Wednesday, May 03, 2006

அளவிற்கு மீறிய ஆசை

குப்புசாமி செல்லமுத்து

தான் பணியாற்றும் அலுவலகத்தில் இருந்த காலியிடத்தைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதற்காக நண்பரொருவர் சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த செய்தி குறித்து மட்டுமின்றி, வேறு சில விஷயங்களையும் பேசினோம். பரஸ்பர நிதி (mutual fund) வாயிலாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பங்குகளில் தான் செய்திருந்த முதலீட்டின் நிகர சொத்து மதிப்பு (NAV - Net asset value) 100 % க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதைக் குறிப்பிடார் நண்பர். அது மட்டுமின்றி தற்போது ரூ.2 இலட்சமாக இருக்கும் தனது முதலீட்டை வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.50 இலட்சமாக பெருக்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இத்தகு தனிப்பட்ட இலக்கை அலசும் முன் மேலோட்டமாக ஒரு புள்ளி விபரத்தைப் பார்ப்போம். சராசரியை மிஞ்சிய 20% வளர்ச்சியை ஒருவர் எட்டுவாரேயானால், இன்று முதலீடு செய்யப்படும் ரூ.100 ஐந்து ஆண்டுகட்குப் பின் ரூ.248 ஆக உருவெடுத்திருக்கும். மிக அசாத்தியமான - சில பேருக்குச் சாத்தியமான - செயல் இது. இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 1 இல் உள்ள எண்கள் இதை விளக்கும்.


Photobucket - Video and Image Hosting
முடிவில் கிட்டும் தொகை ஆரம்ப முதலீட்டின் சுமார் 2.5 மடங்கு தான். மேற்ச்சொன்ன ரூ.2 இலட்சம் சுமார் ரூ.5 இலட்சமாக வளர்ந்திருக்கும், நிச்சயமாக ரூ.50 இலட்சமாக அல்ல.

இந்த புள்ளிவிபரங்களை சற்று ஒதுக்கித் தள்ளி விட்டு நண்பரின் இலக்கை எட்டத் தேவையான வருடாந்திர வளர்ச்சி வீதம் (CACR - Compounded Annual Growth Rate) எவ்வளவு என்பதனையும் ஆராய்வோம். அட்டவணை 2 ஐ காணுங்கள்.
Photobucket - Video and Image Hosting

இடை விடாத 90% சராசரி வருடாந்திர வளர்ச்சி நிர்ப்பந்திக்கப்படுகிறது. நம்மில் எத்தனை பேர் இது சாத்தியம் எனக் கருதுவோம்? கடந்த மூன்று வருடங்களாகப் பங்குச் சந்தை அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றி யாருக்கும் ஐயமில்லை. எந்த அளவுகோளின் அடிப்படையின் படியும் இது 'அபாரம்' அன்றி வேறேதும் இல்லை. ஆனால், இத்தகு performance வருடந்தோறும் திரும்ப நிகழ்த்தப்படுமென நாம் எதிர்பார்க்கலாமா?

கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஒரு ஒப்புமை செய்து பார்ப்போம். ஓரளவு அறிமுகமாகியிருந்த கால்பந்தாட்டக்கார் ஒருவர் வீட்டுக்கு வருகை புரிந்திருந்தார். பள்ளி நாட்களில் இருந்தே (இன்று வரை) அதிகம் கிரிக்கெட் பார்த்திராத (யார் அவர்? இந்தியர் தானா? கொஞ்சம் கூட தேசப்பற்று இல்லாதவரா? என்றெல்லாம் கேட்க வேண்டாம்), அதில் அதிக கவனம் செலுத்தாத நபர் இவர். வந்ததே வந்தார் கிரிக்கெட் மேட்ச் இல்லாத நாளில் வரக்கூடாதா? நாலைந்து பேர் கூடி ஆர்ப்பரித்துக் கொண்டே சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த போது தான் அவர் என்ட்ரி தந்தார். எங்களால் ரசிக்கப்பட்டது ஒரு நாள் போட்டியின் முதல் 15 ஓவர் ஆட்டம் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சேவாக் 4 பந்துகளில் தொடர்ந்து 4 பவுன்டரிகளை விளாச, எங்கள் ஆர்ப்பரிப்பும் அதிகரித்தது. கால்பந்தாட்டக்காரும் ஆட்டத்தின் வேகத்தையும் அது தரும் குதூகலத்தையும் வெகுவாக ரசித்தார்.

"அடச்சே.. இப்ப போயா பவர் கட் ஆகனும்..", என்றெங்களைத் திடீரெனப் புலம்ப வைத்தது மின் வாரியம்.

"மேட்ச் தான் இல்ல. மச்சான், 50 ஒவர்ல இந்தியா ஸ்கோர் என்ன வரும் பெட் கட்டுவமா?" என்றது ஒரு குரல். அவ்வாறே எல்லொரும் அஞ்சோ, பத்தோ பெட் கட்டினோம். 240 முதல் 320 வரை ஸ்கோர் வருமென தனி நபர்களின் கணிப்பு இருந்தது. ஆன புட் பால் பிளேயர் என்ன பெட் கட்டினார் தெரியுமா?

மீதமிருக்கும் 40 ஒவருக்கும் கடந்த 4 பந்துகளில் சேவாக் ஆடியது போன்ற - கடந்த 3 ஆண்டுகளில் பங்குச் சந்தை தந்தது போன்ற வருவாய் - ஆட்டத்தை எதிர் பார்த்து இந்திய அணியின் ஸ்கோர் 50 ஒவரில் 960 கூடுதலாக வரும் என்றார் (40 ஓவர் * 6 பந்துகள் * 4 ரன்கள்). இவரது எதிர்பார்ப்பை 'முட்டாள் தனம்' என்பதை விட நளினமான வார்த்தையால் வர்ணிக்க முடியாது. ஆட்ட முடிவில் அணியின் இலக்கைக் கணிக்க குறைந்த பட்சம் கீழ்க்கண்ட காரணிகளையாவது கருத்தில் கொள்வது அவசியம்.
* வீழ்ந்த விக்கெட்கள் மற்றும் ஆட்டமிழந்த ஆட்டக்காரர்கள்
* எதிரணியிலிருக்கும் பந்து வீச்சாளர்கள்
* ஆடுகளத்தின் தன்மை
* ஆட்டத்தின் முக்கியத்துவம்

பங்குச் சந்தையின் போக்கைக் கணிப்பது கூட அது போலப் பல்வேறு காரணிகளைக் கணக்கிட்டுச் செய்ய வேண்டிய பணி. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் SENSEX 1990 இல் 1000 புள்ளிகளைத் தொட்டு முதல் முறையாக மூன்றிலக்கத்தை ருசி பார்த்தது. இப்போது 12,000 புள்ளியில் உள்ளது. பதினாறு ஆண்டுகால (1990 - 2006) வளர்ச்சி வருடாந்திர வளர்ச்சி வீதத்தில் 16.81% எனக் கணக்கிடலாம். அதிலும் கடந்த மூன்றாண்டுகளைத் தள்ளி விட்டால், வளர்ச்சி வீதம் மிகச்சொற்பமான ஒற்றை இலக்கத்தில் தான் இருந்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு தான் 'முதலீடு விளையாட்டு' ஆடப்பட்டு வந்திகுக்கிறது; ரன்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மோசமான பந்துகளும், பந்து வீச்சாளர்களும் அமையும் போது பழைய கசப்பான நினைவுகளை அகற்றிவிட்டு அடித்து ஆடி எண்ணிக்கையை கூட்டிக்கொள்வதே புத்திசாலித்தனம். ஒன்று மட்டும் நினைவு வையுங்கள். சுலபமாக எண்ணிக்கையை கூட்டுவது என்பது சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலும் சரி, பங்குச் சந்தையிலும் சரி அரிதான காரியம், இயலாத காரியமுமில்லை!!!

முடிவுரை எழுதும் முன், உலகின் அதீத வெற்றிகரமான முதலீட்டாளர் திரு.வாரன் ப·பட் எந்த விகிதத்தில் தன் பணத்தை கூட்டி (பெருக்கி எல்லாம் இல்லை) வந்துள்ளார் எனப் பார்ப்போம். (அட்டவணை பார்க்க)
Photobucket - Video and Image Hosting
வாரனின் பணம் வருடந்தோறும் சராசரியாக 22.43% என்கிற வீதத்தில் வளர்ந்து வந்திருக்கிறது. அமெரிக்க S&P 500 (Standard and Poor 500) குறியீடு இதே கால இடைவெளியில் 11.66% என்னும் வீதத்தில் தான் கூடியுள்ளது. பூவுலகின் தலைசிறந்த பங்கு முதலீட்டாளரே இவ்வளவு தான் நீண்ட கால சாதனையாக செய்து காட்டியுள்ளார் எனும் போது, சராசரிக்கும் அதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல என்பது எனது தாழ்மையான எண்ணம். என்னுடைய அறிவிற்கும் (அறிவீனத்திற்கும்), சக்திக்கும் ஏற்ப சராசரியாக 15% இலாபம் ஈட்டுவதை இலக்காக நிர்ணயித்திருக்கிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கிறது; படிக்க வேண்டியிருக்கிறது; பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது; இன்னும் எத்தனையோ வேண்டியிருக்கிறது.....

அநேகம் பேர் பங்கு வர்த்தகம் (speculation) மற்றும் பங்கு முதலீடு (investment) முதலிய துறைகளில் புதிதாக நுழைந்துள்ளவர்கள். அருகான்மையிலிருக்கும் கடந்த காலத்தை மட்டும் பார்த்துவிட்டு தங்கள் இலக்குகள் நிர்ணயம் செய்யப்படுவதை அனுமதித்தவர்கள் இவர்கள். இந்திய அணி 960 ஒட்டங்களை குவிக்கும் என்று ஆரூடம் சொன்னவரிலிருந்து நாம் வெறுபடுகிறோமா என்று மட்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!! ஆசைப் படுவதில் தவறேதுமில்லை. ஆனால் அந்த ஆசையை, இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் உந்துதலையும், விடாமுயற்சியையும், அது சார்ந்த துறையில் அறிவையும், தொல்வி கண்டு துவழாத மனோதிடத்தையும், நுணுக்கங்களையும், சூட்சமத்தையும் பெருக்கிக்கொள்வது அவசியமாகிறது. இவை பெருகும் தருணத்தில், பணம் கூட மாத்திரமல்ல.... நிச்சயம் பெருகச் செய்யும்!!

பின் குறிப்பு:
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் நான் எழுதிய பொழுது  அதை வாசித்து விட்டு மேற்ச்சொன்ன நண்பர் மிகுந்த வருத்தப்பட்டார். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பதன் அடிப்படையில் தனது இலக்கை எட்ட இயலும் என்பதில் தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார். அவரது இலக்கு மற்றும் அதனை எட்டுவதற்கான திட்டமிட்ட உழைப்பு பற்றி விமர்சிக்கவோ, குறைகூறவோ யாம் முயலவில்லை. மாறாக share market is not a place to make easy money என்பதை எடுத்துக்காட்டும் எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை.

9 comments:

நன்மனம் said...

தற்போதய பங்கு சந்தை நிலவரம் நமது நாட்டின் வளர்ச்சியை குறிக்க வில்லை என்பது என்னுடைய கருத்து.

பதிவை முழுமையாக படித்து பின்னூட்டம் இடுகிறேன்.

செந்தில் குமரன் said...

கிரிக்கெட் குறித்த உதாரணம் நன்றாக இருந்தது எனக்கு பங்குச் சந்தை குறித்து இப்பொழுதுதான் சிறிது தெளிவு வந்துள்ளது ஆகவே உங்கள் நண்பரின் இலக்கு கிரிக்கெட் ஆட்டத்தின் உதாரணம் போன்றதா என்று கூற இயலவில்லை ஆனாலும் உன்களுடைய நண்பர் நினைத்த அளவு வெற்றி பெற வாழ்த்துக்கள்

Kuppusamy Chellamuthu said...

நன்றி நன்மனம் அவர்களே!
ஒரு நாட்டின் வளர்ச்சியையோ, வீழ்ச்சியையோ துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரே ஒரு அளவுகோள் பங்குச் சந்தை மாத்திரமேயல்ல. Economic geosystems இல் அதுவும் ஒரு முக்கியமான அங்கம் என்பது தெளிவு.

குமரனின் எண்ணத்திற்கு நன்றிகள் பல. பெஞ்சமின் கிரகாம் 'பேஸ்பால்' உதாரணத்தின் மூலம் ஒரு முக்கியமான உத்தியை உலகிற்கு விளக்கினார். அது போல கிரிக்கெட் குறித்த உவமானம் ஒரு mental construct தானே ஒழிய, வேறொன்றுமில்லை. வெற்றிகரமான முதலீட்டாளராக திகழ, பொருளாதாரத் துறை ஞானம் மட்டும் போதாது. Effieient market theory பொன்ற பல ஏட்டுச் சுரைக்காய்கள் அதில் நிரம்ப உண்டு. நல்ல முதலீட்டாளருக்கு பரந்து விரிந்த உலக ஞானமும் மிக அவசியம் (குறிப்பாக உளவியல்).

மீண்டும் நன்றிகள்.

Sivabalan said...

Sir,

Really an excellent post!!

Good One!!

If you could possible to list some the best Mutual Funds and best Plans, then it will be of great help.

Because, I am thinking of investing in Mutual fund, small amount may be 2L.

Kuppusamy Chellamuthu said...

நன்றி சிவபாலன். பரஸ்பநிதி முதலீடு என்றில்லை, எந்த முதலீடானாலும் தனி நபரின் risk profile, investment period, investment plan, motive of investment போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே பரிந்துரை செய்ய இயலும். என்னைக் கேட்டால், பிறரின் அறிவுரையின் அடிப்படையில் மட்டும் முதலீடு செய்வது நல்லதல்ல. நீங்களே சுய ஆராய்ச்சி செய்து முதலீடு செய்ய்யுங்கள்.

உங்கள் கேள்விக்கு முழுமையான பதிலாக இது அமையாயததற்கு வருந்துகிறேன்.

குப்புசாமி செல்லமுத்து

Anonymous said...

Simply Superb!

Very useful and interesting article with easy to understand examples.

supersubra said...

முறையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றியும் டிமாட் பற்றியும் ஒரு விளக்கமான கட்டுரையை எதிர்பார்க்கிறேன். என்னைப்போன்ற விவரம் தெரியாதவர்களுக்கு ஒரு நேர்மையான வழிகாட்டியாக இருக்கும். நன்றி

Kuppusamy Chellamuthu said...

கருத்துக்கு நன்றி சுப்பர்சுப்பு. போகப் போக எழுதலாம்..

-குப்புசாமி செல்லமுத்து

jeya said...

Can u tel me about online trading?