Tuesday, May 16, 2006

கோடைத் தள்ளுபடி @ Dalal Street

குப்புசாமி செல்லமுத்து

கடந்த 3-4 தினங்களில் மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் SENSEX கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் குறைந்திருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் இதை ஏதோ 'இழவு' செய்தி போல மிகைப் படுத்திக் காட்டி வருகின்றன.
  • பங்குச் சந்தை மூன்றாம் நாளாகத் தொடர்ந்து வீழ்ச்சி
  • பங்குகள் சரிவு - 400 புள்ளிகள் இறக்கம்
  • அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது கொண்டிருந்த நாட்டம் தளர்வு

இது போன்ற செய்திகளைக் கேட்டுப் பதட்டப்படத் தேவையில்லை.
இதே மீடியாக்கள் ஒரு வாரம் முன்பு வரை 'இந்தியப் பங்குகள் இன்னும் கவர்ச்சிகரமாகத்தான் உள்ளன' என்றும் 'இந்த வருட முடிவிற்குள் SENSEX 15,000 புள்ளிகளை எட்டிவிடும்' என்றும் ஜோதிடம் சொல்லின. அதே மீடியாக்கள் இப்போது பங்குகள் குறையும் போது ஒப்பாரியும், ஓலமும் இட்டு வருகின்றன.

காலிலே கத்தியைக் கட்டி நடக்கும் சேவற்சண்டையைப் பார்த்த படி ஆர்ப்பரிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சண்டையிடுவதும், காயப்படுவதும் சேவல்கள் தான்; இவர்கள் அல்ல.

பங்கு முதலீட்டின் குரு என (இவர்கள் கூற்றுப் படி) கருதப்படும் மார்க் ஃபேபர் (Mark Faber) இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பங்குகள் 30% வரை குறையச் சாத்தியம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதே குரு சில வாரங்களுக்கு முன், "என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து அமெரிக்கா மற்றும் இந்தியப் பங்குகள் இதில் எதை வாங்குவாய் என்று யாராவது கேட்டால், இந்தியப் பங்குகள் எனக் கூற எனக்கு எந்த விதத் தயக்கமும் இருக்காது" என்று சொன்னார். இப்போது என்ன மாறி விட்டது?

இவர்கள் எழுப்புவது இரைச்சல். பங்குகள் ஏறும் போதும் இறங்கும் போதும் அதற்காகக் காரணம் கற்பித்து நியாயப் படுத்துவது தான் தலையாய பணி இம்மாந்தர்கட்கு.

சரி... பங்குகள் திருத்தமும், சரிவும் (correction & crash) அடையும் போது என்ன செய்ய வேண்டும்? அது தனிப்பட்ட நபர்களைப் பொறுத்தது. ஆனாலும், புத்திசாலி முதலீட்டாளர் எனும் கற்பனைத் தொலைக்காட்சியில் வரும் செய்தியைப் பாருங்கள்.

"பங்குச் சந்தையின் முன் ஒரு பெரிய பேனர் தொங்க விடப் பட்டுள்ளது. அதில் இன்று பங்குகள் 450 புள்ளி தள்ளுபடியில் விற்பனை ஆவதாக எழுதப் பட்டுள்ளது. தி.நகர் ரங்கநாதன் street போல dalal street முழுதும் அலை மோதும் மக்கள் கூட்டம். அனைவர் முகத்திலும் திருவிழாக் களை. தள்ளுபடியில் பங்குகள் விற்கப்படும் செய்தி நாடு முழுதும் பரவிக் குடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அடுத்த வாரத்திலும் இதே தள்ளுபடி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியப் பங்குகள் இன்னும் 30% குறையும் என மார்க் ஃபேபர் சொன்னது கேட்டு ஏக குஷியில் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். கையில் 'மைக்'குடனும், முகத்தில் உற்சாகத்துடனும் செய்திகளைச் சேகரித்துத் தருகிறார் செய்தியாளர்."

கற்பனை செய்து பார்க்க நன்றாக இருக்கிறதா?

மற்றோர் விற்கும் போது வாங்குவதும், வாங்கும் போது விற்பதும் தான் சாமர்த்தியமான முதலீட்டாளருக்கு அழகு. மந்தைக் கூட்டத்திலிருந்து வேறுபடுவது தான் இந்தத் துறையில் வெற்றி பெற்ற அனைவரிடமும் நாம் காணும் பண்பு.

ஆனால், இதைச் சொல்வது எவ்வளவு எளிதோ, அதே அளவு அரிது அதைக் கடைபிடிப்பது. மிகுந்த மனோதிடம், பொறுமை, விவேகம், தேவையான சமயத்தில் அசாத்திய வேகம் என நிறையப் பக்குவங்கள் தேவை.

கொஞ்சம் சைக்காலஜி, கொஞ்சம் எக்கனாமிக்ஸ், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் பொது அறிவு ....... ஒன்றாகச் சேர்த்தால் பங்குச் சந்தையில் நீங்களும் ஒரு 'லார்ட்' தான்.!!

வளம் பெறுவோம்.

7 comments:

Vaa.Manikandan said...

ஏதோ 'இழவு' செய்தி போல மிகைப் படுத்திக் காட்டி வருகின்றன.

appo 'izavu'seythi illaya?

பிரதீப் said...

வயித்துல பால வார்த்தீங்க சாமி.
அப்ப என்னோட யூனிட் லிங்க் பாலிஸிக்கு இன்னும் நல்லாக் குறைந்த பிறகு பணம் கட்டுகிறேன் :)

Kuppusamy Chellamuthu said...

சில மாதங்கள் முன் குறியீடு 10,000 த்தைத் தொட்ட போது மகிழ்ந்தவர்கள், இப்போது 11,500 ஐ மரணம் போலப் பாவிப்பது தான் 'இழவு'; மற்றபடி அந்த செய்தி ஒன்றும் இழவு இல்லை. 12,500 இல் முடுக்கி முடுக்கி பங்கு வாங்கியவர்கள் 11,500 விற்பது ஏன்? இன்னும் அதிகம் வாங்கலாமே? அது தான் நான் சொன்ன செய்தி. மற்றபடி 11,500 என்பது பாதுகாப்பானதா இல்லையா என்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த ஒருவர் தனது முதலீட்டு மதிப்பு ஒரு இலட்சத்துக்கும் மேல் கடந்த இரு நாட்களில் மட்டுமே குறைந்திருந்தாலும், இன்று ஒரே நாளில் ரூ60,000 மதிப்பிலான பங்குகளை வாங்கினார். அவரது முடிவு அவரது செயல் சரியானதா என்பது அவருக்குப் புரிந்தால் போதும்!!

குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

பிரதீப் நன்றி. நான் சொல்ல வந்தது இது போன்ற நேரங்களில் பதற்றமடைந்து இருக்கும் பங்குகளை விற்க வேண்டிய அவசியமில்லை என்பதே. சென்ற வாரம் வாங்குவதை விட இப்போது வாங்குவது விவேகமான செயல்.
ஆனால் இன்னும் குறையும் எனக் காத்திருப்பது நல்லதா எனத் தெரியவில்லை. மார்க்கெட்டை 'டைமிங்' செய்வது மிகக் கடினம்; ஏன் இயலாத செயல் என்றே சொல்லலாம். யூனிட் லிங்க் பாலிஸிக்கு இன்னும் நல்லாக் குறைந்த பிறகு பணம் கட்டுவதாக நீங்கள் சொல்வது சரியல்ல என்றே படுகிறது. நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம் :-)
குப்புசாமி செல்லமுத்து

southasian said...

u r right.....

southasian said...

yes, u r right....

southasian said...

yes, u r right.....