Saturday, May 27, 2006

நிறுவனத்தின் உண்மையான (பங்கு) மதிப்பு

-குப்புசாமி செல்லமுத்து


பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.


அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ429.82.
"நூறு ரூவா குடு. 5 வருசத்துல அதத் திருப்பித்தரேன்" என யாராவது கேட்டா, "சாரி. 77 ரூவா முப்பத்தெட்டுக் காசுக்கு மேல குடுக்க முடியாது"ன்னு சொல்லிருங்க.


சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எங்கனம் இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.


திரு.காசப்பன் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் டிரைவர் சம்பளம், போலீஸ் மாமூல், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ57,000

இரண்டாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ50,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ45,125


மூன்றாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
கார் விற்ற காசு = ரூ1,50,000
மொத்தப் பணம் = ரூ2,10,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ1,80.048.80

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,000 + 45,125 + 1,80.048.80 = ரூ2,82,173.8


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், காசப்பனிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால், இரண்டு இலட்சத்து என்பதாயிரத்துக்கு மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 282 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."


தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்.. அட அவ்வளவு ஏங்க, மாமனார் வரதட்சினை இந்த வருசத்துக்குப் பதிலா அடுத்த வருசம் தருவதாச் சொன்னாக் கூட ஏமாந்துராதீங்க.


வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. காசப்பன் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்

4. வரதட்சனை குறித்தான வரிகள் நகைச்சுவைக்காக மட்டுமே.

17 comments:

வி.கண்ணன் said...

அருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் பணி!!

செல்வன் said...

குப்புசாமி ஐயா
இது பற்றி நான் இட்ட முந்தைய பதிவுகளை பார்க்கவும்.

அன்புடன்
செல்வன்

http://holyox.blogspot.com/2006_01_15_holyox_archive.html

(8 parts in total)

நன்மனம் said...

நல்ல செய்தி. வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

//ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். //
சரி, அப்படியானால், பங்கு விலை குறைவதன் காரணம் என்ன? இந்த FV - factor குறைவதனாலா? இல்லை பின்னாளில் லாபம் குறையுமோ என்று பங்கு தாரர்கள் எண்ணுவதாலா?

செந்தில் குமரன் said...

பங்கு வர்த்தகத்தை பற்றி நீங்கள் எழுதி வரும் தொடர் மிகவும் உபயோகமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

முத்து(தமிழினி) said...

குப்ஸ்,

நல்ல தெளிவாக விளக்கம். இந்த பணவீக்கத்தை அரசாங்கம் மதிப்பிட்டு அறிவிப்பதில் ஏதோ ஃபிராடு பண்ணுதாமே?

அது என்னன்னு பாருங்க..

Kuppusamy Chellamuthu said...

வி.கண்ணன் & செல்வன். பின்னூட்டங்களுக்கு நன்றி. குறுப்பாக தன் பதிவு பற்றி எடுத்துச் சொன்ன செல்வனுக்குச் சிறப்பு வணக்கம்.

-குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

நன்றிங்க நன்மனம்!!

//பங்கு வர்த்தகத்தை பற்றி நீங்கள் எழுதி வரும் தொடர் மிகவும் உபயோகமாக உள்ளது. // குமரன், தொடர் எல்லாம் ஒன்னும் இல்லீங்க. துண்டு துண்டாத்தானே ஒவ்வொரு பதிவும் இருக்கு?

பொன்ஸ் & முத்து, உங்க கேள்விக்கு தனியாகப் பதில் சொல்ல வேண்டும்.

-குப்புசாமி செல்லமுத்து

ராபின் ஹூட் said...

குப்புசாமி சார்,
பணவீக்கம் என்றால் என்ன என்று நண்றாகப் புரிய வைத்துவிட்டீர்கள். பணவீக்க விகிதம் 0% என்றால் பணத்தின் மதிப்பு எதிர்காலத்தில் மாறாதது.
எந்த்த்ச் சூழ்நிலையிலாவது -ve வில் பணவீக்கம் போகுமா?

Kuppusamy Chellamuthu said...

//சரி, அப்படியானால், பங்கு விலை குறைவதன் காரணம் என்ன? இந்த FV - factor குறைவதனாலா? இல்லை பின்னாளில் லாபம் குறையுமோ என்று பங்கு தாரர்கள் எண்ணுவதாலா? // இது பொன்ஸ் கேட்டது..

அனைவராலும் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டதும், நடைமுறையில் நிராகரிக்கப் பட்டதும் இந்த மதிப்பீட்டு முறை தான். சாதாரண சிறு முதலீட்டாளர் முதல், அறவார்ந்த பரஸ்பர நிதி நிர்வாகி வரை 99.99% சமயங்களில் இந்தக் கோட்பாடு மறக்கப்படுகிறது என்பதே உண்மை.

சரி.. நீங்கள் சொன்ன இரண்டுமே பங்கு விலைச் சரிவுக்குக் காரணமாக அமையலாம்.
1. பணவீக்கம் அதிகமானால் வருங்கால இலாபத்தின் தற்போதைய மதிப்பு குறைவது
2. ஒரு நிறுவனம் தொய்வடைந்து எதிர்காலத்தில் நலிந்து போகுமென முதலீட்டாளர்கள் கருதுவது.

ஆனா.. தினசரி ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம்?? அதெல்லாம் pull/push சமன்பாடு செய்யும் வேலை.

-குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

முத்து, உங்களுக்குச் சொல்ல என் கிட்ட இருக்குற ஒரே பதில், "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!"

but matter is serious..

Kuppusamy Chellamuthu said...

//எந்த்த்ச் சூழ்நிலையிலாவது -ve வில் பணவீக்கம் போகுமா?//

ராபின்: (+ve) inflation ஐ பணவீக்கம் எனக் குறிப்பது போல, (-ve) deflation ஐ பணவற்றல் எனலாமா?? நம்ம பதிவு தானே, எனவே எனலாம்.

விலை சரியும் இந்தப் பணவற்றல் சுகமானதாத்தான் தெரியும். இவ்வாண்டு 10 இலட்சம் மதிப்புள்ள வீடு அடுத்த ஆண்டு 8 இலட்சம்; இன்று 25 ரூபாய்க்கு உண்ணும் உணவு, நாளை 20 ரூபாய். நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறதா? ஆனால் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். பணம் அப்படியே ஸ்தம்பித்துப் போய் விடும்; வளர்ச்சி இருக்காது.

நமது தேசத்தில் இது போன்றதொரு சம்பவம் நடக்காது என நம்பினாலும், பணவற்றல் உலக வரலாற்றில் ஏற்படுத்திய பாதிப்புகள் கண் முன் காணக் கிடக்கின்றன. ஜப்பான் 10 வருடத்திற்கும் மேலாக வட்டி வீதத்தை 0% (அதை விட கொஞ்சம் கூடுதலாக) பராபரித்தும், அதன் குடிமக்கள் செலவு செய்யத் தயாராக இல்லை.

நாமெல்லாம் ஜப்பானில் பிறந்திருக்க வேண்டியவர்கள் :-)

-குப்புசாமி செல்லமுத்து

ராபின் ஹூட் said...

தங்களின் விளக்கத்திற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி குப்புசாமி.

Anonymous said...

Vilai sarivukkana innoru karanathiaum solla virumbukiren
oru porullin "Future and option" nillai kurainthalum immathiriayana nilai yhetpadalam.

eduthkattaka thangathin vilai en kadantha oru varudathil makathana vilai uyarvai thotullathu??

thanga viyaparikal thangam virporukku margin thokaiyil thangam kodukka mun vanthullathal.
athavudu 10%(margin money varies depends on the person and the remaining money should be return back to the owner only after a period of time)munpanam (Future and option) petrukondu thangathai kodukka munvanthullathal appporullai vangum vadikkaiyallarkallin ennikkaiyum uyarnthullathu.Innilaai kurainthallum vilai sarivu erpadalam.

Sivaprakasam said...

ஆகா, எவ்வளவு அழகாக சொல்லிட்டீங்க - தற்போதைய மதிப்பு பற்றி. ரொம்ப நன்றி.

Sivabalan said...

குப்புசாமி செல்லமுத்து,

அருமையான பதிவு!!.

இந்த விழிப்புணர்வு பணம் வைத்திருக்கும் எல்லோரிடமும் வரவேண்டும் (என்னையும் சேர்த்துதான்), அப்பொழுதுதான் நாடு வளரும் நாடு, நலம் பெறும்.

நன்றி.

S.முத்துவேல் said...

Good Explain.
Thank You...