Wednesday, June 28, 2006

ரியல் மியூச்சுவல் 'ஃபண்ட்'கள்!!

குப்புசாமி செல்லமுத்து

ஷேர் மார்க்க்ட்டில் முதலீடு செய்வதை விட ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதாக அறிகிறோம்.

பங்குச் சந்தையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட ஏதாவது வாங்க முடியும். ஆனால் ரியல் எஸ்டேட் என்று நினைக்கவே சில இலட்சங்கள் ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு என ரியல் எஸ்டேட் மியூச்சுவல் நிதித் திட்டங்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.

சரியாக நினைவில்லை. இன்றும் கூட இது போன்ற திட்டங்கள் இயங்கி வருகின்றன. குறைந்த பட்ச முதலீடாகப் பல இலட்சங்கள் வேண்டுமென்கிறன விதிமுறைகள் இருக்கின்றன. ஆகவே, பெரும் சீமான்களுக்காக அவை அமைந்திருக்கின்றன.

இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange board of India - SEBI) சமீபத்தில் சிறு முதலீட்டாளர்களும் பங்கு கொள்ளும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. சராசரி பரஸ்பர நிதித்திட்டங்கள் போலப் பொதுமக்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் பணம் திரட்ட செபி அனுமத்துள்ளது. மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது இம்முடிவு.

இவ்வாறு வரவிருக்கும் திட்டங்கள் எந்த மாதிரி கட்டமைப்புப் பணீகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் செபி வரையறுக்கிறது. கட்டிடம், கட்டுமானம், தொழிற்பூங்காக்கள் போன்ற பெருமுதலீடு தேவைப்படும் project போன்றவற்றில் நேரடியாக அல்லது அது போன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களில் பங்குகளின் மூலம் மறைமுகமாகவோ இப்பணம் பாய்ச்சப்படலாம்.

எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறுகிற open-ended வழிமுறைகள் இவற்றில் இருக்காது. நீண்ட காலத்திற்கு முதல் அடைத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு. அதே வேளை, அவை பங்குச் சந்தையில் பங்குகளைப் போல விற்க இயலுகிற ETF (Exchange Traded Fund) திட்டங்களாக இருக்குமென எதிர்பார்க்கலாம். நிதி நிர்வாக நிறுவனம் தினந்தோறும் நிகரச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுத் தெரிவிகக் வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது.

அளவற்ற உள்கட்டுமானத் தேவை இருக்கிற நமது நாட்டில், அவற்றை பூர்த்தி செய்ய வெளிநாட்டு முதலீடுகளை முழுக்க முழுக்க நம்ப வேண்டிய தேவையை மேற்சொன்ன நடவடிக்கை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Friday, June 23, 2006

ஜகா வாங்கும் கம்பெனிகள்..

- குப்புசாமி செல்லமுத்து

சற்றே பழைய (4-5 நாட்கள்) செய்தி..

பங்குச்சந்தையின் பின்னடைவு காரணமாக இரண்டு நிறுவங்களின் IPO வெளியீடுகள் முழுதுமாக விற்கப்படாததால், அந்த நிறுவனங்கள் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன. அவை புளூபிளாஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் விக்னேஸ்வரா எக்ஸ்போர்ட் லிமிடேட்.

விக்னேஸ்வரா எக்ஸ்போர்ட் லிமிடேட் தனது விலைப் பட்டையை ரூ121-140 என்கிற அளவில் இருந்து ரூ110-124 என்கிற அளவாகக் குறைத்தது. அப்படி இருந்தும் 89% மட்டுமே விண்ணப்பங்கள் வந்தனவாம். இதனால் விரக்தியடைந்த நிறுவனம் வெளியீட்டு முடிவில் இருந்து பின்வாங்குகிறது. சுமார் 55-60 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்திருந்தார்கள் இவர்கள்.

அதே கதிதான் புளூபிளாஸ்ட் 'இன்டஸ்ட்ரீஸ்'க்கும். இவர்கள் திரட்டத் திட்டமிட்டிருந்தது ரூ30 கோடி. IPO திட்டம் தகர்ந்த பின்னர் வேறு வழிமுறைகளில் (கடன் பத்திரங்கள்) தனது விரிவாக்கத்திற்குத் தேவையான ரூ32 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது கம்பெனி.

ரிலையன்ஸ் பெட்ரோலியம் IPO விற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்த தொகை ஒரு இலட்சம் கோடிக்கும் மேல். இரண்டே மாத இடை வெளிக்குப் பின் ரூ30 கோடி வெளியீடுகள் கூடத் திணறுகின்றன.

தயாராக இருக்கும் DLF, MCX மற்றும் மின் நிதி நிறுவனம் (Power Finance corporation) ஆகியவற்றின் முதல் பொது வெளியீடுகள் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகின்றன. ஏனென்றால், இவை வளரும் துறைகளில் முக்கியமான நிறுவனங்கள்...

Sunday, June 18, 2006

நான் அடிக்கும் சிக்சர்(6)..

-குப்புசாமி செல்லமுத்து

தனது 'ஆறு' பதிவில் பொன்ஸ்.. என்னை அழைத்திருந்தார். தனக்குப் பிடித்த ஆறு விஷயங்களை விவரித்தும், விரும்பும் ஆறு பதிவர்களை இதே போல அழைத்தும் எழுதவேண்டும் என்பது ஆட்டத்தின் விதிமுறை.

  • ஸ்ரீதேவி சிரிப்பு முதல், நமீதா இடுப்புவரை இரசித்த பெண்கள்...
  • கொழாப்புட்டு முதல் கோழிக்கறி வரை சுவைத்த உணவுகள்....
  • அமராவதி முதல் ஆம்ஸ்டெல் நதிவரை பார்த்த இடங்கள்...

பதிவு போட ஆசை தான். இருப்பினும் வேறு அறுவரை அழைப்பது என்பது இயலாத காரியமாகப் படுகிறதாகையாலும், விளையாடத்தெரியாத ஆட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி காரணமாகவும், விதிமுறைகளைச் சற்று மாற்றி நானே ஒரு தனியாட்டம் போட முடிவு செய்து விட்டேன். பொன்ஸ் பொறுத்துக் கொள்வாராக.

நான் இரசித்த, இன்னும் தொடர்ந்து இரசிக்கின்ற ஆறு முதலீட்டாளர்களை இந்தப் பதிவில் இரு சிறு அறிமுகம் செய்துவிடுவது சுலபம் எனப் பட்டதால், அது தான் ஆட்டத்தின் ரூல்ஸ்.

1. வாரன் பஃபட் (warren Buffett)

பஞ்ச் டலயாக் : Risk comes from not knowing what you're doing

பிறப்பு : 1930, ஒமாஹா, நெப்ராஸ்கா மாகாணம், அமெரிக்கா

* நடிப்புக்கு சிவாஜி என்றால், முதலீட்டிற்கு வாரன்.
* அவரது 'பிராண்ட்' முத்திரையைக் குத்தி எதை எழுதினாலும் விற்றுத் தீர்ந்து விடுவது வாடிக்கை.
* இவர் 1965 ஆம் ஆண்டு அப்போது நலிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும்.
* 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் தான் இறந்த பின் அதன் பெரும்பகுதி அனாதைகளுக்குப் போய்ச் சேருமாறு உயில் எழுதியிருக்கிறார்.
* ஒமாஹாவின் முனிவர் (Oracle of Omaha) எனப் பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர்.
* 40 ஆண்டுகளுக்கு முன் முப்பதாயிரம் டாலருக்கு வாங்கிய அதே வீட்டில் இன்னும் வசித்து வருகிறார்.
* ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.
* 1990 களின் இறுதியில் சகட்டுமேனிக்கு ஏறிய 'டெக் & டாட் காம்' கம்பெனிகளைத் தவிர்த்த வெகு சில முதலீட்டாளர்களில் தலையாயவர்.
* ஆங்கிலத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள். You might be an atheist; but when it comes to investing Warren is your god
* பங்குதாரகளுக்கு அனுப்பும் ஆண்டறிக்கையில் இவர் எழுதும் கருத்துக்கள், நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் அளவிற்குப் பிரபலம்.


2. ஜார்ஜ் சோரஸ் (George Soros)

பஞ்ச் டயலாக்: "It's not whether you're right or wrong that's important, but how much money you make when you're right and how much you lose when you're wrong."

பிறப்பு : 1930, புடாபெஸ்ட், ஹங்கேரி

* சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல ஆரம்பித்தது இவர் வாழ்க்கை.
* டவுசர் போட்ட காலத்தில் ஹிட்லரின் இனவெறிப் படைகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து வாழ்ந்த ஹங்கேரி யூதச் சிறுவன் ஜார்ஜ்.
* இங்கிலந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்து, அங்கே பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்கா வந்தவர்.
* வாரன் பஃபட் பேட்டிங் திராவிட் பாணி என்றால், ஜார்ஜுக்கு சேவாக் பாணி.

* 'விலை இறங்கும் முன் விற்க வேண்டும்' எனப் பலர் நினைப்பர். ஆனால் சோரஸ் விற்றதால் மட்டுமே விலை இறங்கிய காலமெல்லாம் உண்டு.
* ஷேர் மார்க்கெட் தவிர்த்து, நாணயம், தங்கம் என இவர் தொடதே இடமே இல்லை.
* ஜான் மேஜர் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பிடிட்டிஷ் நாணயமான 'பவுண்ட்' ஐ விற்று ஒரு பில்லியன் டாலர் (ரூ4,500 கோடி) எடுத்தவர்.
* இவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக ரஷ்யப் பங்குச் சந்தை ஒரு மணி நேரத்தில் 12% சரிந்தது எனக் கூறுவார்கள்.
* சோரஸ் ஆரம்பித்த குவாண்டம் நிதியில் (quantum fund) 1969 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் இட்டிருந்தால் 1994 இல் அது 1,500 ரூபாயாகப் பெருகியிருக்கும்.


3. பீட்டர் லிஞ்ச் (Peter Lynch)

பஞ்ச் டயலாக்: Go for a business that any idiot can run - because sooner or later, any idiot probably is going to run it.
பிறப்பு : 1944 அமெரிக்கா

* 1978 இல் இவரது Fidelity Magellan Fund நிதியில் ஒரு ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 1990 இல் அது 700 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கும்.
* 46 வயதில் ஓய்வு தாமாக விரும்பி ஓய்வு பெற்ற மனிதர்.
* உலகின் மிகப் புகழ் மிக்க மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகளில் ஒருவர்
* அப்போதைக்கு எது சிறப்பாக இருக்கிறதோ அதில் முதலீடு செய்து காலத்திற்குத் தக மாற்றிக் கொள்வதால் இவரைப் 'பச்சோந்தி' என்று கூடக் குறிப்பிடுவார்கள்.
* இவர் எழுதிய One upon Wall street புத்தகம் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

4. ஜான் டெம்பிள்டன் (John Templeton)

பஞ்ச் டயலாக்: The time of maximum pessimism is the best time to buy and the time of maximum optimism is the best time to sell

பிறப்பு : 1912 டென்னிசி, அமெரிக்கா

* டெம்பிள்டன் குழுமத்தைத் துவங்கியவர்.
* உலக மியூச்சுவல் ஃபண்ட்களில் தந்தை என அறியப்படுபவர்.
* உலகப்போர் நடந்த சமயத்தில் வங்கியில் எவ்வளவு கடன் கிடக்குமோ அவ்வளவு கடன் வாங்கி, ஒரு டாலருக்குக் குறைவாக விற்ற அத்தனை ஷேர்களையும் வாங்கிய இருபது(கள்) வயதுத் துணிச்சல்காரர்.
* நான்கு வருடத்தில் அது நான்கு மடங்கானது அதன் பின்னர் சரித்திரமாகிப் போன சங்கதி.
* இவரிடத்தில் 65 ஆயிரம் டாலர் கொடுத்துவைத்த லெராய் என்பவர், நாற்பது வருடத்திற்குப் பின் 3.7 கோடி டாலராகத் திருப்பிப் பெற்றாராம்.


5. ராகேஷ் ஜுஞ்சுன்வாலா

பிறப்பு: 1960, மும்பை, இந்தியா

* படித்தது CA, வெளிநாடு சென்று ஆடிட்டர் வேலை பார்க்காமல், 1985 ஆம் ஆண்டு ரூ5,000 த்துடன் மும்பைப் பங்குச் சந்தையில் நுழைந்தவர்.
* ஐந்தாயிரம் இன்று பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி நிற்கிறது.
இருந்தாலும் உண்மையான சொத்து மதிப்பினை மீடியாவிற்குச் சொல்வதில் இவருக்கு விருப்பம் இல்லை.
* இவர் கால்பதித்த போது 150 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இன்று 10,000 புள்ளிகளில், கிட்டத்தட்ட 70 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அண்ணாச்சி பல ஆயிரம் மடங்கு தன் பணத்தைப் பெருக்கியுள்ளார்.
* BSE சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த சமோசா விற்பவரை இன்னும் நினைத்துப் பார்க்கிறார்.
* இந்தியாவில் பங்கு முதலீட்டைப் புரிந்து கொண்டு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ராகேஷ் முன் மாதிரி எனச் சொல்லலாம்.


6. நீயோ, நானோ??

பெஞ்சமின் கிரகாம் போன்ற சிலர் இன்னும் இருந்தாலும், ஆறாவது யார் ரசிக்கப்படவேண்டும்? நம்மில் ஒருவர்..

Tuesday, June 13, 2006

30% சரிவு சாத்தியமா??

-குப்புசாமி செல்லமுத்து

இதே பதிவு ஆங்கிலத்திலும்..

எல்லா பதிவுகளிலும் disclaimer போட்டு நெகட்டிவ் மேசேஜ் மட்டுமே நான் சொல்வதாக நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இருந்தாலும்...30% சரிவு சாத்தியமா??

இன்வெஸ்ட்மென்ட் வாத்தியார் மார்க் ·பேபர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்தியா ஷேர் மார்க்கெட் 30% குறையும்னு சொன்னாரு. இன்னொன்னு கூடச் சொல்லிருக்காரு அந்த ஆளு. அதாவது அக்டோபர் வரைக்கும் யாரும் ஷேர் மார்க்கெட் பக்கம் வராமே, லீவு போட்டுட்டுப் போகச் சொல்லிருக்கார்.

சரீ.. எதோ பெரிய மனுசன்..அவரு சொல்றத ஆராயறத விட்டுட்டு, நம்ம ரேஞ்சுக்கு ஒரு கால்குலேசன் போடலாமா? 30% சரிவு சாத்தியமா? இதே கேள்விய ஒரு மாசம் முந்தி யார்கிட்டயாவது கேட்டிருந்தா செருப்பால அடிச்சுருப்பாங்க. ஆனா இன்னிக்கு அது உண்மையாகிருச்சு. சென்செக்ஸ் 12,600 ல இருந்து 9,000 வந்துருச்சு. கிட்டத்தட்ட 30% கொறஞ்சுதா?? அத்த வுடுப்பா..இதுக்கு மேல (சாரி கீழ) கொறையுமா? ஹி..ஹி.. காலம் தான் பதில் சொல்லனும் அதுக்கு..

ஒரு நிறுவனம் பங்கு PE விகிதம் 25 என்ற அளவிலே பரிவர்த்தனை செய்யப்பட்டு வருவதாக வைத்துக்கொள்வோம். அவர்களின் பிசினஸ் சறுக்குவதால் அல்லது பொதுவாக சந்தை சரிவதனால், அதனை சந்தையின் அங்கத்தினர் PE விகிதம் 17 என்கிற அளவில் மறுமதிப்பீடு செய்வது என்பது நிகழக்கூடியது தான். அதாகப்பட்டது -32%. அதன் பின் அந்த நிறுவனம், அதன் துறை, தேசத்தின் பொருளாதாரம் முதலிய காரணங்களால் (மட்டுமல்லாது) மேலும் பாதிக்கப்படலாம்.

இன்று (13-ஜூன்-06) சென்செக்ஸ் சுமார் 9,000 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. சில நிபுணர்கள் மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணின் உண்மையான மதிப்பு 6000 முதல் 7000 வரை எங்கோ ஒரு புள்ளி எனக் கருத்துக் கூறுவதாக அறிகிறோம். இதனை மேலும் நோக்கும் முன், ஒரு விஷயத்தைத் தொட்டுப் பார்ப்பது நலம். பெரும்பாலான நிறுவனங்களின் இன்றைய (அல்லது கடந்த சில நாள்) விலை, அவை சென்செக்ஸ் 6,000 இல் இருந்த போது கிடைத்த அதே அளவிற்கு வீழ்ந்துள்ளது. என்னதான் குறியீடு 9,000 த்தில் ஊசலாடினாலும் ஆழமாகக் காலை விட்டுத் துழாவினால், பாதிப்பு அதனை விடப் பெரிதாகத் தட்டுப்படுகிறது.

கிட்டத்தட்ட எல்லா சிறு முதலீட்டாளர்களும் தங்கள் போர்ட்போலியோ(portfolio) மதிப்பில் 40 முதல் 60% வரை சராசரியாக தொலைத்திருக்கின்றனர். குறியீடு அடைந்த சரிவை விட இது அதிகமே. சென்செக்ஸ் என்பது ஒட்டு மொத்த சந்தையின் நிலையைத் துல்லியமாக வெளிக்காட்டும் அளவீடில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஒன்று மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அது என்னவென்றால், இன்று 7,000/6,000 என இலக்குச் சொல்லும் பலரும் சில வாரங்களுக்கு முன் 15,000/17,000 என இலக்குச் சொன்னார்கள். அன்றைய கூற்று, "இந்தியாவின் பொருளாதாரம் மிக வலுவாக உள்ளது. நிறுவனங்கள் திறமையாகச் செயல்படுகின்றன. இளவயது மக்கள் சக்தி அதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. பிற நாடுகளை விட சற்றே விலை கூடுதலாக இருந்தாலும், இங்கே கிடைக்கும் சரக்கின் தரம் அதிகம் என்பதனால் அது நியாயப்படுத்தப் பட்டதே. நீண்ட கால அளவிலே, விலைகள் கவர்ச்சிகரமாகத் தான் உள்ளன"

ஒரு மாதத்தில் பெரிதாய் (சிறிய மாறுதல்கள் உண்டு) ஒன்றும் மாறிவிடவில்லை என்றாலும், இன்றைய கூற்று, "பிற நாடுகளை விட இந்தியச் சந்தை காஸ்ட்லி. அரசின் ஏற்றுமதி-இறக்குமதி முரண்பாடு, பட்ஜெட் பற்றாக்குறை, கம்யூனிஸ்டுகள் அட்டகாசம், ஊழல் மிகுந்த அரசு இயந்திரம், முதிர்ச்சியற்ற பங்குச் சந்தை.......இன்னும் சிலதுகள்"

Friday, June 09, 2006

எரியும் பங்குச் சந்தை!!

- குப்புசாமி செல்லமுத்து

மே மாதம் 5 ஆம் தேதி "எரியும் பங்குச் சந்தையும் எண்ணெய் வார்க்கும் மியூச்சுவல் ஃபண்ட்களும்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு பதிவு, தலைப்பு நீளமாக இருந்தமையால் பிரசுரிக்கப்படாமல் அழிந்து விட்டது. அதே சரக்கு மீள் பதிவாக மீண்டுமொரு முறை இங்கே தலைப்பு மாறி வந்துள்ளது. I thought it is appropriate to re-publish this now just after reading, "mutual funds had been net sellers to the tune of Rs.500 redemption pressure". ஒரு மாதத்திற்கு முந்தையது போலவே இன்றும் இக்கட்டுரை பொருந்துமென்பதே எனது எண்ணம். சரி....கீழே வாசிப்போம்..
------------------------------------------------------------------

பாமரன் முதல் ப.சிதம்பரம் வரையில் அனைவரது பேச்சிலும் அடிக்கடி அடிபடுவது பங்குச்சந்தையும், பங்குசார் பரஸ்பர நிதிகளும் (equity mutual funds) தான் என்றால் அது மிகையல்ல.

பங்கு முதலீடு என்றாலே அஞ்சி ஓடிய பல்லாயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்து மக்களையும், அவர்தம் காசையும் திரும்பக் கையைப் பிடித்து அழைத்து வந்திருப்பன பரஸ்பர நிதி நிறுவனங்கள் தான். அதற்காக ஒரு ஸ்பெஷல் வந்தனம். இதுவரை இந்த நிறுவனங்கள் நமது நாட்டிலும், உலகின் ஏனைய பிற தேசங்களிலும் ஆற்றியுள்ள பணி பொற்றுதலுக்கு உரியது.

"மியூச்சுவல் ஃபண்ல போன வருசந்தான் பத்தாயிரம் பொட்டேன். இப்போ இருபது ஆயிரம் ஆகிடுச்சு. நீயும் உன்னோட பி.எஃப், பேங்க் பேலன்ஸ் எல்லாத்தையும் எடுத்து மியூச்சுவல் ஃபண்ல போட்ரு. கவலையே இல்ல. போட்ட பணம் கம்மியெல்லாம் ஆகாது. ஆனா ஷேர்ல மட்டும் போடாதே, அது ரொம்ப ரிஸ்க்" எனப் பல பேர் அவர்களுக்குத் தெரிந்த சில பேருக்கு உபதேசம் - நம் எதிரி தேசத்தை விடவும் அபாயகரமான தேசம் - செய்வதை என் காது கூடக் கேட்டிருக்கிறேன். பலமுறை கேட்ட இது போன்ற ஆபத்தான அறிவுரைகளின் விளைவே இந்தக் கட்டுரை.

"நான் இறக்கப்போகும் இடம் எது என்று முன் கூட்டியே தெரிந்தால், அந்த இடத்ததுக்குப் போவதைத் தவிர்த்து விடுவேன். எனக்கு மரணமே இருக்காது", என்று யாரோ சொன்னதாக நினைவு. புதிய மொழிகளைப் பயிலும் சமயங்களில் அவற்றிலுள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் அறிந்து வைத்துக்கொள்வது பலரது வாடிக்கை. அப்படித்தான் பங்கு வர்த்தகமும். அதிலுள்ள வசீகரமான அம்சங்களை கண்டு ஈர்க்கப்படும் முன், பின் வரக்கூடிய பிரச்சினைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது விவேகம். அட அவ்வளவு ஏங்க... விலைமாதர் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு, அங்கே கிடைக்கும் சுகத்தை மாத்திரம் நினைத்து மதியிழக்காமல், ஆணுறை எடுத்துச் செல்லச் சொல்லி வலியுறுத்துகிறது சமூகம். மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுபவர்களுக்கு மட்டும் அத்தகைய விழிப்புணர்வு கிடைக்கக்கூடாதென்பது சாபமா?

"என்ன மேன் நீ? நாமா இன்வெஸ்ட் பண்ணினாத்தான் வம்பு. திறமையான மியூச்சுவல் ஃபண்ட் மூலமா பண்ணா என்ன தப்பு? காரை நாம ஒட்டுறதுக்குப் பதிலா டிரைவர் வச்சு ஓட்ற மாதிரி தானே?" இது என்னுடன் வேலை செய்யும் ஒருவர் எங்கோ படித்து விட்டுச் செய்த வாதம். இந்த வாதத்திற்குப் பதிலளிக்கும் முன் நாம் சற்று அலச வேண்டியது கொஞ்சம் இருக்கிறது.

எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கையாண்டாலே ஏமாற்றங்களைத் தவிர்த்து விட முடியும். கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் இந்தியப் பங்குகள் எட்டிய வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொண்டு வருடந்தோறும் 40 - 45% வளர்ச்சியை ஈட்டி விட முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால், பல பரஸ்பர நிதிகளின் நிகர சொத்து மதிப்பு (net asset value) 2001-02 சமயத்தில் ஓராண்டிலேயே 30% குறைந்ததுண்டு. முதலீட்டின் மதிப்பு 33% குறைந்தால், நீங்கள் போட்ட காசை எடுக்க மறுபடியும் 50% அதிகரிக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ரூ.100 இல் மூன்றில் ஒரு பங்கு குறைந்தால் ரூ.66.66 ஆகி விடும். மீண்டும் அது ரூ.100 ஆக மாற, தற்போதைய 66.66 இல் பாதியை - அதாவது 33.33 - சம்பாதிக்க வேண்டியதாகிறது. அதே போல 50% நஷ்டத்தை சரி செய்ய அது இரு மடங்கா சம்பாதிக்க வேண்டும். 100 இல் பாதியை இழந்தால் அது 50 ஆகிவிடும். 50 மீண்டும் 100 ஆக அதை இரட்டிக்க வேண்டும்.

இந்த நாட்காட்டி வருடத்தில் - பொருளாதாரத்தில், நிதியாண்டு (financial year ஏப்ரல் முதல் மார்ச் வரை) மற்றும் நாட்காட்டி ஆண்டு (calender year - ஜனவரி முதல் டிசம்பர் வரை) இரண்டும் ஒன்றல்ல. யாராவது வெறுமனே ஒரு வருடத்தைக் குறிப்பிட்டால் குழப்பங்கள் நேரலாம். அதனாலாயே இவ்வாறு தெளிவாகச் சொல்லியாக வேண்டியிருக்கிறது - பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் புதிய நிதித் திட்டங்களின் (new fund offers எனப் படும் NFO) வாயிலாகத் திரட்டப்பட்டு இருக்கன்றன. வரலாறு காணாத வசூலாகும் இந்தத் தொகை. இந்தியப் பங்குகளின் விலை பாதுகாப்பான எல்லையைத் தாண்டி விற்று வருவதாகப் பல நிபுணர்களிம் விவாதித்து வரும் சமயத்தில் இது நடந்திருகிகிறது என்பது தான் வேடிக்கையே.

சமீபதிதில் பரஸ்பர நிதிகள் ஈட்டித்தந்த வியத்தகு இலாபம் பலரையும் ஈர்த்திருக்கிறது. தேவாமிர்தம் போன்ற அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாதென்று பலரும் புற்றீசலாய்ப் பறந்து வரும் FPO க்களில் பணத்தைக் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. நிதி நிறுவனங்கள் இவ்வாறு வசூலிக்கப்படும் அளவுக்கதிகமான பணத்தை அதிக விலையாக இருந்தாலும் சரி என்று பங்குகளில் தான் போட்டாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்கள் (left with few choices - all of them being bad). எல்லா நிதிகளும் இப்படிப் போட்டி போட்டு வாங்குவதால் விலை மேலும் அதிகரிக்காமல் என்ன செய்யும்? மீண்டும் விலையேற்றம், மீண்டும் FPO என இடை விடாத சுழற்சி.

இன்னுமொன்று கூறுகிறேன் கேளுங்கள். சந்தையின் உச்சியில் திரட்டப்பட்ட பணம் முழுவதுமாக முதலீடு செய்யப்படாது. சில மாதங்களில் சந்தை எப்படியும் சரியும் என்ற எதிர்பார்ப்பில் நிதி நிர்வாகிகள் பணத்தின் கணிசமான பகுதியை அப்படியே வைத்திருப்பர். கம்மியான மறுபடியும் வாங்கிக்கலாம்ங்கற நெனப்புல. நினைப்பது வேறு நடப்பது வேறு என்று தான் பெரும்பாலும் முடியும். நெடு நாள் ஏற்ற இறக்கமின்றி சந்தை நிலவினாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ முதலீடு செய்யப்படாமல் இருக்கும் தொகை எந்த பயனையும் தருவதில்லை. இதனால் கூட பரஸ்பர நிதிகளால் தனி நபர் முதலீட்டாளர் அளவுக்கு வளர்ச்சியை அடைய வைக்க முடியுமா என்பது சந்தேகமே.

பொருளாதார, அரசியல், பருவ மழை, தனிப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு முதலிய காரணங்களால் சந்தை ஒரு கால கட்டத்தில் வீழ்ந்தே தீரும். இத்தகு வீழ்ச்சி சில நாட்களிலிருந்து பல வருடங்கள் வரை நீடிக்கலாம். தரமான நிறுவனங்களில் பங்குகள் வாங்கி வைக்கத் தோதான விலையில் கிடைக்கும் காலமும் இது தான். ஆனால் அது மறுபடியும் மீண்டு வர நீண்ட காலம் பிடிக்கலாம். சரிவை ஒரு எல்லை வரை தாங்கிக் கொண்ட மக்க்ள் நேரப்போக்கில் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற ஆரம்பிப்பர். இவர்கட்கு பணத்தைத் தர நிதி நிர்வாகி சில பங்குகளை விற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார். விற்கிற காரணத்தால் விலை மேலும் சரியும், மேலும் பலர் பணத்தைத் திரும்பப் பெற ஆரம்பிப்பர், மேலும் விற்றல், மேலும் சரிவு என இங்கும் ஒரு சுழற்சி. பகுத்தறிந்து நோக்கினால் அதிகமான பணத்தை முதலீடு செய்யும் நேரம் இது தான். மக்களின் மந்தை மனோபாவமும் (herd psychology) பல்லாயிரக்கணக்கான நபர்களால் உருவான பங்குச் சந்தையில் நம்மை விட விவரம் தெரிந்தவர்களை விட நமக்கு என்ன தெரிந்து விடப்போகிறது எனும் சிந்தனையும் தான் இவ்வாறான தவறுகளுக்கெல்லம் விதை.

விதை மட்டுமல்ல, தவறுகளுக்கான விடையும் நம்மிடம் நமக்குள்ளேயே தான் ஒளிந்திருக்கும். அதைக் கண்டறியுங்கள்.


"காரை நாம ஒட்டுறதுக்குப் பதிலா டிரைவர் வச்சு ஓட்ற மாதிரி தானே?" என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்கிறேன். பரஸ்பர நிதி நிர்வாகியை ஓட்டுனர் எனக் கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்தச் சாலையில் பயணிக்க வேண்டும்? எங்கெ போக வேண்டும்? என்ன காரில் போக வேண்டும்? ராங் சைடில் ஓட்டுனர் போனால் பரவாயில்லையா? போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பது நீங்கள் தான். ஓட்டுனர் இல்லை. அவருக்கு சம்பளம் தான் குறி. நீங்கள் எக்கேடு கெட்டால் என்ன?

நிதி நிறுவனம் தான் நிர்வாகம் செய்யும் தொகையில் 2% அதற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வது இயல்பு. சுமார் பத்து பேரை மட்டும் கொண்டு பத்தாயிரம் கோடியை நிர்விகிக்கும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் தொகை இருநூறு கோடி. தான் கையாளும் தொகை தான் முதன்மைக் குறியாக இருக்குமே தவிர, பெற்றுத்தரும் இலாபமாக இருக்க முடியாது. ஆகவே காளன்களாய் புடைக்கும் புது நிதித் திட்டங்கள் ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளுவதில் வியப்பில்லை.

ஆட்சியாளர்கள் போலவே இவர்களது வருவாயும் - செயல்திறனுக்கேற்ப இல்லாமல் - நிலையானதாக இருக்க வைப்பதே இவர்கள் விருப்பம். தங்கள் திறமையின் மீது முழு நம்பிக்கை உடையவர்களாக நிதி நிர்வாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நிரந்தரமான சதவிகித ஊதியத்தை நிர்ப்பந்திக்காமல் செயல்திறனுக்கேற்ற ஊதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாமே!! நீங்கள் 20% இலாபம் பெற்றுத்தந்தால் 2% எடுத்துக் கொள்ளுங்கள். 40% இலாபமா? 4% அள்ளுங்கள். நிர்வகிக்கும் தொகை குறைந்தாலோ அல்லது அதே நிலையில் இருந்தாலோ உங்களுக்கு ஒன்றும் கிடையாது. தங்கள் திறமையில் முழு நம்பிக்கை உடைய நிர்வாகிகளும், நிறுவனங்களும் இதற்கு ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? சுய நம்பிக்கையற்ற உங்களை நம்பிப் பணம் போடச்சொல்லி நடுத்தர வர்க்கத்தினர் தூண்டிலிடப்படுவது எனக்கு நியாயமாகப் படவில்லை.

நன்பர்களே!! அடுத்த முறை பரஸ்பர நிதி விற்பனைப் பிரதிநிதி புதிய திட்டத்தை விற்க முயன்றால் இரையாகி விடாதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்டின் வண்டவாளத்தை அறியப் பங்குத் தரகர்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுப் பாருங்கள். பங்குத் தரகர்களின் வண்டவாளத்தை அறிய?? அதற்கு இன்னொரு கட்டுரையல்ல, புத்தகமே எழுத வேண்டும்.

ஆக.. உங்கள் செயல்கட்கும் அவற்றினால் உண்டாகும் விளைவுகட்கும் நீங்கள் எடுக்கும் முடிவு தான் தளமாக அமைய வேண்டுமே தவிர பிறரது அறிவுரையோ தூண்டுதலோ அல்ல. யாரோ சொல்வதால் மட்டும் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். யாரும் சொல்லவில்லை என்பதற்காக எதிலும் முதலீடு செய்யாமலும் இருக்க வேண்டாம்.

Tuesday, June 06, 2006

பங்குச் சந்தை சரிவுக்கான(??) காரணங்கள்!!

- குப்புசாமி செல்லமுத்து

கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைத் தழுவும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது. அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் தினசரிப் பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன். விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம்.

"இன்னிக்கு ரத்தம் பாக்காம விட மாட்டாங்க போல இருக்கே!!" இப்படித்தான் சிறிய, பெரிய அளவில் முதலீடு செய்திருக்கும் அனைவரும் தினந்தோறும் புலம்புவது. சமீபத்தில் இந்தியப் பங்குச்சந்தை கண்ட வரலாறு காணாத சரிவுக்கான சில காரணங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பரவியிருப்பதைப் பெரும்பாலானோர் அறிவர். இருப்பினும் இன்னொரு முறை அவற்றில் சிலதை ஆராய்வோம்.

"அமெரிக்காவில் வட்டி வீதம் 25% அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. அதனால் உலக முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்க அரசின் கடன் பத்திரத்தில் இட்டு வைக்க விழைந்ததின் விளைவு தான் இந்தச் சரிவு." இந்தக் கூற்றில் உண்மை இருந்தாலும், 0.25% (100 அடிப்படைப் புள்ளி என்பது 1% ஆகும்) வட்டிவீதம் அதிகரித்தது தான் இதற்குக் காரணம் எனச் சொல்லிட இயலாது. அவர்கள் தொடர்ந்து 16 தடவை வட்டி வீதத்தை 0.25% உயர்த்தி வந்துள்ளனர். அதன் அடிப்படையில், இந்தியா முதலிய தேசங்களில் இருந்து பணம் படிப்படியாகத் தான் வெளியேறியிருக்கும்..பொருள்>> பங்குவிலை கொஞ்சம் கொஞ்சமாக பல மாத இடைவெளியில் இறங்கியிருக்குமேயொழிய, இப்போது நடந்தது போல அல்ல.

கடந்த மூன்று வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் சென்செக்ஸ் 81.9%, 40.5% மற்றும் 55.7% என்ற அளவில் வளர்ந்துள்ளதை அறியலாம். மூன்றாண்டு முதலீடு 377%மும், இரண்டாண்டு முதலீடு 197%மும், ஓராண்டு முதலீடு 81.9%மும் வளர்ந்துள்ளது. இவ்வளவு உயர்ந்த ஒரு சரக்கு 20% சறுக்கியது பெரிய சரிவாகத் தெரியவில்லை. சென்செக்ஸில் அங்கம் வகிக்கும் 30 நிறுவனங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டில் 25% த்தை விடச் சற்றே குறைவு. அதன் அடிப்படையில் சென்செக்ஸ் நியாயமாக அடைந்திருக்க வேண்டிய ஏற்றமும் அதே அளவில் இருந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 80% ஐ விட அதிகமாக விலை உயர்ந்ததால், குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் லாபத்தை அள்ளுவது எதிர்பார்க்கக்கூடியது தான். அப்படி அவர்கள் ஒட்டு மொத்தமாக விற்றது தான் சரிவு..

இடது சாரிகள், அரசின் தாராளமயமாக்கல் முடிவுகளில் அதிக நாட்டாமைத்தனத் தாக்கத்தை உண்டு செய்வதான இன்னொரு கருத்து. அட, அது ஒரு வாரத்தில் மட்டும் தெரிந்த திடீர் ரகசியமா என்ன? ஊரறிந்த ஒரு உண்மையல்லவா அது? இடது சாரிகள் அங்கம் வகிக்கும் ஒரு அரசு முதலாளித்துவத்தைப் பெருகச் செய்வதில் உள்ள சிக்கல்கள் அறியப்பட்டது தானே? அப்படியானால், விலை இந்த அளவிற்கு ஏறியே இருக்கக் கூடாதே!!!

முதல் நாள் 400 புள்ளிகள் தொலைந்து போன போது, "manufactured crisis" என மத்திய நேரடி வரி வாரியத்தின் சுற்றறிக்கை குறித்துக் கருத்துச் சொல்லி, அதேல்லாம் வதந்தி எனத் தெளிவுபடுத்தினார் மாண்பு மிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட manufactured crisis தான் சரிவுக்குக் காரணம் என வைத்துக் கொண்டால், அவரது தெளிவாக்கத்திற்குப் பின் சந்தை மேலேறி வந்திருக்க வேண்டுமே?

சென்ற ஒரு வருடத்தில் நிகழ்ந்த கிடுகிடு வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. ஆயிரக்கணக்கான கோடிகளை புது நிதி வெளியீடுகள் (NFO) மூலமாகத் திரட்டிய பரஸ்பர நிதி நிறுவனங்கள், அநியாய விலைக்குப் பங்குகளை IPO மூலம் வெளியிட்ட பேராசை முதலாளுகள், சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் உள்ளே நுழைந்த சிறு முதலீட்டாளர்கள், அவர்தம் அறியாமையைப் பயன்படுத்தி இரத்தம் உறிஞ்சிய தரகர்கள், ஆலோசகர்கள், பரஸ்பர நிதி விற்பனையாளர்கள், விலைகளைச் செயற்கையாக ஏற்றிப் பிடிக்கும் சில விஷம அங்கத்தினர் என அனைவரும் இதற்குப் பொறுப்பு.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட. Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

போனது போகட்டும்.. பிரேதப் பரிசோதனை மாதிரி பிணத்தை திரும்பத் திரும்ப அறுத்து அசிங்கப் பட வேண்டாம். தவறுகள் சொல்லித் தரும் பாடம் விலை மதிப்பற்றது. சமீபத்தில் செய்த சில தவறுகளை மறுபடியும் செய்யாமல் பார்த்துக் கொள்வோமாக.

நீண்ட கால அடிப்படையில் வளமான எதிர்காலம் கொண்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை. பத்து வருடத்தில் நான்கு மடங்காக அது ஏறுமென்றால், தற்காலிக 20% சரிவு குறித்து அதிகமாகக் கவலையுறவேண்டிய அவசியம் இல்லை. ஒரு வருடத்திற்கு விலை உயராவிட்டாலும் (அல்லது சரிந்து கொண்டே இருந்தாலும்), நீங்கள் வாங்கியிருக்கும் கம்பெனி சிறந்த முறையில் தொழில் செய்து, அதனைப் பெருக்கி வருமானால், உங்களுக்கென்ன கவலை?

பங்கு வாங்கி அடுத்த வாரத்திற்குள் விற்று பணம் சம்பாதிக்கும் ஆசையில் சில இலட்சங்களைக் கடன் வாங்கியிருந்தால் தான் சிக்கல்.

இது போன்ற தருணங்களில் கவனமாக இருக்க வேண்டிய சில தெளிவான குறிப்புகளை இன்னொரு பதிவில் விவாதிக்கலாம்.வளம் பெறுவோம்.

Thursday, June 01, 2006

NAV மேட்டரும் சாப்ட்வேர் ஆசாமியும்!!

-குப்புசாமி செல்லமுத்து

"டேய், எவனப் பாத்தாலும் நாவ் நாவ் னு சொல்லிட்டுத் திரியறானுகளே, என்ன எழவுடா அது" கணியப்பன் (கணிணியப்பனின் சுருக்கம்) கேள்வி.

"நாவ் இல்லடா அது. NAVனு சொல்லனும். என்.ஏ.வி. ஒரு வாட்டிச் சொல்லு பாக்கலாம்" காசப்பன் பதில்.

"அடங்குடா டே. நீ SAP ஐ சாப் சாப் னு சொல்லிக் கொலை பண்றியே. நான் கண்டுக்கிட்டனா?"

"சரீ சரீ...ரிலாக்ஸ். உனக்கு இப்போ NAV மேட்டர் தெரியனும் அவ்ளோ தானே? அடிப்படையில இருந்து உனக்கு விளக்கணும்டா"

"ம்..ம்"

கதை சொல்ல ஆரம்பிக்கிறார் நம்ம காசப்பன்.

"உங்க சாப்ட்வேர் கம்பெனியில பத்து பேர் இருக்கீங்கன்னு வச்சுக்கோ. உன்னை மாதிரியே அவங்களுக்கும் ஷேர்ல இன்வெஸ்ட் பண்ண ஆசை"

"எங்கூட இருக்குற எவன்டா ஷேர்ல இன்வெஸ்ட் பண்றான்? அவனவன் ECRல (பைக் பின் சீட்டுல பொண்ணுங்கள வச்சு) சுத்தறதுக்கே டைம் போதலைன்னு பொலம்புறானுக"

"உன் ஆதங்கம் எனக்குப் புரியுதுடா. அதப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். நான் சொல்றதை இப்போ ஒழுங்கா கேக்கறியா இல்லியா?"

"ம்"

"உங்களுக்கு டைம் இல்லததாலையும், ஷேர் பத்தி விவரம் தெரியாததாலையும் வேற யார் கிட்டயேவது பணத்தக் குடுத்து மேனேஜ் பண்ணலாம்னு ஐடியா பண்றீங்க. ஆளுக்கு 10,000 ரூபா போட்டதால் ஒரு லட்சம் ஆகுது மொத்த அமவுண்ட். என்னோட திறமை மேல நம்பிக்கை வச்சு அந்தப் பணத்தை இன்வெஸ்ட் பண்ணச் சொல்லி என் கிட்ட hand over பண்றீங்க."

"மாப்ள, அங்க சுத்தி இங்க சுத்தி மேட்டருக்கு வந்துட்ட பாத்தியா?"

"சும்மா ஒரு பேச்சுக்குத்தான்டா. அந்தப் பணத்த நான் சின்ன சின்ன யூனிட்டா பிரிச்சு வச்சுக்கறேன். அதாவது 10,000 யூனிட்டா டிவைட் பண்ணின பின்னாடித் தான் முதலீடு பண்ணவே ஆரம்பிப்பேன். ஒரு லட்சத்தை 10,000 யூனிட்டா பிரிச்சா ஒவ்வொரு யூனிட்டோட மதிப்பு என்ன?"

"ம்.. பத்து ரூபா"

"கரெக்ட். அது தான் NAV. Net Asset Value. அதாவது ஒரு யூனிட்டோட நிகர சொத்து மதிப்பு. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதன் முதலா ஆரம்பிக்கும் போது NAV ரூ.10 தான் இருக்கும். அந்தப் பணத்தை அப்படியே நான் ஷேர்ல முதலீடு பண்றேன். ஷேர் விலை ஏற ஏற நம்ம முதலீட்டு மதிப்பும் ஏறும். ஒரு வாரத்துல நம்ம முதலீடு 1,10,000 ஆகுதுன்னு வச்சுக்கோ. அப்போ NAV என்ன?"

"1,10,000/10000 எவ்வளவு? 11 ரூபா. டேய்... அப்போ இன்வெஸ்ட் பண்ணிய பிறகு விலை குறைஞ்சா NAV கம்மி ஆகுமா?"

"ஒரு லட்சம் போட்டது 95 ஆயிரம் ஆனா, NAV ரூ.9.50 ஆகும்ல. சாப்ட்வேர் என்ஜினியர் மாதிரியாடா கேக்குறே நீ?"

"நாங்கல்லாம் எப்படா காசோட மதிப்ப பாத்திருக்கோம்? சரி.. நீ சொல்றதப் பாத்தா மியூச்சுவல் ஃபண்ட் ரொம்ப சேஃப் அப்படீன்னெல்லாம் சொல்லிக்க முடியாது போல இருக்கு"

"உண்மை தான். ஆனா நீயே முதலீடு செய்யறதுக்குப் பதிலா, ஒரு திறமையான ஆள் - என்னை மாதிரி - கிட்ட குடுத்து முதலீடு செய்யறீங்கல்ல.. அதனால முட்டாள் தனமான முடிவு எடுத்து கண்ட கழுதைக் கம்பெனி ஷேர் வாங்கறத அவாய்ட் பண்ணிறலாம்"

"மாப்ள.. நீ ரொம்ப நல்லவன்டா!!!" கைப்புள்ள ஸ்டைலில் ·பீல் பண்ணினான் கணியப்பன்.

"ஹாஹாஹா.. அதுக்குத் தான் அந்த ஒரு லட்சத்துல 2 ஆயிரம் நான் எடுத்துக்கப் போறனே. Fund Management Fees மச்சி fees"

$%^$^(&^()*()*^
"என்னை விடுடா நான் போறேன்.." கணி எஸ்கேப்.

"டேய் டேய்..எங்கடா போறே. சொல்லிட்டுப் போ..."

"ம்ம்ம்.. என் பைக்கை விக்கப் போறேன். பின்னாடி சீட் காலியாவே வச்சு வண்டி ஓட்டறதுக்கு எதுக்குடா பைக்"

சாப்ட்வேர் ஆசாமி எப்படியோ mutual fund மேனேஜரான காசப்பனிடம் இருந்து தப்பிவிட்டான். அட.. இவன் போனா என்ன. அதான் கழுத்துல ID கார்டு தொங்கப் போட்டுக்கிட்டு நிறையப் பேர் அலையறானுகளே!!!!