Thursday, May 11, 2006

மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!!

குப்புசாமி செல்லமுத்து

பங்கு வர்த்தகம் செய்யும் போது அதன் உண்மையான மதிப்பு (value) என்ன என்பதே தெரியாமல் இருப்பது முட்டாள் தனம். இருந்தாலும் நிறையப் பேர் மதிப்பீடு என்னும் கோட்பாட்டையே மறந்து '10 மணிக்கு வாங்கி, 12 மணிக்கு விற்பதை' வழக்கமாகக் கொண்டுள்ளனர். 'ஆன் லைன்' டிரேடிங் என்ற கொடிய கொசுவின் வாயிலாகப் பலரையும் பாதித்திருக்கிறது இந்த நோய்.

ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு (முதலிடுவதற்கு) முன், அதிலிருந்து எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; பெட்ரோல் சுத்திகரிக்கும் ஆலையாக இருந்தாலும் சரி.

A என்றொரு கம்பெனி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் மொத்தம் 1000 பங்குகள் இருக்கின்றன. அந்தக் கம்பெனியின் ஆண்டு லாபம் (செலவு, கடனுக்கான வட்டி மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரி போக மீதம் கிடைக்கும் தொகை) ரூ10,000. ஆயிரம் பங்குளின் லாபம் பத்தாயிரம் என்றால், ஒரு பங்கு ஈட்டித் தந்த லாபம் எவ்வளவு? பத்து ரூபாய். அதைத் தான் EPS - Earnings per Share- என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

"நல்ல லாபமா இருக்கே. ஒரு பங்குக்குப் பத்து ரூபாயா!!" என யாரும் வியக்க வேண்டாம். நல்ல லாபமா இல்லையா என்பதை, அதற்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும். மேலே குறிப்பிட்ட நிறுவனம் A இன் பங்கு ஒன்று ரூ.850 க்கு வியாபாரமாகி வருகிறது என்றால் அதை நீங்கள் வாங்குவீர்களா? அதாவது ஒரு ஆண்டு கழித்து 10 ரூபாய் கிடைக்க ரூ850 தரச் சம்மதிப்பீர்களா? அப்படியே செய்தாலும் அது 1.18% வருமானத்தைத் தான் ஈட்டித்தரும்.

(10 / 850) X 100 = 1.18%

இதே நிறுவனத்தின் பங்கு ரூ.120 க்கு வியாபாரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது வாங்குவீர்களா? அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் இட்டு வைக்கும் 120 ரூபாய் முதலீடு 10 ரூபாயைச் சம்பாதிக்கும்; அதாவது 8.33%. வங்கியில் கிடைக்கும் வட்டியை விட இது அதிகமாக இருந்தால் இந்த விலையில் வாங்குவதைச் சாதகமாகவே கருதலாம்.

இந்த மாதிரியான கணக்குகளைச் சுலபமாக்க நமக்குக் கிடைத்த உபகரணம் தான் PE விகிதம். Price Earning ratio என்பதே அது. Price (விலை) க்கும் Earning (லாபம்) க்கும் உள்ள விகிதமே PE.

PE = Price / Earning அதாவது விலை/லாபம்

ஒரு ஒற்றைப் பங்கின் விலையை, அது ஈட்டித்தரும் லாபத்தால் (EPS) வகுக்கவேண்டும்.

நமது உதாரணத்தின் படி PE = 120/10 = 12

இதை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்.

  • கம்பெனி A இன் பங்கு PE விகிதம் 12 இல் வியாபாரமாகிறது.
  • கம்பெனி A இன் விலை அதன் லாபத்தின் 12 மடங்காக உள்ளது.

இப்படியெல்லாம் எங்காவது கேட்கவோ, படிக்கவோ நேர்ந்தால் இனி மேல் குழப்பமடையத் தேவையில்லை.

சரி.. PE விகிதத்தை எங்கனம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது? இதுகாறும் நாம் கொண்ட அலசலின் படி, குறைவான PE விகிதம் என்றால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும், அதிகமான PE விகிதம் என்றால் நமக்குக் குறைந்த லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும் இருப்பதை அறிகிறோம். பங்கு முதலீட்டாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் இது தலையாயது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் PE விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே எவரும் வாங்குவது இல்லை. நிர்வாகத் திறமை, தொலிழின் வளர்ச்சி வாய்ப்பு, அதன் வசமிருக்கும் அசையும் & அசையாத சொத்துக்களின் மதிப்பு, ஈவுத்தொகை வரலாறு (dividend history) போன்ற பற்பல காரணிகள் கருத்தில் கொள்ளாப்பட்டே முதலீட்டு முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
என்ன தான் மற்ற அளவுகோள்கள் மூலம் முடிவு எடுப்பது நடைமுறையில் இருந்தாலும், PE விகிதத்தின் அடிப்படையிலான பங்கு மதிப்பீடு பற்றித் தெரியாமல் முதலீடு செய்வதென்பது, மாலைக் கண் வியாதி படைத்த கவுண்டமணி 'சின்னத்தம்பி' படத்தில் இரவில் T.V.S. 50 ஓட்டிச் செல்வதற்குச் சமம்.

வளம் வெறுவோம்.

3 comments:

Anonymous said...

Very Nice Topic. Keep on post new ideas. Please update your Profile in this block.........

-Suresh

பெத்த ராயுடு said...

மிகவும் பயனுள்ள கருத்துகளை வழங்குகிறீர்கள். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.

ஆமா, சந்தை ஒரு பெரும் திருத்தத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Kuppusamy Chellamuthu said...

நன்றி நாட்டாமை (பெத்தராயுடுன்னா நாட்டாமை தானே?)!!

தற்போதைக்குப் பார்த்தால் கசப்பான திருத்தம் ஒன்றை சந்தை வெகு விரைவில் சந்திக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இங்கே யாருமே ஜோசியக்காரன் கிடையாது. நடப்பதற்கெல்லாம் காரணம் கற்பிக்க வேண்டுமானால் கூட்டம் இருக்கிறது.

அடுத்த கால் நூற்றாண்டு காலத்திற்கு இந்தியப் பொருளாதாரம் வீறு நடை போடும் என்றாலும், குறுகிய காலத்தில் நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியே இருக்கிறது.
1. இரண்டு மாநிலங்களில் இடதுசாரிகள் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருப்பது அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் சிரமத்தை உண்டாக்கும்.
2. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரிக்கும்
3. உலகெங்கும் உயர்ந்து வரும் வட்டி விகிதம் சந்தைக்கு நல்ல செய்தி அல்ல.

முதலீட்டாளர் என்ற முறையில் புதிதாக பணத்தை உள்ளே போட எனக்குத் துணிச்சல் வரவில்லை. 20% பணமாக வைத்திருப்பதது சுகமாக இருக்கிறது.