Sunday, May 14, 2006

கலைஞரும் தளபதியும் - அடுத்த கட்டம்

குப்புசாமி செல்லமுத்து

தன் மகன் ஸ்டாலினுடன் முதல் வரிசையில் மேடை மீது அமர்ந்திருந்தார் கருணாநிதி. பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இருந்த சிதம்பரம் தன் மகன் கார்த்திக்கை இரண்டாவது வரிசையில் உட்காரச் செய்ததே பெரிய விஷயம் எனப்பட்டது. ஜெயலலிதாவை பெண் பெரியார் என்று வெட்கமின்றி வர்ணித்த வீரமணி கூட வந்திருந்தார். அவருக்கு இரண்டு இருக்கை தள்ளி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உட்கார்ந்திருந்தார்.

சனிக்கிழமை (13-மே-2006) அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த தி.மு.க அரசின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி தான் இது. நேரில் கண்டு வந்த ஒருவரது பிரதிபலிப்பு!! What justice does this write-up do for this blog on stock market? well.... probably no justice. ஆனாலும் கை அரித்ததன் விளைவால் எழுதப்பட்டது.

"ஏய்.. அங்கே பாரு கவிஞர் வைரமுத்து" கார்த்திக் சிதம்பரத்திற்கு இரண்டு வரிசை பின்னால் இருந்த கவிஞரைச் தன் சகாக்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு கழகக் கண்மணி.

"நம்ம எம்.எல்.ஏ வந்துட்டார் பாரு. சும்மா எள வயசு; அநேகமா மந்திரி சபையிலேயே அவருக்குத் தான் சின்ன வயசுன்னு நினைக்கிறேன்." இப்படிக் குதூகலப் பட்டவர் என்னை உள்ளே அழைத்துப் போனவர். மனைவி, மகன், மகள், பெற்றோர் என குடும்பமாய் வந்திருந்தார் அந்த எம்.எல்.ஏ. நம்மைப் போலவே நடுத்தர வர்க்கத்து மனிதன் என்பதைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம். மாபெரும் சபைதனில் தன் மகன் மண்ணாளும் மந்திரியாகப் போவதை காணவந்த அவரது தாய் தந்தையர் முகத்தில் பரவசம். எனக்கே சில நிமிடங்கள் அந்தப் பரவசம் பற்றிக் கொண்டது உண்மை. தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஆள் என்பதைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறேன்.

"உலகத் தமிழர் வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க" உணர்ச்சி பொங்க அடித்தொண்டையில் இருந்து கூவிக்கொண்டிருந்தார் ஒரு காக்கிச் சட்டை மனிதர். காசுக்கோ, பிரியாணிக்கோ, பாட்டிலுக்கோ கத்துபவராகத் தெரியவில்லை; உணர்வோடு கலந்திருந்தது அந்தக் கூவல். ஆட்டோ ஓட்டுனராக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். (எல்லாக் கட்சியிலும் இது போன்ற தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்) சமீப காலமாக இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர் வருகை அதுகரித்திருப்பதாகச் செய்தியைப் பார்க்கிறோம். தமிழினத் தலைவர் ஆட்சிக்கு வந்து விட்டார்; ஆனால் உலகத்தமிழர் நிலை? இலங்கையில் மட்டும் இருந்த தமிழர்களை உலகெங்கும் சிதறி ஓடச் செய்து உலகத்தமிழராக ஆக்கிய சிங்கள அரசுக்கு, தமிழத்தலைவர் விடுக்கும் செய்தி என்ன? காஷ்மீர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை என தீர்வு காணப்படாமல் பிரச்ச்சினைகள் இருக்கும் வரை தான் அரசியலும், அரசியல்வாதிகளும்!!

"இத்தன நாளு ஒரு தி.மு.க பங்சன்ல ஒன்னுல கூட பத்து போலீஸ்காரனுக்கு மேல இருக்க மாட்டானுக. இன்னிக்குப் பார் எத்தனை பேருனு" எனக்குப் பின் சீட்டிலிருந்து யாரோ அப்செர்வ் செய்தார்கள். பத்து என்கிற அவரது எண்ணிக்கை மிகைப்(குறை)படுத்தப் பட்டதாக இருக்க வேண்டும். பதவியேற்பு விழா என்பது கட்சி விழா அல்ல, அரசு விழா என்பதை நான் எப்படி அவருக்குச் சொல்வேன்? வாழ்க பகுத்தறிவு.

"இந்தக் கூட்டத்துல வந்து உக்கார வைகோவுக்கு குடுத்து வக்கல" என்றொரு கமெண்ட். கூட்டத்துல உட்கார வச்சதால தான் வைகோ போனார் என்பது உண்மையல்லவா?

முதல்வராகப் பதிவியேற்றதும் தனது இருக்கைக்கு மீண்டும் செல்ல தயாநிதியின் தயவு கலைஞருக்குத் தேவைப்பட்டது. இந்த வயதிலும் பெரியவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எப்படிப் பிரச்சாரம் செய்தார் என்பது வியப்பில் தான் ஆழ்த்தியது. அவரது பேச்சு, எழுத்து, சிந்தனை இவற்றில் காணப்பட்ட தெளிவு குறைந்த பாடில்லை. அதெல்லாம் சரி.. நடக்கவே முடியாத ஒருவர் எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார்? ஜோதிபாசு போல, காமராசர் போல விலகிக் கொண்டிருக்கலாமே? (அமெரிக்காவைப் போல்) இரு முறைக்கு மேல் எவரும் முதல்வராகக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் என்ன? கலைஞருக்குச் சாதகமாச் சிந்தித்தால், எம்.ஜி.ஆர். கூடத் தான் முதல்வராயிருந்த கடைசிக் காலத்தை மருந்துவமனையில் மட்டுமே கழித்தார். வாஜ்பாய் கூட நடக்க முடியாமல் தான் இருந்தார்; ஆனாலும் பிரதமர் தானே?

ஆறு மாதகாலம் ஒப்பேற்றிய பின்னர் முதுமையைக் காரணங்காட்டி கலைஞர் விலகிக் கொள்ளக்கூடும். தான் வாழும் காலத்திலேயே ஸ்டாலினை முதல்வராக்கிட வேண்டுமென்பது அவரது அவாவாக இருக்கும். நேரு, இந்திரா என யாருமே இதைச் செய்து பார்க்கவில்லை. தேவகெளடாவைத் தவிர?

சில பத்தாண்டுகளாக கட்சியில் பணியாற்றிய ஸ்டாலின் சென்ற முறையே (1996) அமைச்சராக ஆக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதற்கேற்ற துணிச்சல் கருணாநிதியிடம் அன்று இல்லை. இம்முறை தளபதி பதவியேற்ற போது அரங்கில் பலத்த கைதட்டல், விசில்!! தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொண்டது போலத் தான் தோன்றியது. அல்லது ஸ்டாலினை ஏற்றுக்கொண்டவர்களை மட்டும் கட்சி ஏற்றுக்கொண்டதா?

தி.மு.க. வில் பேராசிரியர், ஆற்காட்டார் என பெயரளவிலாவது கட்டுக்கோப்பான இயக்கம் இருப்பது போலத் தெரிகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வை விட இவர்கள் ஒரு படி மேல்.

குடும்ப அரசியலை (குறிப்பாக ஸ்டாலினை) ஏற்றுக் கொள்ளாத வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் என்.கே.கே.பெரியசாமி இருவரும் தங்கள் வாரிசுகள் மூலம் அந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. இனி எதிர்ப்பு எழாது என் நம்பலாம். கலைஞர் என்றுமே ராஜதந்திரி தான்.

எத்தனை ஆண்டுகள் தளபதி இளைஞர் அணித் தலைவராகவே (இளைஞராகவே எனப் பொருள் கொள்க) இருப்பார் என்ற கேள்வியை நானே கொண்டிருந்தேன்; ஒன்றரை ஆண்டு முன் ஒரு கல்லூரி வளாகத்தில் ஜாக்கிங் செய்ய வந்திருந்த அவரைக் காணும் முன். பேரப்பிள்ளை பெற்றவர் என்று தோற்றத்தைக் கொண்டு யாரும் சொல்லிவிட முடியாது. கமலுக்குக் கூட வயதாகி விட்டது; ஆனால் ஸ்டாலினுக்கு இல்லை.

பதவியேற்ற அத்தனை பேரும் கரகரப்புக் குரல்காரர்கள் தான். மென்மையாகவும், நளினமாகவும் அதே சமயத்தில் தெளிவாகவும் பெசக்கூடிய (சிதம்பரம் போல articulate) மனிதர்கள் கழகத்தில் இல்லை. உணர்ச்சியை தொட்டுப் பேசத்தான் பேச்சாளர்கள் அதிகம் இருக்கிறார்களே தவிர அறிவைத் தொட்டுப் பேச யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

கலைஞருக்குக் கலைத்துறையியின் மேல் வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. திருட்டு வி.சி.டி. முன் போல் கிடைக்குமா? அரிசியெல்லாம் 2 ரூபாய்க்கு தற்றீங்க. வி.சி.டி.யும் அப்படியே குடுத்தா நல்லா இருக்கும்.

வெளியே வரும் போது அரங்கத்திலிருந்து, ரிப்பன் கட்டிடம் வரை போலீஸ்காரர்களை எல்லாம் சென்னைத் தமிழில் கலாய்த்துக் கொண்டே வந்தார் ஒரு பெண். தன் தலைவனை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் அவருக்குச் சந்தோசம்.

காமராசரும், காங்கிரசும் தோற்கடிக்கப்பட்டவுடன் இரண்டு கழகங்களும் மாறி மாறி (அண்ணா காலம் முதல்) ஆண்டதில் தமிழகம் என்ன முன்னேற்றம் கண்டிருக்கிறது என வியக்கவேண்டியிருக்கிறது. அரசை நம்பி யாரும் இல்லை; நமது உழைப்பே போதும் என்கிறதாக மாறிப் போனது நம் மன நிலை. திருப்பூர் நகரம் சிறந்த எடுத்துக்காட்டு. "கால் நூற்றாண்டுக்கும் மேலாக, பேசிப்பேசியே நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். இதை இனி மெலும் அனுமதித்தால் உலகில் உன்னையும் என்னையும் போல் முட்டாள் எவனுமில்லை" நெய்வேலியில் பாரதிராஜா சொன்னது நினைவு வருகிறது. அதே தான் எமது கருத்தும். "பாரதிராஜா ஜெயலலிதா கிட்ட காசு வாங்கிட்டுத் தான் இப்படிப் பேசுகிறார்" என சன் டி.வியில் குதித்த சரத்குமாரும், ராதிகாவும் இப்போது எதை வாங்கிக்கொண்டு அந்தப் பக்கம் போனார்கள்?

13 comments:

Anonymous said...

Good observations!!

Anonymous said...

பதிவின் இடையில் உள்ள தங்கள் சொந்த கருத்துக்களை தவிர்த்திருந்தால் அருமையான பதிவு.

அன்புடன்,
துபாய் ராஜா.

பிரதீப் said...

உங்கள் சொந்தக் கருத்தைத் தவிர்க்காமலும் :) இது ஒரு நல்ல பார்வை. நல்லா கவனிச்சுப் பாத்திருக்கீங்க... சன் டிவியில பாத்திருந்தா ஒரு பெரிய விஷயத்தைச் சாதிச்ச நிம்மதியோட கலாநிதி கூட கூட்டத்தில் ஒருவராகக் கலந்து நின்றிருந்தது தெரிய வந்திருக்கும்.

Kuppusamy Chellamuthu said...

உண்மைதான்!! இந்த வெற்றியில் சன் டி.வி.யின் பங்கு மகத்தானது. சன் டி.வி.யின் விரிவாக்கத்திற்கு இந்த வெற்றி ஆற்றப்போகும் பங்கும் மகத்தானது. அதனால் தான் exit poll வெளிவந்ததுடன் அதன் பங்கு விலை ரூ.1200 இல் இருந்து ரூ1500 ஆக உயர்ந்தது. நன்றி கலாநிதி!!

Vaa.Manikandan said...

//ஆறு மாதகாலம் ஒப்பேற்றிய பின்னர் முதுமையைக் காரணங்காட்டி கலைஞர் விலகிக் கொள்ளக்கூடும். தான் வாழும் காலத்திலேயே ஸ்டாலினை முதல்வராக்கிட வேண்டுமென்பது அவரது அவாவாக இருக்கும். //

I dont know the reason. but I like Stalin very much. I can find some attractiveness with him.

Good observation.Good article

Prema said...

Good article at correct time and everyone should acknowledges the facts written by you.Even the small happenings are observed properly and written well (Ex: no good seakers on knowledge front, auto driver,..etc)
The ending of this article throws a light to the readers that nowadays people are dependent on their hard work and not on the govt!!

John Prabhakar said...

Nice observations. Taking oath is a requirement. This ceremony has been made into a public function (that too in a stadium) and GOs signed immediately just to pander to the politician's egos at public expense. The first scheme is to become operational only from CM's birthday(June 3). So why the hurry..There were ministries sworn in Governor's chamber. I read a statistic that a sizable number of rural homes in TN dont have electricity connection. They would have been happier to recieve a power connection than a television set that they cannot use.

Ashok said...

Good Observaion.

Kuppusamy Chellamuthu said...

துபாய் ராஜா, பிரதீப், மணிகண்டன், பிரேமா, ஜான், அசோக் எனப் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

சொந்தச் சித்தாந்தங்களில் விளைந்த கருத்துகளை அதிகம் திணிக்க நான் முயலவில்லை. இருந்தாலும் flash of the moment இல் தோன்றிய எண்ணத்தின் பிரிதொறு வடிவம் தான் இந்தப் பதிவு. பொருளாதாரச் செய்திகளை விவாதிக்கும் இந்த இடத்தில் இதை இட்டு வைத்தது வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.

8 அமைச்சர்களைக் கொண்டு காமராசர் செய்ததை விட 30 அமைச்சர்களைக் கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். May be I am comparing apple with orange!!

-குப்புசாமி செல்லமுத்து

மாயவரத்தான்... said...

ஜெயலலிதா வாழ்க! அதிமுக வாழ்க!

மாயவரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக அற்புதமாக விருந்து வைத்த என் அம்மா வாழ்க!

Anonymous said...

thaatha vantha varatchi nivaranam, amma vantha vella nivaranam. ivlo thaan vithayasam

Anonymous said...

thatha vantha varatchi nivaranam, amma vantha vella nivaranam..ivlo thaan vithyasam.

Free a kudutha phenoylayum kudippaan tamizhan nu solluvaanga. This election has proved that is true.

TV la senti serial pottu mayakki sontha agenda va SUN TV tamil nattula romba effective aa implement pannirukkaanga. Cinema mayakkam poi serial mayakkathula irukrom. nammala pagada kaaya aakittannu theriyaamalei innum nerayya per alairaanga.

Innaikku irukra press oda nilamaikku, intha maathri blogs oru nalla aaruthal.

Kupps, kalakkunga

Login illai..athaan anonymous
Prem:)

Kuppusamy Chellamuthu said...

தங்கள் கருத்துக்கு நன்றி பிரேம்.

சொந்தமாக ஒரு தொலைக்காட்சி, ஒரு செய்தித்தாள் இல்லாமல் கட்சி நடத்த முடியாத அளவிற்கு அரசியல் வளர்ந்துள்ளது. :-)