுள்ளது இன்னும் சென்செக்ஸ் 6000 அளவுக்கு கீழே போகலாம் என்கிறார்கள் ,சமிபத்தில் மேலே வருவதற்கான வாய்ப்புகள் குறைவே என்பதால் தற்சமயம் முதலீடு செய்வது வேண்டாத வேலை தான் சிறு முதலீட்டாளர்களுக்கு.

சந்தை குறியீடு மேல் நோக்கி வர அடுத்த ஆண்டு ஜூன் வரை ஆகும் என்கிறார்கள் ஒரு கட்டுரையில் அந்த அளவு மோசமாகவா உள்ளது நிலைமை? கரடிப்பிடியின் அடிமட்ட நிலையில் சல்லீசாக நல்ல பங்குகளை வாங்கிப்போடலாம் என சிலர் காத்திருக்கிறார்கள் ,அதற்கு பிறகு காளை ஓட்டம் துவங்கி விடும் அது வரும் வரை காத்திருத்தல் தான் உத்தமம் என தோன்றுகிறது!

manasu said...

இது நான் முன்பே படித்தேனே குப்புசாமி.

நாகை சிவா said...

//சந்தை கரடிப்பிடியில் சிக்கி தினறிக்கொண்டுள்ளது இன்னும் சென்செக்ஸ் 6000 அளவுக்கு கீழே போகலாம் என்கிறார்கள் ,//
என்னங்க வவ்வால் இப்படி பயம் காட்டுறாரு. என்னுடைய கணிப்புபடி 9000 கீழ் போகாது என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் சிறு முதலீட்டார்கள் முதலீடு செய்வதற்கு இது தான் சரியான நேரம் என எண்ணுகின்றேன்.

Kuppusamy Chellamuthu said...

//mutual fund ல் மேலும் சில தில்லுமுல்லுகள் நடக்கின்றன். நான் இந்தியாவின் முன்னனி mutual fund நிறுவனத்திற்காக கணிப்பொறி மென்பொருள் தயாரித்துக் கொடுத்தோம். அந்தக் குழுவில் நான் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன்.
மூன்று ஆண்டுகளில் இருமுறை ஒரு குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களுக்கு மட்டும் dividend வழங்க வேண்டும் எனச் சொல்லி மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள்.
அதாவது நம்ம குப்பனும் சுப்பனும் முதலீடு செய்வார்கள். அதனுடன் சில பெரிய பணமுதலைகளும் முதலீடு செய்திருப்பார்கள்.
இந்நிலையில் diivend தரப்போவதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தந்திரமாக சில முதலீட்டாளர்களுக்கு மட்டும் dividend வழங்கப்படும். dividend-ல் மட்டும் குப்பனின் பணத்தில் இருந்து அந்தப் பெரும் பணக்காரர்களுக்குப் பங்கு. என்னய்யா நியாயம். கிட்டத்தட்ட 20கோடி ரூபாய்க்கு மேல ஒரு சிலருக்கு மட்டும் பட்டுவாடா செய்யப்பட்டது.
இதனால் NAV-மதிப்பு 40பைசா குறைந்தது. இந்த மாற்றம் அப்போதய சந்தையில் சாதாரண மாற்றம் போலப் பிரதிபலித்தது.
மேலும் இந்த dividend யாருடைய customer statementலிழும் வராமல் மென்பொருளை மாற்றம் செய்யப்படடது. //
ராபின் ஹ¤ட்: இதாங்க அந்தப் பின்னூட்டம்.

இந்த அனானி நீங்கள் குறிப்பிடும் கணிப்பொறி நிறுவனத்தில் இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்திருருக்கும் பட்சத்தில், 'கவர்மென்ட் ஆபீஸ் மாதிரி' மியூச்சுவல் ·பண்டிலும் எழுதப் படாத அன்பளிப்புகள் உண்டு என வதந்திகளை உண்டாக்கலாம்.:)

எப்படியும் ஆட்டோ வற்றது உறுதியாகிருச்சு. இதுக்கு மேல என்னங்கறீங்களா?

//அடாவடி ஆட்களுக்கு// எதுகை மோனை இரண்டுமே போட்டு கலக்கீட்டீங்க போங்க.

Kuppusamy Chellamuthu said...

//இன்னும் சென்செக்ஸ் 6000 அளவுக்கு கீழே போகலாம் என்கிறார்கள்//

வெளவால், சென்செக்ஸ் 6000 பொகலைன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க? 9200 போனாலும் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் அவை (சென்செக்ஸ்) 6000 இருந்த காலத்தில் விற்ற விலைக்குத்தான் விற்றன. குறியீட்டில் அங்கம் வகிக்கும் 30 கம்பெனிகளும் மார்க்கெட்டை முழுதுமாக நாடி பிடிக்கும் கருவியாக இல்லை என வாதிடும் மனிதர்கள் குதூகலிக்கிறார்கள்.

ஆகவே நாகையாரே, அச்சப்படாதீங்க. நல்ல ·பிகர பிக் அப் பண்ணிட்டு சுத்தறவனுக்குத் தான் கவலை. ஒன்னுமே இல்லாதவனுக்கு என்ன கவலை. அதாவது.. இனி மேல (சாரி கீழ) இழக்க ஒன்னும் இல்லைங்கற மாதிரி ஷேர் நிறைய இருக்கறதாப் பேசிக்கறாங்க :-)

Kuppusamy Chellamuthu said...

//இது நான் முன்பே படித்தேனே குப்புசாமி.//

ஆமாங்க மனசு. பதிவு காணாமல் போனதும், அதனையே தனியாக ஒரு 'சுட்டி' கொடுத்து இட்டிருந்தேன். Template மாற்றியபோது அதுவும் இழந்தது. அதனால் மீள்பதிவு. மற்றபடி 'புத்தம் புதிது இந்தப் பதிவு' என்று நான் சொல்லவில்லையே :-) அதான் ஆரம்பத்திலேயே ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தாச்சு பாருங்க!!