Saturday, May 27, 2006

நிறுவனத்தின் உண்மையான (பங்கு) மதிப்பு

-குப்புசாமி செல்லமுத்து


பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.


அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ429.82.
"நூறு ரூவா குடு. 5 வருசத்துல அதத் திருப்பித்தரேன்" என யாராவது கேட்டா, "சாரி. 77 ரூவா முப்பத்தெட்டுக் காசுக்கு மேல குடுக்க முடியாது"ன்னு சொல்லிருங்க.


சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எங்கனம் இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.


திரு.காசப்பன் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் டிரைவர் சம்பளம், போலீஸ் மாமூல், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ57,000

இரண்டாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ50,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ45,125


மூன்றாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
கார் விற்ற காசு = ரூ1,50,000
மொத்தப் பணம் = ரூ2,10,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ1,80.048.80

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,000 + 45,125 + 1,80.048.80 = ரூ2,82,173.8


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், காசப்பனிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால், இரண்டு இலட்சத்து என்பதாயிரத்துக்கு மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 282 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."


தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்.. அட அவ்வளவு ஏங்க, மாமனார் வரதட்சினை இந்த வருசத்துக்குப் பதிலா அடுத்த வருசம் தருவதாச் சொன்னாக் கூட ஏமாந்துராதீங்க.


வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. காசப்பன் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்

4. வரதட்சனை குறித்தான வரிகள் நகைச்சுவைக்காக மட்டுமே.

Thursday, May 25, 2006

டெக்கான் ஏர்லைன்ஸ் IPO

-குப்புசாமி செல்லமுத்து

படிக்க நேர்ந்த ஒரு செய்தியைப் பகிரவே இந்தப் பதிவு.

மலிவு விலை வானூர்திச் சேவை நிறுவனமான டெக்கான் ஏர்லைன்ஸ், முதல் பொது வெளியீடு (IPO - Initial Public Offer) விடுவதைச் சிலர் அறிந்திருக்கக் கூடும். ஆரம்பத்தில் மே 18 முதல் 23 வரை அதன் கால அளவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விலை எல்லை (price band) ரூ150-175 ஆக இருந்தது.

கடந்த ஒரு வாரமாகப் பங்குச்சந்தையில் நிலவும் பீதி காரணமாக சொற்ப எண்ணிக்கையிலேயே டெக்கான் நிறுவனத்திற்கு விண்ணப்பங்கள் வந்தன. எப்படியாவது விற்பனையை முடித்துவிட்டால் போதுமென்கிற போக்கில் வெளியீட்டின் இறுதித் தேதியை மே 26 வரை நீடித்திருக்கிறார்கள். அதே போல விலைப் பட்டையும் ரூ146-175 ஆகத் தளர்த்தப் பட்டுள்ளது. ஆன போதும் இவ்வெளியீடு முழுமையாக விற்றுத் தீருமா எனத் தெரியவில்லை. விண்ணப்பங்கள் சீண்டிவாரின்றிக் கிடப்பதைச் செய்தியில் காணுங்கள்.

சில துணைச் செய்திகள்:
 1. என்ன தான் மலிவு விலையில் விமானச் சேவை செய்தாலும், நிறுவனம் மிகுந்த கடனில் இருக்கிறது.
 2. விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடும் போட்டியை உருவாக்குகிறது.
 3. தற்போது இந்தியப் பங்குச் சந்தையில் விற்பனையாகும் ஒரே நிறுவனமான ஜெட் ஏர்லைன்ஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 1,100 ரூபாய் IPO வில் வெளிவந்தது. நேற்றைய (மே-24) நிலவரப்படி அதன் விலை ரூ.750.
 4. தொலைபேசி நிறுவனங்கள் போலவே விமானச் சேவை நிறுவனங்களும் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டி இருப்பதால், இலாபத்தின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கே தர வேண்டியிருக்கிறது. பிசினஸ் வளர்ந்தாலும், பங்குதாரருக்குக் கிட்டும் இலாபம் கிடுகிடுவென உயரும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
பி.கு: இது எனது தனிப்பட்ட பார்வை தானே ஒழிய, பிறரது கருத்தை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. சுய ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது அவா.

Monday, May 22, 2006

SENSEX 10,000 மேலும் கீழும்-வாங்கலாமா?

குப்புசாமி செல்லமுத்து

21 மே 2006 அன்று Business Line பொருளாதாரத் தினசரியில் வந்த ஒரு கேலிச்சித்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடைந்ததில் கட்டு போடப்பட்ட கை கழுத்தில் தொட்டிலாடிய படி வரும் முதலீட்டு அறிவுரையாளர் (investment advisor) ஒருவர் தன் உதவியாளரைப் பார்த்துச் சொல்வதாக அமைந்திருந்தது அது.

"ஆமாய்யா.. சென்செக்ஸ் முதன் முதலா 10,000 போனப்ப ஸ்வீட் குடுத்தானே அதே ஆளு தான். இப்போ இப்படிப் பண்ணிட்டான்"

அருமையான மெசேஜ் சொல்கிறது இந்தக் கார்ட்டூன். சந்தை 9,000 புள்ளியில் இருந்து 10,000 புள்ளியைத் தொட்ட போது குதூகலித்தவர்கள் இப்போது அதே 10,000 இல் புலம்புவது ஏன்? அப்போதைக்கும் இப்போதைக்கும் மூன்று மாத இடைவெளி தான். இதில் பெரிதாக வருத்தப்பட ஒன்றுமே இல்லை.

"கம்மியா வாங்கினவங்களுக்கு வேணா இந்தத் தத்துவம் எல்லாம் சொல்லிக்க. எங்களை மாதிரி 12,000 க்கு மேல sensex இருக்கும் போது வாங்கினவங்க வலி உனக்கெல்லாம் எங்கே தெரியப்போகுது" என அங்கலாய்க்கலாம் சிலர். அடிப்படையை அலசிப் பார்த்தால் ஒரு பெரிய பிரச்சினையாக இதைச் சொல்லவே முடியாது.

பத்து இலட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறீர்கள். அதன் மதிப்பை நிர்ணயம் செய்யும் போது, குடிநீர் வசதி, சாலை வசதி, நகருக்கு அருகாமை, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களையும் ஆராய்வீர்கள். உங்களது வரையறையின் படி அதன் மதிப்பு கொடுக்கும் காசுக்குத் தகுந்தது தான் என் உறுதிப்படுத்துய பின்னர் தான் முதலீடு நிகழும். அதே போன்றதொரு பக்கத்து வீட்டின் உரிமையாளர் அதை 9 இலட்சத்திற்கு வேறு யாருக்கோ விற்கிறார். அதனால் உங்களுக்கு என்ன வந்தது? இன்னுமொரு வீடு அதே 9 இலட்சம் விலைக்கு உங்களுக்குத் தேவைப்பட்டால் கொடுக்கவும் தயாராக உள்ளார் அந்த நபர். இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி தானே? 10 இலட்சம் மதிப்புள்ள வீடு 9 இலட்சத்திற்குக் கிடைக்கிறதே!!

வேறு எவரோ தன் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்பது இதே போலத் தான். ரூ.100 உள்ளடக்க மதிப்புள்ள நிறுவனத்தின் பங்கை நீங்கள் வாங்கிய முடிவின் தெளிவு, பிறர் அதனை வேறேதோ விலைக்குப் பரிமாறும் போது மாறாதல்லவா? பிறகென்ன? உண்மையைச் சொல்லப் போனால் பங்குச் சந்தைச் சரிவுகள் மேளதாளத்துடன் வரவேற்கப்பட வேண்டும். 100 மதிப்புள்ள சொத்து (பங்குகள் நிறுவனத்தின் ஒரு சிறிய பகுதியின் உரிமையை நிலை நாட்டும் உரிமை அல்லது சொத்துப் பத்திரம்) 80 க்கோ 75 க்கோ கிடைக்கும் போது சந்தோசப் படாமல் சும்மா ·பீல் பண்ணிக்கிட்டு... ஒரு வேளை தற்சமயம் வாங்குகிறவர்கள் உங்களை விட குறைந்த பணத்தில் அதே அளவுள்ள சொத்தை வாங்க வசதி ஏற்படுகிறது. கொஞ்சம் வேதனையாகத் தான் இருக்கும். இந்த நிலவரம் எல்லாம் தெரியாமலே இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காதல்லவா? அப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தானே?

"நான் எங்கய்யா வாங்கினேன்? எல்லாம் கூட வேல செய்றவன், ஷேர் மார்க்கெட் புரோக்கர் இந்த மாதிரி ஆளுங்க சொல்லி வாங்கினது தான்" எனச் சொல்கிற ஆளாக நீங்கள் இருந்தால் 'சாரி'. புரோக்கர் சொல்வதால் மட்டுமே கல்யாணம் செய்யாதவர்கள், வீடு வாங்காதவர்கள், பங்கு மட்டும் வாங்குவது ஏன்? ஆறாம் அறிவு படைத்த நாம் இவ்வாறு செய்யத் தேவையில்லையல்லவா?

பங்குச் சரிவுகளை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால்.. ஏற்கனவே ஒரு பதிவில் எழுதிய 'தள்ளுபடி விற்பனை' போலத்தான். "அதெல்லாம் சரி, ஆனால் இப்போது பார்த்து கையில் காசு இல்லை" என்று வருந்தினால் சுய நிதி நிர்வாகத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

மன உளைச்சலும், நிறையப் பணமும் சம்பந்தப்பட்ட அம்சம் என்பதால் பங்குச் சந்தைச் சரிவுகள் தூக்கமற்ற இரவுகளைத் தரவல்லவை. சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். என்னென்ன தவறு செய்தோம், அதை எப்பவித் தவிர்த்திருக்கலாம் எனக் காலப் போக்கில் பின்னோக்கிப் பார்த்து அவற்றில் இருந்து கற்றுக் கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு கற்கும் பாடத்தின் பயன்பாடு அதே தவறை மீண்டுமொரு தடவை செய்ய நேரும் போது கிடைக்கும் விழிப்புணர்வில் தான் தெரியும்.

20% வரை(யாவது) குறைகின்ற தனது முதலீட்டைத் தாங்கிக் கொள்கிற மனபலம் அற்றவர்கள் நேரடியாகவும், மியூச்சுவல் ·பண்ட் மூலம் மறைமுகவாகவும் பங்குகளில் முதலீடு செய்வது உகந்ததல்ல. அஞ்சலகச் சேமிப்புத் திட்டம், வைப்பு நிதித்திட்டம் என குறைவாக வருவாய் வந்தாலும் முதலீட்டின் மதிப்பு சரியாத ஆவணங்கள் தான் உங்களுக்கு அகந்தவை.

"sensex 13,000 இல்லாட்டி 15,000 போன உடனே வித்துட்டு காசு பாக்கலாம்னு தான் போன வாரம் வாங்கினேன்" என்று சில பேர் சொன்னார்கள். இவர்கள் முதலீட்டாளர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட தொலிழில் பங்கெடுத்து அதில் வரும் நல்லது கெட்டதைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கமில்லாமல், பிறர் இதை விட அதிகமாக வாங்கினால் போதுமென்ற மனதுடன் நடந்து கொள்பவர்கள் இவர்கள். சூதாடிகள்/வியாபரிகள்/வர்த்தகர்கள் (speculators/traders) தானே ஒழிய இவர்களில் யாருமே முதலீட்டாளர்கள் இல்லை. Short term investor எனும் சொல்லே தவறானது. Any one who has a short term vision is only a speculator and not an investor. மூன்று மாதம் முதலீடு செய்யும் ஆசையில் வருபவனின் அறியாமையப் பயன்படுத்திக் கொள்ளவே மியூச்சுவல் ·பண்ட் ஏஜென்டுகளும், பங்குத் தரகர்களும் இருக்கிறார்கள்.

"சூப்பர்.. இப்ப நல்லா கம்மி ஆகிருக்கு. ஒரு இலட்சம் கடன் பெற்று ஷேர் வாங்கிட்டு அடுத்த வாரம் ஏறும் போது வித்துடலாம்னு இருக்கேன்" சில பேர் இது போல இருக்கிறார்கள். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்தால் ராசிக்காரர் தான் நீங்கள். இருப்பினும் இதுவும் மோசமான அணுகுமுறை. முதலீட்டாளர் முகமூடியிட்டுச் சூதாடுகிறீர்கள்.

அப்ப என்ன தான் பண்ணலாம்னு ஐடியா? ஆர அமர யோசித்த பின்னர், முதலீடு செய்ய ஒதுக்க முடிந்த பகுதியை (மட்டும்) வீழ்ந்திருக்கும் தரமான நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கலாம். சரவணா ஸ்டோர்ல தள்ளுபடி சேல்ஸ் போட்டால் மட்டும் முந்தியடிக்கும் நாம் Dalal street இல் கிடைக்கும் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து பொருட்களையும் குறைந்த விலைக்கு வாங்கும் நாம் பங்குகள் குறையும் போது அச்சப் படுகிறோம்; அதிகமாகும் போது வாங்க ஆசைப்படுகிறொம். இத்தனை வல்லுனர்கள் நிறைந்த பங்குக் கட்டமைப்பில் குறியீடு சரிகிறதென்றால் அதற்குக் காரணம் இருக்கும்; நாம் ஒதுங்கியிருப்பதே நலம் என்பன போன்ற எண்ணங்களைத் தூக்கிக் கூடையில் போட்டு விடலாம்.

I wish you a very happy shopping in NSE & BSE. தள்ளுபடி என்பதால் மட்டும் கிடப்பதை எல்லாம் வாங்கிவிடாதீர்கள். தேவையான, காசுக்குத் தகுந்த மதிப்புள்ள பங்குகளை மட்டும் வாங்குங்கள். 'திருவாளர்.சந்தை' மிகுந்த மனக் கவலையில் இருக்கிறார். அது தானே நாம் கேட்பது?

வளம் பெறுவோம்!!

பி.கு: பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சரியும் போது சோகமடையத் தேவையில்லை என்பதை விவரிப்பதே இதன் நோக்கம். மற்றபடி இதற்குக் கீழ் குறையாது அல்லது மேலே நிச்சயமாக ஏறும் என்பன போன்ற பரிந்துரைகள் இங்கே செய்யப்படவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை தத்தம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வோமாக!!

Sunday, May 21, 2006

ராகுல் திராவிட் - பங்கு முதலீட்டுத் தத்துவம்


குப்புசாமி செல்லமுத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் திராவிட் ஒரு கனவு நாயகன். எண்ணற்ற இளம் பெண்களுக்கு மாத்திரம் அல்ல, வளர்ந்து வரும் வீரர்கள், ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருக்குமே ராகுல் ஒரு ரோல் மாடல். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் நண்பரது நண்பர் ஒருவர், தான் இந்தியன் சிமெண்ட் நிறுவனத்திற்காக கிரிக்கெட் ஆடிய போது திராவிட் உடனான தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

"இன்னமும் அப்படியே தான் இருக்கான். மத்த பிளேயர்ஸ் பத்தி தப்பாப் பேச மாட்டான். அவன் உண்டு அவன் கேம் உண்டுன்னு இருப்பான். கிரிக்கெட் பத்தி தான் அவன் நெனப்பெல்லாம். வெரி டெடிகேட்டேட் ஃபெல்லோ. அந்த குவாலிட்டி தான் இப்ப இவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டுருக்கு"

பங்கு முதலீட்டாளர் என்ற வகையில் நாம் இந்த நாயகனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக் போல பரவசம், படுவேகம், அசுரத்தனமான அட்டாக் என எதையும் திராவிட்டிடம் காண இயலாது. இருப்பினும் மிக மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன் ராகுல். டெஸ்ட் போட்டிகளில் எதிரணிப் பந்து வீச்சாளர்களை அயரச் செய்து, களைப்படைந்த பின் வரும் நல்ல பந்துக்காகக் காத்திருக்க அவன் வெட்கப்படுவதே இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்களுக்கு மட்டுமே ஆடப்படுவது. ஆனால் பங்கு முதலீடு ஆயுட்காலத்திற்கும் ஆடுகிற ஆட்டம். நாள் தோறும் காணும் பங்கு விலை 'ஆஃப் ஸ்டம்ப்' க்கு வெளியே வீசப்படும் பந்து போல. அடித்துத்தான் ஆகவேண்டும் எனப் பந்து நம்மைக் கட்டாயப் படுத்துவது இல்லை.

பெளலர்கள் களைப்படைந்து மோசமான பந்தோ அல்லது 'ஃபுல் டாஸோ' வீசும் போது சக்தி அனைத்தையும் ஒருசேரத் திரட்டி நடு மட்டையில் விளாசி அடித்து பவுண்டரியோ, சிக்ஸரோ சேர்த்துக் கொள்வது திராவிட் இன் வழக்கம். அந்த வகையில் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். அவர் ஒரு பந்தில் அதிக பட்சமாக 6 ரன் தான் அடிக்க முடியும். நாமோ நமது சக்தி, பணபலம், மனபலம் இவற்றிற்கு ஏற்றவாறு எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் திரட்டி அடிக்கலாம். அதன் பின் மீண்டுமொரு 'ஃபுல் டாஸ்' பந்துக்காகக் காத்திருக்கலாம்.

ஒரு பந்தையோ அல்லது தொடர்ச்சியாக ஒரு ஓவரையோ ஆடாமல் விட்டாலும் பங்குச் சந்தையில் நீங்கள் விக்கெட் இழப்பதில்லை. தவறாக ஆடி கேட்ச் கொடுத்தால் ஒழிய யாரும் உங்களை அவுட் ஆக்க முடியாது.

லட்டு மாதிரி ஒரு பந்தைத் தவற விட்டாலும் பரவாயில்லை. காத்திருக்கலாம். ஆனால் அதைத் தவற விட்ட ஆத்திரத்தில் அடுத்த பந்திலேயே (யார்க்கர்) சிக்ஸ்ர் அடிக்க நினைக்காதீர்கள்.

ராகுல் பேட்டிங் போல முதலீடு செய்வது மிகச் சுலபம். ரசிகர்கள் சேவாக் இடம் எதிர்பார்ப்பது போல உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை. பெரும்பாலும் எல்லா பரஸ்பர நிதி (mutual fund) நிறுவன நிர்வாகிகளுக்கு இந்தச் சுதந்திரம் இருப்பதாகத் தோன்றவில்லை. பந்துக்குப் பந்து, ஓவருக்கு ஓவர் இவர்கள் சக ஆட்டக்காரருடன் ஒப்பிடப் படுகிறார்கள். ரசிகர் கூட்டமும், அவர்கள் மேல் பந்தயம் கட்டியவர்களும் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் எதிர்பார்க்கிறார்கள்.

ஆக ராகுலாக இருப்பதில் அதிகச் சிரமம் இல்லை. அதே சமயத்தில் சுலபமும் இல்லை. உணர்ச்சியைக் கட்டுப் படுத்திக் கொண்டு நல்ல முதலீட்டு வாய்ப்பு வரும் வரை காத்திருப்பது பல பேருக்கு இயலாத காரியம். மறு முனையில் இன்னொரு பேட்ஸ்மேன் அடித்து ஆடினால் தானும் அடித்துத் தான் ஆகவேண்டும் என நினைக்கக் கூடாது. நம் எதிரி வேறு யாரும் இல்லை; நமக்குள் தான் இருக்கிறான்.

லாவகமாக வரும் பந்துகளில் அடிக்காமல் 'கட்டை' வைப்பது தவறு. ராகுல் இந்தத் தவறை அடிக்கடி செய்வதாகத் தெரியவில்லை. ஒரு ரன், இரண்டு ரன் கூட எடுக்க நினைக்கதீர்கள்.. go for the maximum.

சில சமயங்களில் 'நோ-பால்' பந்து ·புல்-டாஸ் ஆக அமைவது உண்டு. அதையெல்லாம் தவறவிட்டால் என்ன சொல்வது?

நீங்கள் ஆட்டமிழக்கும் பந்து (பங்கு) எது என்பது ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நிச்சயமாக அடித்து ஆடக்கூடிய பந்து எது என அடையாளம் காணச் சிரமம் இருக்காது. அதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

எவ்வளவு மோசமாக ஆடுகளமாக இருந்தாலும், ஐந்து நாள் போட்டியில் சுலபமாக ஆடக்கூடிய பந்துகள் ஐந்தையாவது எதிர் நோக்கலாம். அதே பாணியில், அவ்வளவு மோசமான பொருளாதாரச் சூழலிலும் ஒரு ஆண்டில் குறைந்த பட்சம் ஐந்து 'லட்டு' மாதிரி முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவது நிச்சயம்.

"அது வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது. ஐ வில் பிளே எவரி டெலிவரி" என தினம் தினம் வாங்கி விற்று உழன்று கொண்டிருந்தால், loose delivery கிடைக்கும் தருணத்தில் அடிப்பதற்குத் திராணி இல்லாமல் போய் விடும்.

சில சமங்களில் reverse sweep மாதிரியான அசாதாரண அடிகளை அடித்தாலும் பரவாயில்லை. ஆனால் அது நிச்சயமான ரன் பெற்றுத்தரும் எனத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோலத் தான் futures & options எனப்படும் 'தருவி'கள் (derivatives).

"டெய்லி டெரிவேட்டிவ் டிரேடிங் பண்ணாதீங்க அய்யா!! ஏன்னா நான் எவெரி பால் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடறது இல்லை" என்கிறார் திராவிட். கேட்கிறதா???

வளம் பெறுவோம்.

Thursday, May 18, 2006

திருடர்கள் ஜாக்கிரதை

குப்புசாமி செல்லமுத்து

"நாய்கள் ஜாக்கிரதை" மாதிரி திருடர்கள் ஜாக்கிரதை எனத் தலைப்பிட்டது பிழையில்லை. ஆனால் இங்கே சுட்டிக் காட்டப் படும் சமூகம் இந்தத் தலைப்பை நியாயப்படுத்துவது போல நடப்பது தான் பிழை.

தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தகப்பன் ஒவ்வொறு முறையும் ஜோசியக்காரனால் கொடுமைக்கு உள்ளாகிறான். எங்கே ஜாதகம் பொருந்தி அவர்களுக்குப் பிடித்துப் போய் திருமணம் நடந்தால், அடுத்த முறை நம்மிடம் வர மாட்டாரோ என்பதே அவனது நோக்கம். அதனால் தான் பெரும்பாலான ஜாதகங்கள் பொருந்தாமல் போவதும், தோஷங்கள் அதிகரிப்பதும். இங்கே வாடிக்கையாளனாகிய தகப்பனின் நலனும், விறபனையாளனான ஜோசியக்காரனின் நலனும் வேறுபடுகின்றன.

முடி நிறைய வெட்டி விட்டால் நெடு நாள் கடைக்கு வரமாட்டீர்கள் என்பதால் லேசாக வெட்டி விடுவது சவரக் கடைகாரரின் இயல்பு. சில பேர் மொட்டை மட்டுமே போடுவது இவர்களுக்கு இடைஞ்சல் தான். இங்கும் கூட வாடிக்கையாளனின் நலனும், சேவகனின் நலனும் எதிர்மறையானவை.

மதுபானக் கடைகள் தனியார் மயமாக இருந்த போது கிடைத்த வாடிக்கையாளர் சேவை அரசு மயமானவுடன் கிடைப்பதில்லை. நீ குடித்தாலும் குடிக்காவிட்டாலும் அரசாங்கம் அவனுக்கு ஊதியம் கொடுக்கிறது. அதே ஆள் இதே கடை தனியார் இடம் இருந்தால் இப்படித்தானா இருப்பான்? வியாபாரமானால் தான் முதலாளி சம்பளம் தருவார். ஊழியர் நலன், முதலாளி நலன், வாடிக்கையாளர் நலன் என மூன்றும் இங்கே ஒரே கோட்டில் அமைய வேண்டும்.

Incentive based bias என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்வார்கள். எல்லா நேரத்திலும், எல்லாரையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இயங்கச் செய்வது இது. தலையணை மந்திரம் கூட இப்படித் தான். ஓட்டுக் கேட்கும் அரசியல்வாதி, இடு ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடும் மாணவன் என அனைவருக்கும் incentive based bias தான் உந்து சக்தி.

'ஜாக்கிரதை' என்று நாம் எச்சரித்த அந்தச் சமூகம் எது என இப்போது சொல்ல வேண்டும். பரஸ்பர நிதி விற்பனைப் பிரதிநிதிகள்(mutual fund sales rep) இவர்கள்.
நீங்கள் செய்யும் முதலீட்டில் வசூலிப்படும் நுழைவுக் கட்டணமான (entry load) 2.5% த்தின் பெரும் பகுதி இந்த விற்பனையாளர்களுக்குத் தான் போகிறது. 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் இவருக்குக் கொடுத்தது போக ரூ.97.50 தான் நிகர முதலீடு. அது போக நிதி நிர்வாக நிறுவனம் தனியாக வருடந்தோறும் 2.5% எடுத்துக் கொள்ளும். அதாவது 5% வீணாகவே போகிறது. முதலீடு 10% வளர்ந்தால் அது அடைந்திருக்கும் நியாயமான வளர்ச்சி 15%. சாதாரணமாகத் தெரியும் இந்த 5% முப்பது ஆண்டுகளும் நீடித்தால் என்ன ஆகும்?

100 ரூபாய் 15% அளவில் வளர்ந்து 30 ஆண்டு முடிவில் கிடைப்பது = ரூ.6621
100 ரூபாய் 10% அளவில் வளர்ந்து 30 ஆண்டு முடிவில் கிடைப்பது = ரூ.1744
நீங்கள் சம்பாதிப்பதை விட இவர்கள் கிட்டத்தட்ட 4 மடங்கு சம்பாதிக்கிறார்கள். அதாவது உங்களது வருவாயில் ஐந்தில் நான்கு பகுதி இவர்களுக்கே போகிறது. இதைத் தான் சிறு துளி பெரு வெள்ளம் என முன்னோர் சொன்னார்களோ என்னவோ.

ஒரே ஒரு நிதித் திட்டத்தில் மட்டும் தொடர்ந்து நீடித்தால், முதல் வருடம் தான் 5% செலவு; மற்ற வருடங்களில் நாம் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அழுவதில்லை. ஆனால் பலரையும் ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாற்ற ஒரு கூட்டமே இருக்கிறது. இவர்கள் அறிவுரையாளர்கள் (financial advisors). பரஸ்பர நிதி நிறுவனங்கள் விற்பனையாளருக்குப் பணம் கொடுக்கின்றன; விற்பனையாளர் அறிவுரையாளருக்குப் பணம் கொடுக்கிறார். பல சமயங்களில் விற்பனையாளரும் அறிவுரையாளரும் ஒரே ஆளாக அமைவதுண்டு.

என் நண்பர் ஒருவரது உறவுக்காரப் பையன் ஒருவன் பரஸ்பர நிதி விற்பனைப் பிரதிநிதியாக இருக்கிறான்.

"ஒரு லட்சம் எங்கிட்ட குடுத்துருங்க. மாசத்துக்கு 2 தடவை அப்போதைக்குப் பிரபலமா இருக்குற ஃபண்டுல பணத்தை மாத்தி மாத்தி ஸ்விட்ச் பண்ணிட்டே இருக்க வேண்டியது என் பொறுப்பு. ஒரே ஃபண்டுல அப்படியே போட்டு வச்சா ஏறாது" இது அவன் சொன்னது. இந்தத் துறை பற்றி நான் அறிவிலியாக இருப்பேன் என நினைத்து இருக்கக் கூடும்.

"நீயே அப்படி ஸ்விட்ச் பண்ணி, உன் பணத்தை மல்டிபிளை பண்ணிக்கலாமே? எதுக்கு இந்தப் பொழப்பு?" என்றும் ஒவ்வொரு முறை புதிய திட்டத்திற்குத் தாவும் போதும் அவனுக்கு எவ்வளவு கிடைக்கும் என்றும் கேட்டேன். என்ன பதில் கிடைத்திருக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

மூன்று மாதத்திற்கு நிதித் திட்டங்கள் எல்லாம் அதே நிலையில் இருப்பதாக வைத்து ஒரு உருவகம்......

வாரம் 1:
கையிலிருக்கும் பணம் ரூ.100
திட்டம் 1 இல் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம் ரூ.2.5
மீதமிருக்கும் பண முதலீடு ரூ.97.50

வாரம் 3:
திட்டம் 1 இல் முதலீடு ரூ.97.50
அதிலிருந்து வெளியேறக் கட்டணம் (exit load) = 2.5% of ரூ.97.50 = ரூ.2.44
கையிலிருக்கும் பணம் ரூ.97.50 - 2.44 = ரூ.95.06
திட்டம் 2 இல் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம் = 2.5% of ரூ95.06 = ரூ.2.38
மீதமிருக்கும் பண முதலீடு ரூ.92.68

இப்படியே போனால் 13 வது வாரத்தில் (சுமார் 3 மாதம்) உங்கள் முதலீடு ரூ.72 ஆகக் குறைந்திருக்கும். முதல் திட்டத்தில் மட்டும் விட்டு வைத்திருந்தால் ரூ.97.50 ஆகவும் நீங்களே முதலீடு செய்திருந்தால் ரூ.100 ஆகவும் இருந்திருக்கும்.

இந்தக் கணக்கை அவனிடம் நான் சொன்ன போது, அவன் அதை ரசிக்கவில்லை. எதிர் பார்த்தது தான்.

முதலீடுகள் கொள்கையைப் போல, மனைவியைப் போல இருக்க வேண்டும். கவனமாக ஒருமுறை தேர்ந்தெடுத்தாலே போதும்; அடிக்கடி மாற்றத் தேவையில்லை.

உங்களுக்குத் தெரிந்த யாராவது பரஸ்பர நிதித் திட்டத்தை விற்க முயன்றால், மறுப்பதற்குத் தயங்க வேண்டியதில்லை. "இதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும்" எனத் திருப்பிக் கேளுங்கள்.

Consumers buy products; investor choose investments. You better be an investor.

திருடர்களிடன் ஜாக்கிரதையா இருப்பது நமது பொறுப்பு!!

வளம் பெறுவோம்.

Tuesday, May 16, 2006

கோடைத் தள்ளுபடி @ Dalal Street

குப்புசாமி செல்லமுத்து

கடந்த 3-4 தினங்களில் மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் SENSEX கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் குறைந்திருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் இதை ஏதோ 'இழவு' செய்தி போல மிகைப் படுத்திக் காட்டி வருகின்றன.
 • பங்குச் சந்தை மூன்றாம் நாளாகத் தொடர்ந்து வீழ்ச்சி
 • பங்குகள் சரிவு - 400 புள்ளிகள் இறக்கம்
 • அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது கொண்டிருந்த நாட்டம் தளர்வு

இது போன்ற செய்திகளைக் கேட்டுப் பதட்டப்படத் தேவையில்லை.
இதே மீடியாக்கள் ஒரு வாரம் முன்பு வரை 'இந்தியப் பங்குகள் இன்னும் கவர்ச்சிகரமாகத்தான் உள்ளன' என்றும் 'இந்த வருட முடிவிற்குள் SENSEX 15,000 புள்ளிகளை எட்டிவிடும்' என்றும் ஜோதிடம் சொல்லின. அதே மீடியாக்கள் இப்போது பங்குகள் குறையும் போது ஒப்பாரியும், ஓலமும் இட்டு வருகின்றன.

காலிலே கத்தியைக் கட்டி நடக்கும் சேவற்சண்டையைப் பார்த்த படி ஆர்ப்பரிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சண்டையிடுவதும், காயப்படுவதும் சேவல்கள் தான்; இவர்கள் அல்ல.

பங்கு முதலீட்டின் குரு என (இவர்கள் கூற்றுப் படி) கருதப்படும் மார்க் ஃபேபர் (Mark Faber) இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பங்குகள் 30% வரை குறையச் சாத்தியம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதே குரு சில வாரங்களுக்கு முன், "என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து அமெரிக்கா மற்றும் இந்தியப் பங்குகள் இதில் எதை வாங்குவாய் என்று யாராவது கேட்டால், இந்தியப் பங்குகள் எனக் கூற எனக்கு எந்த விதத் தயக்கமும் இருக்காது" என்று சொன்னார். இப்போது என்ன மாறி விட்டது?

இவர்கள் எழுப்புவது இரைச்சல். பங்குகள் ஏறும் போதும் இறங்கும் போதும் அதற்காகக் காரணம் கற்பித்து நியாயப் படுத்துவது தான் தலையாய பணி இம்மாந்தர்கட்கு.

சரி... பங்குகள் திருத்தமும், சரிவும் (correction & crash) அடையும் போது என்ன செய்ய வேண்டும்? அது தனிப்பட்ட நபர்களைப் பொறுத்தது. ஆனாலும், புத்திசாலி முதலீட்டாளர் எனும் கற்பனைத் தொலைக்காட்சியில் வரும் செய்தியைப் பாருங்கள்.

"பங்குச் சந்தையின் முன் ஒரு பெரிய பேனர் தொங்க விடப் பட்டுள்ளது. அதில் இன்று பங்குகள் 450 புள்ளி தள்ளுபடியில் விற்பனை ஆவதாக எழுதப் பட்டுள்ளது. தி.நகர் ரங்கநாதன் street போல dalal street முழுதும் அலை மோதும் மக்கள் கூட்டம். அனைவர் முகத்திலும் திருவிழாக் களை. தள்ளுபடியில் பங்குகள் விற்கப்படும் செய்தி நாடு முழுதும் பரவிக் குடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அடுத்த வாரத்திலும் இதே தள்ளுபடி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியப் பங்குகள் இன்னும் 30% குறையும் என மார்க் ஃபேபர் சொன்னது கேட்டு ஏக குஷியில் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். கையில் 'மைக்'குடனும், முகத்தில் உற்சாகத்துடனும் செய்திகளைச் சேகரித்துத் தருகிறார் செய்தியாளர்."

கற்பனை செய்து பார்க்க நன்றாக இருக்கிறதா?

மற்றோர் விற்கும் போது வாங்குவதும், வாங்கும் போது விற்பதும் தான் சாமர்த்தியமான முதலீட்டாளருக்கு அழகு. மந்தைக் கூட்டத்திலிருந்து வேறுபடுவது தான் இந்தத் துறையில் வெற்றி பெற்ற அனைவரிடமும் நாம் காணும் பண்பு.

ஆனால், இதைச் சொல்வது எவ்வளவு எளிதோ, அதே அளவு அரிது அதைக் கடைபிடிப்பது. மிகுந்த மனோதிடம், பொறுமை, விவேகம், தேவையான சமயத்தில் அசாத்திய வேகம் என நிறையப் பக்குவங்கள் தேவை.

கொஞ்சம் சைக்காலஜி, கொஞ்சம் எக்கனாமிக்ஸ், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் பொது அறிவு ....... ஒன்றாகச் சேர்த்தால் பங்குச் சந்தையில் நீங்களும் ஒரு 'லார்ட்' தான்.!!

வளம் பெறுவோம்.

Sunday, May 14, 2006

கலைஞரும் தளபதியும் - அடுத்த கட்டம்

குப்புசாமி செல்லமுத்து

தன் மகன் ஸ்டாலினுடன் முதல் வரிசையில் மேடை மீது அமர்ந்திருந்தார் கருணாநிதி. பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இருந்த சிதம்பரம் தன் மகன் கார்த்திக்கை இரண்டாவது வரிசையில் உட்காரச் செய்ததே பெரிய விஷயம் எனப்பட்டது. ஜெயலலிதாவை பெண் பெரியார் என்று வெட்கமின்றி வர்ணித்த வீரமணி கூட வந்திருந்தார். அவருக்கு இரண்டு இருக்கை தள்ளி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உட்கார்ந்திருந்தார்.

சனிக்கிழமை (13-மே-2006) அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த தி.மு.க அரசின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி தான் இது. நேரில் கண்டு வந்த ஒருவரது பிரதிபலிப்பு!! What justice does this write-up do for this blog on stock market? well.... probably no justice. ஆனாலும் கை அரித்ததன் விளைவால் எழுதப்பட்டது.

"ஏய்.. அங்கே பாரு கவிஞர் வைரமுத்து" கார்த்திக் சிதம்பரத்திற்கு இரண்டு வரிசை பின்னால் இருந்த கவிஞரைச் தன் சகாக்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு கழகக் கண்மணி.

"நம்ம எம்.எல்.ஏ வந்துட்டார் பாரு. சும்மா எள வயசு; அநேகமா மந்திரி சபையிலேயே அவருக்குத் தான் சின்ன வயசுன்னு நினைக்கிறேன்." இப்படிக் குதூகலப் பட்டவர் என்னை உள்ளே அழைத்துப் போனவர். மனைவி, மகன், மகள், பெற்றோர் என குடும்பமாய் வந்திருந்தார் அந்த எம்.எல்.ஏ. நம்மைப் போலவே நடுத்தர வர்க்கத்து மனிதன் என்பதைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம். மாபெரும் சபைதனில் தன் மகன் மண்ணாளும் மந்திரியாகப் போவதை காணவந்த அவரது தாய் தந்தையர் முகத்தில் பரவசம். எனக்கே சில நிமிடங்கள் அந்தப் பரவசம் பற்றிக் கொண்டது உண்மை. தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஆள் என்பதைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறேன்.

"உலகத் தமிழர் வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க" உணர்ச்சி பொங்க அடித்தொண்டையில் இருந்து கூவிக்கொண்டிருந்தார் ஒரு காக்கிச் சட்டை மனிதர். காசுக்கோ, பிரியாணிக்கோ, பாட்டிலுக்கோ கத்துபவராகத் தெரியவில்லை; உணர்வோடு கலந்திருந்தது அந்தக் கூவல். ஆட்டோ ஓட்டுனராக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். (எல்லாக் கட்சியிலும் இது போன்ற தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்) சமீப காலமாக இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர் வருகை அதுகரித்திருப்பதாகச் செய்தியைப் பார்க்கிறோம். தமிழினத் தலைவர் ஆட்சிக்கு வந்து விட்டார்; ஆனால் உலகத்தமிழர் நிலை? இலங்கையில் மட்டும் இருந்த தமிழர்களை உலகெங்கும் சிதறி ஓடச் செய்து உலகத்தமிழராக ஆக்கிய சிங்கள அரசுக்கு, தமிழத்தலைவர் விடுக்கும் செய்தி என்ன? காஷ்மீர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை என தீர்வு காணப்படாமல் பிரச்ச்சினைகள் இருக்கும் வரை தான் அரசியலும், அரசியல்வாதிகளும்!!

"இத்தன நாளு ஒரு தி.மு.க பங்சன்ல ஒன்னுல கூட பத்து போலீஸ்காரனுக்கு மேல இருக்க மாட்டானுக. இன்னிக்குப் பார் எத்தனை பேருனு" எனக்குப் பின் சீட்டிலிருந்து யாரோ அப்செர்வ் செய்தார்கள். பத்து என்கிற அவரது எண்ணிக்கை மிகைப்(குறை)படுத்தப் பட்டதாக இருக்க வேண்டும். பதவியேற்பு விழா என்பது கட்சி விழா அல்ல, அரசு விழா என்பதை நான் எப்படி அவருக்குச் சொல்வேன்? வாழ்க பகுத்தறிவு.

"இந்தக் கூட்டத்துல வந்து உக்கார வைகோவுக்கு குடுத்து வக்கல" என்றொரு கமெண்ட். கூட்டத்துல உட்கார வச்சதால தான் வைகோ போனார் என்பது உண்மையல்லவா?

முதல்வராகப் பதிவியேற்றதும் தனது இருக்கைக்கு மீண்டும் செல்ல தயாநிதியின் தயவு கலைஞருக்குத் தேவைப்பட்டது. இந்த வயதிலும் பெரியவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எப்படிப் பிரச்சாரம் செய்தார் என்பது வியப்பில் தான் ஆழ்த்தியது. அவரது பேச்சு, எழுத்து, சிந்தனை இவற்றில் காணப்பட்ட தெளிவு குறைந்த பாடில்லை. அதெல்லாம் சரி.. நடக்கவே முடியாத ஒருவர் எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார்? ஜோதிபாசு போல, காமராசர் போல விலகிக் கொண்டிருக்கலாமே? (அமெரிக்காவைப் போல்) இரு முறைக்கு மேல் எவரும் முதல்வராகக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் என்ன? கலைஞருக்குச் சாதகமாச் சிந்தித்தால், எம்.ஜி.ஆர். கூடத் தான் முதல்வராயிருந்த கடைசிக் காலத்தை மருந்துவமனையில் மட்டுமே கழித்தார். வாஜ்பாய் கூட நடக்க முடியாமல் தான் இருந்தார்; ஆனாலும் பிரதமர் தானே?

ஆறு மாதகாலம் ஒப்பேற்றிய பின்னர் முதுமையைக் காரணங்காட்டி கலைஞர் விலகிக் கொள்ளக்கூடும். தான் வாழும் காலத்திலேயே ஸ்டாலினை முதல்வராக்கிட வேண்டுமென்பது அவரது அவாவாக இருக்கும். நேரு, இந்திரா என யாருமே இதைச் செய்து பார்க்கவில்லை. தேவகெளடாவைத் தவிர?

சில பத்தாண்டுகளாக கட்சியில் பணியாற்றிய ஸ்டாலின் சென்ற முறையே (1996) அமைச்சராக ஆக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதற்கேற்ற துணிச்சல் கருணாநிதியிடம் அன்று இல்லை. இம்முறை தளபதி பதவியேற்ற போது அரங்கில் பலத்த கைதட்டல், விசில்!! தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொண்டது போலத் தான் தோன்றியது. அல்லது ஸ்டாலினை ஏற்றுக்கொண்டவர்களை மட்டும் கட்சி ஏற்றுக்கொண்டதா?

தி.மு.க. வில் பேராசிரியர், ஆற்காட்டார் என பெயரளவிலாவது கட்டுக்கோப்பான இயக்கம் இருப்பது போலத் தெரிகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வை விட இவர்கள் ஒரு படி மேல்.

குடும்ப அரசியலை (குறிப்பாக ஸ்டாலினை) ஏற்றுக் கொள்ளாத வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் என்.கே.கே.பெரியசாமி இருவரும் தங்கள் வாரிசுகள் மூலம் அந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. இனி எதிர்ப்பு எழாது என் நம்பலாம். கலைஞர் என்றுமே ராஜதந்திரி தான்.

எத்தனை ஆண்டுகள் தளபதி இளைஞர் அணித் தலைவராகவே (இளைஞராகவே எனப் பொருள் கொள்க) இருப்பார் என்ற கேள்வியை நானே கொண்டிருந்தேன்; ஒன்றரை ஆண்டு முன் ஒரு கல்லூரி வளாகத்தில் ஜாக்கிங் செய்ய வந்திருந்த அவரைக் காணும் முன். பேரப்பிள்ளை பெற்றவர் என்று தோற்றத்தைக் கொண்டு யாரும் சொல்லிவிட முடியாது. கமலுக்குக் கூட வயதாகி விட்டது; ஆனால் ஸ்டாலினுக்கு இல்லை.

பதவியேற்ற அத்தனை பேரும் கரகரப்புக் குரல்காரர்கள் தான். மென்மையாகவும், நளினமாகவும் அதே சமயத்தில் தெளிவாகவும் பெசக்கூடிய (சிதம்பரம் போல articulate) மனிதர்கள் கழகத்தில் இல்லை. உணர்ச்சியை தொட்டுப் பேசத்தான் பேச்சாளர்கள் அதிகம் இருக்கிறார்களே தவிர அறிவைத் தொட்டுப் பேச யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

கலைஞருக்குக் கலைத்துறையியின் மேல் வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. திருட்டு வி.சி.டி. முன் போல் கிடைக்குமா? அரிசியெல்லாம் 2 ரூபாய்க்கு தற்றீங்க. வி.சி.டி.யும் அப்படியே குடுத்தா நல்லா இருக்கும்.

வெளியே வரும் போது அரங்கத்திலிருந்து, ரிப்பன் கட்டிடம் வரை போலீஸ்காரர்களை எல்லாம் சென்னைத் தமிழில் கலாய்த்துக் கொண்டே வந்தார் ஒரு பெண். தன் தலைவனை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் அவருக்குச் சந்தோசம்.

காமராசரும், காங்கிரசும் தோற்கடிக்கப்பட்டவுடன் இரண்டு கழகங்களும் மாறி மாறி (அண்ணா காலம் முதல்) ஆண்டதில் தமிழகம் என்ன முன்னேற்றம் கண்டிருக்கிறது என வியக்கவேண்டியிருக்கிறது. அரசை நம்பி யாரும் இல்லை; நமது உழைப்பே போதும் என்கிறதாக மாறிப் போனது நம் மன நிலை. திருப்பூர் நகரம் சிறந்த எடுத்துக்காட்டு. "கால் நூற்றாண்டுக்கும் மேலாக, பேசிப்பேசியே நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். இதை இனி மெலும் அனுமதித்தால் உலகில் உன்னையும் என்னையும் போல் முட்டாள் எவனுமில்லை" நெய்வேலியில் பாரதிராஜா சொன்னது நினைவு வருகிறது. அதே தான் எமது கருத்தும். "பாரதிராஜா ஜெயலலிதா கிட்ட காசு வாங்கிட்டுத் தான் இப்படிப் பேசுகிறார்" என சன் டி.வியில் குதித்த சரத்குமாரும், ராதிகாவும் இப்போது எதை வாங்கிக்கொண்டு அந்தப் பக்கம் போனார்கள்?

Thursday, May 11, 2006

மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!!

குப்புசாமி செல்லமுத்து

பங்கு வர்த்தகம் செய்யும் போது அதன் உண்மையான மதிப்பு (value) என்ன என்பதே தெரியாமல் இருப்பது முட்டாள் தனம். இருந்தாலும் நிறையப் பேர் மதிப்பீடு என்னும் கோட்பாட்டையே மறந்து '10 மணிக்கு வாங்கி, 12 மணிக்கு விற்பதை' வழக்கமாகக் கொண்டுள்ளனர். 'ஆன் லைன்' டிரேடிங் என்ற கொடிய கொசுவின் வாயிலாகப் பலரையும் பாதித்திருக்கிறது இந்த நோய்.

ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு (முதலிடுவதற்கு) முன், அதிலிருந்து எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; பெட்ரோல் சுத்திகரிக்கும் ஆலையாக இருந்தாலும் சரி.

A என்றொரு கம்பெனி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் மொத்தம் 1000 பங்குகள் இருக்கின்றன. அந்தக் கம்பெனியின் ஆண்டு லாபம் (செலவு, கடனுக்கான வட்டி மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரி போக மீதம் கிடைக்கும் தொகை) ரூ10,000. ஆயிரம் பங்குளின் லாபம் பத்தாயிரம் என்றால், ஒரு பங்கு ஈட்டித் தந்த லாபம் எவ்வளவு? பத்து ரூபாய். அதைத் தான் EPS - Earnings per Share- என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

"நல்ல லாபமா இருக்கே. ஒரு பங்குக்குப் பத்து ரூபாயா!!" என யாரும் வியக்க வேண்டாம். நல்ல லாபமா இல்லையா என்பதை, அதற்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும். மேலே குறிப்பிட்ட நிறுவனம் A இன் பங்கு ஒன்று ரூ.850 க்கு வியாபாரமாகி வருகிறது என்றால் அதை நீங்கள் வாங்குவீர்களா? அதாவது ஒரு ஆண்டு கழித்து 10 ரூபாய் கிடைக்க ரூ850 தரச் சம்மதிப்பீர்களா? அப்படியே செய்தாலும் அது 1.18% வருமானத்தைத் தான் ஈட்டித்தரும்.

(10 / 850) X 100 = 1.18%

இதே நிறுவனத்தின் பங்கு ரூ.120 க்கு வியாபாரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது வாங்குவீர்களா? அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் இட்டு வைக்கும் 120 ரூபாய் முதலீடு 10 ரூபாயைச் சம்பாதிக்கும்; அதாவது 8.33%. வங்கியில் கிடைக்கும் வட்டியை விட இது அதிகமாக இருந்தால் இந்த விலையில் வாங்குவதைச் சாதகமாகவே கருதலாம்.

இந்த மாதிரியான கணக்குகளைச் சுலபமாக்க நமக்குக் கிடைத்த உபகரணம் தான் PE விகிதம். Price Earning ratio என்பதே அது. Price (விலை) க்கும் Earning (லாபம்) க்கும் உள்ள விகிதமே PE.

PE = Price / Earning அதாவது விலை/லாபம்

ஒரு ஒற்றைப் பங்கின் விலையை, அது ஈட்டித்தரும் லாபத்தால் (EPS) வகுக்கவேண்டும்.

நமது உதாரணத்தின் படி PE = 120/10 = 12

இதை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்.

 • கம்பெனி A இன் பங்கு PE விகிதம் 12 இல் வியாபாரமாகிறது.
 • கம்பெனி A இன் விலை அதன் லாபத்தின் 12 மடங்காக உள்ளது.

இப்படியெல்லாம் எங்காவது கேட்கவோ, படிக்கவோ நேர்ந்தால் இனி மேல் குழப்பமடையத் தேவையில்லை.

சரி.. PE விகிதத்தை எங்கனம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது? இதுகாறும் நாம் கொண்ட அலசலின் படி, குறைவான PE விகிதம் என்றால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும், அதிகமான PE விகிதம் என்றால் நமக்குக் குறைந்த லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும் இருப்பதை அறிகிறோம். பங்கு முதலீட்டாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் இது தலையாயது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் PE விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே எவரும் வாங்குவது இல்லை. நிர்வாகத் திறமை, தொலிழின் வளர்ச்சி வாய்ப்பு, அதன் வசமிருக்கும் அசையும் & அசையாத சொத்துக்களின் மதிப்பு, ஈவுத்தொகை வரலாறு (dividend history) போன்ற பற்பல காரணிகள் கருத்தில் கொள்ளாப்பட்டே முதலீட்டு முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
என்ன தான் மற்ற அளவுகோள்கள் மூலம் முடிவு எடுப்பது நடைமுறையில் இருந்தாலும், PE விகிதத்தின் அடிப்படையிலான பங்கு மதிப்பீடு பற்றித் தெரியாமல் முதலீடு செய்வதென்பது, மாலைக் கண் வியாதி படைத்த கவுண்டமணி 'சின்னத்தம்பி' படத்தில் இரவில் T.V.S. 50 ஓட்டிச் செல்வதற்குச் சமம்.

வளம் வெறுவோம்.

Tuesday, May 09, 2006

IPO தில்லுமுல்லு!!

குப்புசாமி செல்லமுத்து

உயர் நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பண்ணை வீட்டிற்குச் சாண எரிவாயுச் சாதனம் அமைத்திருந்தோம். சமையல் எரிபொருள் தேவையை இது பூர்த்தி செய்ததால், பொது விநியோகத்தில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயின் தேவை இல்லாமல் போனது. இதே மாதிரி வேறு பல குடியானவக் குடும்பங்கள் எமது குக்கிராமத்தில் இருந்தன.
மேற்குறிப்பிட்ட உபகரணம் இல்லாதோர் எங்கள் குடும்ப அட்டையில் கிடைக்கும் மண்ணெண்ணெயைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்தினர். வீட்டு உபயோகத்திற்காக இவ்வாறு அனுசரித்துப் போவது ஒன்றும் பெரிய குற்றமில்லை.

ஆனால், இதுவே பேராசை பிடித்த பெரும் மளிகை வணிகர் நூற்றுகணக்கான போலி குடும்ப அட்டைகளின் மூலம் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி தனது கடையில் அதிக விலைக்கு விற்றால், அது குற்றம் மட்டுமல்லாது மன்னிக்க முடியாத துரோகமுமாகும்.

சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த ஐ.பி.ஓ (IPO - Initial Public Offer) ஊழல் நம் ரேசன் கார்டு எடுத்துக்காடிலிருந்து அதிகம் வேறுபட்டதல்ல.

ஒவ்வொறு IPO விலும் சிறு முதலீட்டாளர்களுக்கு (retail investor என்பதைச் சில்லரை முதலீட்டாளர் என்று தமிழ்ப்படுத்தினால் அவ்வளவு நல்லா இருக்காது) 35% ஒதுக்கப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிறுவனம் ரூ.1000 கோடிக்குப் பங்குகளை வெளியிடுகிறதென்றால், அதில் ரூ.350 கோடி சிறு முதலீட்டாளர்களுக்குப் போய்ச்சேரும். ஆனால் இந்த பிரிவில் வருபவர்கள் (நம்மைப் போன்றோர்) அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் தான் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு செல்வந்தர் ரூ.50 இலட்சத்திற்கு IPO வில் வாங்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரால் சிறு முதலீட்டாளர் பிரிவில் விண்ணப்பிக்க முடியாது என்பதால் பொதுப் பிரிவில் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கிடைக்கும் ஒதுக்கீடு (quota) ஒட்டு மொத்த சிறு முதலீட்டாளர் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பகுதி தான். நமது உதாரணத்தின் படி ரூ.1000 கோடி வெளியிட்டில் இவர்களுக்கு ரூ.117 கோடி தான். மீதமெல்லம் வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும் (FII - Foreign Institutional Investors), பரஸ்பர நிதிகளுக்கும் (mutual funds) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட -உள் நாட்டு- நிறுவன முதலீட்டாளர்களுக்கும் (Qualified Institutional Investors) போய்ச் சேரும்.

"சரி.. போனா என்ன? இவரு கோட்டாவுல தான் 117 கோடி இருக்குல்ல?" அப்டீன்னு கேக்காதீங்க. ஏன்னா, இவர விடப் பெரிய பணத்திமிங்கலமெல்லாம் இந்தக் கோட்டவுல தான் அப்ளை பண்ணுவாங்க. அவுங்க மொத்த அப்ளிகேசனே பல ஆயிரம் கோடியத் தாண்டிரும். அதனால விகிதாச்சார அடிப்படைல ஷேர் அலாட் ஆகும் போது, நம்மாளோட 50 லட்சம் அப்ளிகேசனுக்கு 2 லட்சத்துக்குத் தான் ஷேர் கிடைக்கும். (இது ஒரு உதாரணம் தான். இதை விட அதிகமாகவோ, குறைவாகவோ கிடைக்க வாய்ப்புகள் உண்டு)

ஆனால் சிறு முதலீட்டாளர்களுக்கோ ஒரு இலட்ச ரூபாய் விண்ணப்பத்திலேயே ஐம்பதாயிரத்துக்குப் பங்குகள் ஒதுக்கப்படக் கூடும்.
நமது செல்வச் சீமானுக்கு ஒரு யோசனை சொல்லலாமா? அவரே 50 இலட்சத்தையும் போடுவதற்குப் பதிலாக 50 சிறு முதலீட்டாளர்களைத் தேடிப் பிடித்து ஆளுக்கொரு இலட்சமாக அவர்கள் பேரில் விண்ணப்பித்தால், மொத்தம் 25 இலட்ச மதிப்புள்ள பங்குகள் கிடைக்குமல்லவா? தானே மொத்தமாக விண்ணப்பிக்கும் தறுவாயில் 2 இலட்சத்துக்குத் தானே கிடைக்கும்?

நமது பினாமி ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எதற்காக ஒவ்வொரு IPO வின் போதும் இந்தப் பெரிய மனிதர் 50 சொற்ப மனிதர்களிம் கையேந்த வேண்டும்? அதற்குப் பதிலாக, 50 போலி டீமேட் (demat) கணக்குகளைத் துவக்கிக் காரியத்தை முடித்துக்கொள்ளலாமே!!!
அது தான் நடந்திருக்கிறது. 'ரூப்பால் பன்ச்சல்' என்ற அம்மையார் ஒரே முகவரியில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட டீமேட் கணக்குகளைத் துவக்கி யெஸ் வங்கி (YES bank) மற்றும் ஐ.டி.எ·.சி. (IDFC) நிறுவனங்களின் IPO வெளியீட்டின் பொது விளையாடியிருக்கிறார். இதனால் பல (பன்மை) கோடி ரூபாய் அநியாய இலாபம் பார்த்திருக்கிறார்.

"அது எப்படிங்க முடியும்? ஒரு டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்கவே போட்டோ, அட்ரஸ் புரூ·ப், PAN நம்பர் எல்லாம் கேக்கறாங்க. 5000 பேருக்கு எப்படி முடியும்?" எவருக்கும் எழக் கூடிய கேள்வி தான் இது.

மளிகைக் கடைக்காரருக்கு எப்படி அரசாங்க அதிகாரிகள் துணையுடன் போலிக் குடும்ப அட்டை வாங்க முடிந்ததோ, அதே மாதிரி தான் இதுவும். போலி டீமேட் கணக்குத் துவக்க அந்தந்த அதிகாரிகளின் துணையில்லாமல் எப்படியும் முடிந்திருக்காது.

மிக நீண்ட விசாரணைக்குப் பின் ஏப்ரல்-26 அன்று வெளியிட்ட தன் தீர்ப்பில் செபி (Securities and Exchange Board of India - SEBI ஐ தமிழில் 'இந்தியப் பத்திர மற்றும் பரிவர்த்தனை வாரியம்' எனலாம்) கார்வி (Karvy), இந்தியா புல்ஸ் (India bulls) இன்னும் அது போன்ற சில அமைப்புகளையும் தடை செய்தது. பின்பு நீதி மன்றத் தலையீட்டால் அது சற்று தளர்த்தப்பட்டது வேறு விஷயம். இந்த நிறுவனங்கள் தான் போலிக் கணக்கு ஓப்பன் செய்து கொடுத்தவர்கள்.

லஞ்சம் கொடுத்து அக்கவுண்ட் ஓப்பன் பண்றது சரி. ஐந்தாயிரம் பேரின் புகைப்படத்திற்கு என்ன செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து பார்த்தோம். நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் புகைப் படக் கடை ஆரம்பித்து சில நாட்களுக்கு (கேட்டால் விளம்பரத்திற்காக என்று சொல்லியிருக்கிறார்கள்) இலவசச் சேவை எனும் போது யார் தான் முகத்தைக் காட்டி விட்டுப் போக மாட்டார்கள்? அப்படிச் சேகரித்தது தான் அனைத்து உருவங்களும். உருவங்களுக்கெல்லாம் தனித்தனியே பெயர் சூட்டி, கணக்குத் துவக்கி அழகு பார்த்திருக்கிறார் இந்த அம்மையார்.

'செபி'யின் அறிக்கை வேறொன்றையும் புலப்படுத்துகிறது. அனைவரும் நினப்பது பொல இன்று நேற்று நடப்பதல்ல இந்த ஊழல். ஜுன் 2003 ல் வெளிவந்த மாருதி நிறுவனத்தின் IPO விலும் இந்த கோல்மால் நடந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் நல்ல தீர்ப்பு வழங்க முயற்சித்திருக்கும் நாட்டாமை 'செபி'.

சரி. இது யார் குற்றம்? பணத்தாசை கொண்ட ரூப்பால் போன்ற ஒரு சிலர் செய்த தவறுக்காகத் தண்டிக்கப் பட வேண்டுமென்கிற வாதங்கள் நியாயமானவை. ஆனால், இந்தக் குற்றப் பட்டியல் நீளமானது.
 • ஆயிரக்கணக்கான பொலிக் டீமேட் கணக்குகளைத் தொடக்க ஒத்துழைத்த DP நிறுவனங்கள்
 • வாடிக்கையாளர் யாரென்றே தெரியாமல் (KYC - know your customer விதி மீறல்) சேமிப்புக் கணக்கு ஏற்படுத்திய வங்கிகள்
 • ஒரே முகவரியில் இருந்து இத்தனை ஆயிரம் விண்ணப்பங்கள் வருமா என்றல்லாம் ஆராயாத IPO நடத்திய அமைப்புகள்
 • இத்தனையும் கண்டும் காணாமல் இத்தனை காலம் குறட்டை விட்டுத் தூங்கிய பெரியண்ணன் 'செபி'


என அத்தனை பேரும் இதற்கு ஒட்டு மொத்தப் பொறுப்பேற்க வேண்டும்.


"பங்குச் சந்தை ஊழல் மிகுந்த இடம். அங்கு நடப்பது முதலீடல்ல; சூதாட்டம் தான்" என்பது போன்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டுச் சிறு முதலீட்டாளர்கள் மறுபடியும் திருப்பிப் பார்க்கிற நேரம் இது. அப்படிப்பட்ட வேளையில் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் விதி மீறல்களும், ஊழல்களும் நடக்குமானால், இந்த மாபெரும் கட்டமைப்பு தன் செல்வாக்கை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. இனி மேலாவது IPO வெளியீடகள் ஒளிவு மறைவின்றி, ஊழலின்றி வெளிப்படையாக நடக்கும் என நம்புவோம்.


வளம் பெறுவோம்.

Wednesday, May 03, 2006

அளவிற்கு மீறிய ஆசை

குப்புசாமி செல்லமுத்து

தான் பணியாற்றும் அலுவலகத்தில் இருந்த காலியிடத்தைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதற்காக நண்பரொருவர் சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த செய்தி குறித்து மட்டுமின்றி, வேறு சில விஷயங்களையும் பேசினோம். பரஸ்பர நிதி (mutual fund) வாயிலாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பங்குகளில் தான் செய்திருந்த முதலீட்டின் நிகர சொத்து மதிப்பு (NAV - Net asset value) 100 % க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதைக் குறிப்பிடார் நண்பர். அது மட்டுமின்றி தற்போது ரூ.2 இலட்சமாக இருக்கும் தனது முதலீட்டை வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.50 இலட்சமாக பெருக்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இத்தகு தனிப்பட்ட இலக்கை அலசும் முன் மேலோட்டமாக ஒரு புள்ளி விபரத்தைப் பார்ப்போம். சராசரியை மிஞ்சிய 20% வளர்ச்சியை ஒருவர் எட்டுவாரேயானால், இன்று முதலீடு செய்யப்படும் ரூ.100 ஐந்து ஆண்டுகட்குப் பின் ரூ.248 ஆக உருவெடுத்திருக்கும். மிக அசாத்தியமான - சில பேருக்குச் சாத்தியமான - செயல் இது. இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 1 இல் உள்ள எண்கள் இதை விளக்கும்.


Photobucket - Video and Image Hosting
முடிவில் கிட்டும் தொகை ஆரம்ப முதலீட்டின் சுமார் 2.5 மடங்கு தான். மேற்ச்சொன்ன ரூ.2 இலட்சம் சுமார் ரூ.5 இலட்சமாக வளர்ந்திருக்கும், நிச்சயமாக ரூ.50 இலட்சமாக அல்ல.

இந்த புள்ளிவிபரங்களை சற்று ஒதுக்கித் தள்ளி விட்டு நண்பரின் இலக்கை எட்டத் தேவையான வருடாந்திர வளர்ச்சி வீதம் (CACR - Compounded Annual Growth Rate) எவ்வளவு என்பதனையும் ஆராய்வோம். அட்டவணை 2 ஐ காணுங்கள்.
Photobucket - Video and Image Hosting

இடை விடாத 90% சராசரி வருடாந்திர வளர்ச்சி நிர்ப்பந்திக்கப்படுகிறது. நம்மில் எத்தனை பேர் இது சாத்தியம் எனக் கருதுவோம்? கடந்த மூன்று வருடங்களாகப் பங்குச் சந்தை அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றி யாருக்கும் ஐயமில்லை. எந்த அளவுகோளின் அடிப்படையின் படியும் இது 'அபாரம்' அன்றி வேறேதும் இல்லை. ஆனால், இத்தகு performance வருடந்தோறும் திரும்ப நிகழ்த்தப்படுமென நாம் எதிர்பார்க்கலாமா?

கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஒரு ஒப்புமை செய்து பார்ப்போம். ஓரளவு அறிமுகமாகியிருந்த கால்பந்தாட்டக்கார் ஒருவர் வீட்டுக்கு வருகை புரிந்திருந்தார். பள்ளி நாட்களில் இருந்தே (இன்று வரை) அதிகம் கிரிக்கெட் பார்த்திராத (யார் அவர்? இந்தியர் தானா? கொஞ்சம் கூட தேசப்பற்று இல்லாதவரா? என்றெல்லாம் கேட்க வேண்டாம்), அதில் அதிக கவனம் செலுத்தாத நபர் இவர். வந்ததே வந்தார் கிரிக்கெட் மேட்ச் இல்லாத நாளில் வரக்கூடாதா? நாலைந்து பேர் கூடி ஆர்ப்பரித்துக் கொண்டே சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த போது தான் அவர் என்ட்ரி தந்தார். எங்களால் ரசிக்கப்பட்டது ஒரு நாள் போட்டியின் முதல் 15 ஓவர் ஆட்டம் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சேவாக் 4 பந்துகளில் தொடர்ந்து 4 பவுன்டரிகளை விளாச, எங்கள் ஆர்ப்பரிப்பும் அதிகரித்தது. கால்பந்தாட்டக்காரும் ஆட்டத்தின் வேகத்தையும் அது தரும் குதூகலத்தையும் வெகுவாக ரசித்தார்.

"அடச்சே.. இப்ப போயா பவர் கட் ஆகனும்..", என்றெங்களைத் திடீரெனப் புலம்ப வைத்தது மின் வாரியம்.

"மேட்ச் தான் இல்ல. மச்சான், 50 ஒவர்ல இந்தியா ஸ்கோர் என்ன வரும் பெட் கட்டுவமா?" என்றது ஒரு குரல். அவ்வாறே எல்லொரும் அஞ்சோ, பத்தோ பெட் கட்டினோம். 240 முதல் 320 வரை ஸ்கோர் வருமென தனி நபர்களின் கணிப்பு இருந்தது. ஆன புட் பால் பிளேயர் என்ன பெட் கட்டினார் தெரியுமா?

மீதமிருக்கும் 40 ஒவருக்கும் கடந்த 4 பந்துகளில் சேவாக் ஆடியது போன்ற - கடந்த 3 ஆண்டுகளில் பங்குச் சந்தை தந்தது போன்ற வருவாய் - ஆட்டத்தை எதிர் பார்த்து இந்திய அணியின் ஸ்கோர் 50 ஒவரில் 960 கூடுதலாக வரும் என்றார் (40 ஓவர் * 6 பந்துகள் * 4 ரன்கள்). இவரது எதிர்பார்ப்பை 'முட்டாள் தனம்' என்பதை விட நளினமான வார்த்தையால் வர்ணிக்க முடியாது. ஆட்ட முடிவில் அணியின் இலக்கைக் கணிக்க குறைந்த பட்சம் கீழ்க்கண்ட காரணிகளையாவது கருத்தில் கொள்வது அவசியம்.
* வீழ்ந்த விக்கெட்கள் மற்றும் ஆட்டமிழந்த ஆட்டக்காரர்கள்
* எதிரணியிலிருக்கும் பந்து வீச்சாளர்கள்
* ஆடுகளத்தின் தன்மை
* ஆட்டத்தின் முக்கியத்துவம்

பங்குச் சந்தையின் போக்கைக் கணிப்பது கூட அது போலப் பல்வேறு காரணிகளைக் கணக்கிட்டுச் செய்ய வேண்டிய பணி. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் SENSEX 1990 இல் 1000 புள்ளிகளைத் தொட்டு முதல் முறையாக மூன்றிலக்கத்தை ருசி பார்த்தது. இப்போது 12,000 புள்ளியில் உள்ளது. பதினாறு ஆண்டுகால (1990 - 2006) வளர்ச்சி வருடாந்திர வளர்ச்சி வீதத்தில் 16.81% எனக் கணக்கிடலாம். அதிலும் கடந்த மூன்றாண்டுகளைத் தள்ளி விட்டால், வளர்ச்சி வீதம் மிகச்சொற்பமான ஒற்றை இலக்கத்தில் தான் இருந்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு தான் 'முதலீடு விளையாட்டு' ஆடப்பட்டு வந்திகுக்கிறது; ரன்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மோசமான பந்துகளும், பந்து வீச்சாளர்களும் அமையும் போது பழைய கசப்பான நினைவுகளை அகற்றிவிட்டு அடித்து ஆடி எண்ணிக்கையை கூட்டிக்கொள்வதே புத்திசாலித்தனம். ஒன்று மட்டும் நினைவு வையுங்கள். சுலபமாக எண்ணிக்கையை கூட்டுவது என்பது சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலும் சரி, பங்குச் சந்தையிலும் சரி அரிதான காரியம், இயலாத காரியமுமில்லை!!!

முடிவுரை எழுதும் முன், உலகின் அதீத வெற்றிகரமான முதலீட்டாளர் திரு.வாரன் ப·பட் எந்த விகிதத்தில் தன் பணத்தை கூட்டி (பெருக்கி எல்லாம் இல்லை) வந்துள்ளார் எனப் பார்ப்போம். (அட்டவணை பார்க்க)
Photobucket - Video and Image Hosting
வாரனின் பணம் வருடந்தோறும் சராசரியாக 22.43% என்கிற வீதத்தில் வளர்ந்து வந்திருக்கிறது. அமெரிக்க S&P 500 (Standard and Poor 500) குறியீடு இதே கால இடைவெளியில் 11.66% என்னும் வீதத்தில் தான் கூடியுள்ளது. பூவுலகின் தலைசிறந்த பங்கு முதலீட்டாளரே இவ்வளவு தான் நீண்ட கால சாதனையாக செய்து காட்டியுள்ளார் எனும் போது, சராசரிக்கும் அதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல என்பது எனது தாழ்மையான எண்ணம். என்னுடைய அறிவிற்கும் (அறிவீனத்திற்கும்), சக்திக்கும் ஏற்ப சராசரியாக 15% இலாபம் ஈட்டுவதை இலக்காக நிர்ணயித்திருக்கிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கிறது; படிக்க வேண்டியிருக்கிறது; பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது; இன்னும் எத்தனையோ வேண்டியிருக்கிறது.....

அநேகம் பேர் பங்கு வர்த்தகம் (speculation) மற்றும் பங்கு முதலீடு (investment) முதலிய துறைகளில் புதிதாக நுழைந்துள்ளவர்கள். அருகான்மையிலிருக்கும் கடந்த காலத்தை மட்டும் பார்த்துவிட்டு தங்கள் இலக்குகள் நிர்ணயம் செய்யப்படுவதை அனுமதித்தவர்கள் இவர்கள். இந்திய அணி 960 ஒட்டங்களை குவிக்கும் என்று ஆரூடம் சொன்னவரிலிருந்து நாம் வெறுபடுகிறோமா என்று மட்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!! ஆசைப் படுவதில் தவறேதுமில்லை. ஆனால் அந்த ஆசையை, இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் உந்துதலையும், விடாமுயற்சியையும், அது சார்ந்த துறையில் அறிவையும், தொல்வி கண்டு துவழாத மனோதிடத்தையும், நுணுக்கங்களையும், சூட்சமத்தையும் பெருக்கிக்கொள்வது அவசியமாகிறது. இவை பெருகும் தருணத்தில், பணம் கூட மாத்திரமல்ல.... நிச்சயம் பெருகச் செய்யும்!!

பின் குறிப்பு:
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் நான் எழுதிய பொழுது  அதை வாசித்து விட்டு மேற்ச்சொன்ன நண்பர் மிகுந்த வருத்தப்பட்டார். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பதன் அடிப்படையில் தனது இலக்கை எட்ட இயலும் என்பதில் தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார். அவரது இலக்கு மற்றும் அதனை எட்டுவதற்கான திட்டமிட்ட உழைப்பு பற்றி விமர்சிக்கவோ, குறைகூறவோ யாம் முயலவில்லை. மாறாக share market is not a place to make easy money என்பதை எடுத்துக்காட்டும் எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை.

Tuesday, May 02, 2006

திருவாளர்.சந்தை அவர்கள்

குப்புசாமி செல்லமுத்து

கீழே கண்ட செய்தி ஒன்றும் எனது சொந்தக் கருத்து இல்லை என்பதைத் தெளிவுபடுத்த கடமைப் பட்டுள்ளேன்.

பெஞ்சமின் பிராங்ளின், பங்கு முதலீட்டின் தந்தை எனக் கருதப்படுபவர், ஒரு முறை, தினசரி பங்கு விலையின் எற்ற இறக்கங்களை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பின் வரும் மனோனிலையை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

"பங்கு விலையின் மூலத்தை நமக்குப் பரிட்சயமான நண்பர் திருவாளர்.சந்தை அவர்களிடம் இருந்து வருவதாகக் கற்பனை செய்வது கொள்வோம். ஒவ்வொரு நாளும் தவறாமல் நம்மிடம் இருக்கும் பங்குகளை அவர் வாங்க விரும்பும் விலையை முன் வைப்பார். அதே பொல அவரிடம் உள்ள பங்குகளை அவர் விற்க விரும்பும் விலையையும் எடுத்து வைப்பார்.

பங்குகளின் நிருவனங்களும், அவற்றின் செயல்பாடுகளும் நிலையானவையாக இருந்தாலும், சந்தை அவர்கள் அவற்றுக்குக் கூறும் விலை நாளுக்கு நாள் (ஏன் நிமிடத்திற்கு நிமிடம் கூட) மாறிக் கொண்டே இருக்கும். நண்பர் அடிக்கடி சஞ்சலப்படும் மனநிலை கொண்டவர்.

சில சமயங்களில் நல்ல மனநிலையில் இருக்கும் பொது, நிறுவனங்களின் நல்ல எதிர் காலம் மட்டுமே அவர் கண்களில் தென் படும். இது போன்ற தருணங்களில் நம்மிடம் இருக்கும் பங்குகளை வாங்க என்ன விலை வேண்டுமானலும் தரத் தயங்க மாட்டார். அவரது பயமெல்லாம் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வரும் இலாபத்தை நாம் அபகரித்து விடுவோம் என்பது மட்டுமே. எப்பாடு பட்டாவது நமது பங்கை கைப்பற்றுவதே அவரது குறிக்கோள்.

வேறு சில தருணங்களில் மிகவும் சோர்வடைந்தவராகக் காட்சியளிப்பார் சந்தை அவர்கள். நிறுவனத்திற்கும், உலகத்திற்கும் மிக மோசமான எதிர் காலம் மட்டுமே இருப்பதாகக் கருதுவார். நமது உடைமைகளை அவரிடம் தள்ளி விட்டு விடுவோம் என்ற அச்சத்தில், மிக மிகக் குறைவான விலைகளையே பங்குகளுக்கு முன் வைப்பார். தனது பங்குகளை எவ்வளவு குறைவான விலையாயினும் பரவயில்லை என்று நம்மிடம் விற்று விட முயல்வார்.

திருவாளர்.சந்தை ஒரு உன்னதமான கொள்கை உடையவர். நாம் அவரை உதாசீனப் படுத்துவதை அலட்சியப் படுத்தாத பண்பு அவருடையது. ஒரு குறிப்பிட்ட நாளில் அவர் குறிப்பிடும் விலை நமக்குச் சரி வரவில்லையெனிலும், அவர் உதாசீனப் படுத்தப்பட்டாலும், அடுத்த நாள் வெறொரு விலையுடன் வந்து நம் முன் காட்சியளிப்பார்.

இவ்வாறான ஒரு நபருடன் தொழில் செய்வது மிக எளிமையானது. நண்பரது மன நிலை குன்றியது போன்ற சமயங்கள் நமக்கு மிக உகந்தவை, பின் வரும் ஒரு செய்தியை மட்டும் மனதில் கொண்டோமேயானால்!!

திருவாளர்.சந்தை நமக்குச் சேவை செய்ய இருக்கும் நபர். ஒரு பொழுதும் அவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கக் கூடாது. அவரது முட்டாள் தனமான அனுகுமுறையைக் கண்டு அவரை அலட்சியப் படுத்தவும் செய்யலாம். அல்லது நமது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். அவருடைய வழி நடத்துதலின் படி நடத்தல் சமங்களில் அபாயகரமாக அமையும்.

உண்மையை சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தையும் அதன் தொழில் முறையும் சந்தையை விட நாம் நன்கு புரிந்து கொள்வோம் என்று கூறி விட முடியாது. அது போன்ற நேரங்களில், நாம் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் தூர நின்று வேடிக்கை பார்ப்பது புத்திசாலித்தனம்"

பணவீக்கம்!!

குப்புசாமி செல்லமுத்து

"இந்தியர்கள் வலிமையுள்ளவர்களாக மாறி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ரூ.200 மதிப்புள்ள மளிகை பொருட்களை தூக்கி வர இரண்டு திடகாத்திரமான வாலிபர்களை தேட வேண்டி இருந்தது. ஆனால், இன்றோ 5 வயது சிறுவன் அதே இரு மதிப்புள்ள பொருட்களை தூக்கி வர இயல்கிறது."

மேற்கூறிய துணுக்கிலிருந்து நாம் அறிவது என்ன? காலப்போக்கில் நாமும் நம் சந்ததியினரும் உடல் வலிமையில் மெருகேறியிருக்கிறோமா? அல்லது யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலைவாசி விண்ணை நோக்கி நகர்கிறதா? அல்லது யாரோ தங்களுடைய நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்தும் முயற்சியில் வெளியிட்ட துணுக்கா? சற்றே யோசித்து பார்க்கும் பொது நகைச்சுவை இல்லை என்பதை உணர்வதோடு மட்டும் இல்லாது ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்பதும் புலனாகிறது. 'விலைவாசி என்னும் விஷயம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏறத்தான் செய்யும். இதில் நகைச்சுவை என்ன வேண்டி கிடக்கிறது?' என்று யாரோ முனகும் குரல் காதில் விழாமல் இல்லை.

கண் கூடாக நாம் காணும் இத்தகு விலைவாசி உயர்வு பொருளாதார நிபுணர்களால் அவ்வளவு எளிதாக அலட்சியப் படுத்திவிடக் கூடிய ஒரு அம்சம் அல்ல. இதை அந்த மெதைகள் 'பணவீக்கம்' என்று பந்தாவாகக் குறிப்பிடுகின்றனர். உலகெங்கும் பெரும்பாலான வல்லுனர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் இந்த பணவீக்கம் பற்றி மேலொட்டமாக எடுத்தியம்பும் முயற்சியே இந்தக் கட்டுரை!

பணவீக்க விகிதம் அனைத்து நாடுகளிலும் சதவிகித்தில் (%) குறிப்பிடப் படுகிறது. இவ்வாண்டுப் பணவீக்க விகிதம் 5% என்று மேதாவித்தனமாக யாரேனும் பேசுவார்களேயானால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொருட்களின் விலை 5 % அதிகரித்துள்ளது என்பதே அதன் பொருள். உதாரணமாக, பொன வருஷம் ரூ.100 க்கு வாங்கிய ஒரு பொருளை இவ்வாண்டு வாங்க ரூ. 105 செலவிட வேண்டி இருக்கும். நம்மில் எத்தனை பேருக்கு பத்து ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிய தினங்கள் நினைவிருக்கின்றன? எனில் இப்போது எதற்காக ஐந்து மடங்கு பணம் செலுத்துகிறோம்? 'எனக்கு தெரியும். ஏன்னா பணவீக்கம் அதிகமாயிருச்சு' என ஒலிக்கும் ஓசை கேட்கிறது. உண்மை என்னவென்றால், பணவீக்கம் ஏறியதால் விலை ஏறவில்லை; மாறாக விலை ஏறியதால் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும், சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்பட்டு, இந்த வாரத்தின் பணவீக்கம் எந்த அளவில் உள்ளது என நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மகத்தான பணியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வனே ஆற்றி வருகின்றது.

பணவீக்க விகிதம் ஒரு குறிப்பிட்ட தேசத்தையும் அதன் குடிமக்களையும் எங்கனம் பாதிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? சுருக்கமாக அதை சுட்டிக்காட்டாவிடில் இக்கட்டுரை முழுமை பெறாது என்பதில் தெளிவாகவே உள்ளோம்.

பணவீக்கமும் வட்டி விகிதமும்:
மெகா சீரியல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் பார்த்து உங்கள் மேல் வெறுப்பிலிருக்கும் மனைவியை சமாதானப்படுத்த கலர் டி.வி. வாங்க முடிவு செய்து ஐந்தாறு கடைகளில் விசாரித்து அதன் விலை ரூ.10,000 என அறிகிறீர்கள். இத்தகு தருணத்தில் உயிர் நண்பர் ஒருவர் குடும்பச் சிக்கலின் காரணமாகப் பத்தாயிரம் வேண்டும் என்றும், அதனை ஒரு வருஷத்தில் வட்டியுடன் திருப்பி தருவதாகவும் உறுதி அளிக்கிறார். கலர் டி.வி. வாங்கும் எண்ணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்து விட்டு (மனைவி சம்மதத்துடன்), நண்பருக்கு உதவ முடிவு செய்கிறீர்கள். அடுத்த ஆண்டு பண வீக்கம் 5% இருக்கும் என எங்கோ படித்தது நினைவு வர, டி.வி. விலை ரூ.10,500 (5 % அதிகம்) உயருமென மதிப்டுகிறீர்கள். பணவீக்கம் காரணமாக இதே பொருளை அடுத்த ஆண்டு வாங்க ரூ.500 கூடுதலாக செலவிட நேரிடும். உங்களுக்கும் பாதகமின்றி, உங்கள் நண்பருக்கும் பாதகமின்றி இருவரும் லாப நஷ்டமின்றி இருக்க, நண்பர் குறைந்தபட்சம் பணவீக்கத்தை ஈடுகட்டும் அளவிற்காவது வட்டி தர வெண்டும் (அதாவது ரூ. 500). பணவீக்கத்தை விட குறைவான வட்டியை நீங்கள் ஒப்புக்கொள்வது நிச்சயம் அறிவார்ந்த செயலாகாது.

இதிலிருந்து வட்டி விகிதம் பணவீக்கத்துடன் எவ்வாறு பயணிக்கிறது என அறிந்தோம். பணவீக்கம் அதிகமானால் வட்டி வீதமும் அதிகரிக்கும்; பணவீக்கம் குறைந்தால் வட்டி வீதமும் குறையும். இது உலக நியதி.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உங்கள் சம்பளம் 2% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 6% பணவீக்கம் உள்ள ஆண்டில் நிகழ்கிறது. மற்றுமோர் ஆண்டு முதலாளி உங்கள் சம்பளத்தை 2% குறைக்கிறார் (-2% அதிகரிப்பு). இப்போது பணவீக்கம் 0% ஆக உள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தும்? மனோதத்துவ ரீதியாக 2% அதிகரிப்பு கிட்டிய ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், 2% சம்பள குறைப்பு சோகத்திலும் ஆழ்த்தியிருக்கும். ஆனால் இதனைச் சற்றே உற்று நோக்கினால் சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆண்டு, உங்களிடம் இருந்த பணத்தின் வாங்கும் திறன் (purchasing power) ஊதிய அதிகரிப்பு நிகழாத ஆண்டை விட குறைவாகவே இருந்தது என்னும் உண்மை புலனாகும். கைக்கு வரும் காசு கூடுதலாக இருப்பினும், அதனின் மதிப்பு குறைவாகவே இருக்கும் இந்த நிலையை தான் பொருளாதார நிபுணர்கள் 'பண மாயை' (money illusion) எனக் குறிப்பிடுகின்றனர். 25% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகள் கொடுத்த 12% வட்டியை குதூகலத்துடன் வாங்கியவர்கள், 6% பணவீக்கம் காலத்தில் 6% வட்டியை கண்டு பின் வாங்குவது ஏன்? சிந்தியுங்கள் தோழர்களே!

பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் பங்கு சந்தை:
சமீப ஆண்டுகளில் (3-4) அநேகம் பேர் பங்கு சந்தையில் நுழைந்து தங்கள் திறமையை நிரூபிப்பது மட்டுமின்றி, மிகுந்த பணமும் ஈட்டி வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் (SENSEX) அபார வளர்ச்சியை இந்தக் கால கட்டத்தில் எட்டியிருப்பதும் அனைவரும் அறிந்தது தான். இதற்கு முதன்மையான காரணியாக இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நிலவி வந்த அடி மாட்டு வட்டி வீதத்தை பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். கடந்த 10 ஆண்டகளாக ஜப்பானின் வட்டி விகிதம் 0 % ஐ விட சற்றே அதிகமான அளவிலியே இருந்தது குறிப்பிடத் தக்கது.

வங்கி வைப்பீட்டு கணக்குகளிலும், கடன் பத்திரங்களிலும் (debt bond) கிடைக்கும் வருமானம் நிலையானது; எந்த விதமான கவலையும் இன்றிக் கிடைக்ககூடியது. Risk free return என்று இதை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இதற்கு நேர் மாறாக பங்கு சந்தையில் கிடைக்கும் வருவாய் நிலையற்றது. அதே சமயத்தில் வங்கியில் கிடைக்கும் வட்டியை விட பல மடங்கு இதில் கிடைக்கலாம். ஆனால் யாராலும் இதை உறுதியாக கூற இயலாது. உலகெங்கும் மிகக் குறைந்த வட்டி வீதம் இருந்ததை பார்த்தோம் இல்லையா? இந்த சூழ்நிலையில் நிலையான வருமானம் குறைவாக இருந்த காரணத்தால், அதிக வருவாய் கிடைக்க வேண்டி பங்கு சந்தையை நோக்கி தங்கள் பணத்தை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் திருப்பினர். நிறைய பணம் உள்ளே வர வர SENSEX வளர்ந்து கொண்டு போனதில் வியப்பில்லை.

பணவீக்கமும் அதன் விளைவாக வட்டி விகிதமும் அதிகரிக்கும் ஒரு சூழலில், நிலையான வருவாயும் அதிகரிக்கும். பாதுகாப்பான நிலையான வருவாய் அதிகரிப்பதன் காரணமாக முதலீட்டாளர் சமுதாயம் பங்கு சந்தையில் இருக்கும் பணத்தின் ஒரு பகுதியை கடன் பத்திரங்களில் பொடுவது எதிர்பார்க்க கூடிய செயல் தான். நம்மைப் போன்ற தனி மனிதர்கள் மட்டுமின்றி, பரஸ்பர நிதி (mutual fund) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (foreign institutional investors) இதே செயலை பின்பற்றுவார்கள் என எதிர் பார்க்கலாம். அதிகரித்த வட்டி விகிதத்தினால் பங்கு சந்தைக்கு வரும் பணத்தின் அளவு குறையும். இதனால் பங்குகளின் வளர்ச்சி நாம் ஆசைப் படும் அளவு இருக்காது. ஏறுமுகமான பணவீக்கத்தினால் பங்கு சந்தைக்கு நிகழம் பாதிப்பின் ஒரு கோணம் இது.

பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்தக் கடன் வாங்கித்தான் காலம் தள்ளுகின்றன. அதிகரித்த வட்டி விகிதத்தினால் நிறுவனங்களின் வட்டிச் சுமை கூடுகிறது. இலாபத்தில் பெரும் பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே சரியாய்ப் போய் விடுவதால், பங்குதாரர்களுக்கு கடைசியில் மிஞ்சுவது குறைகிறது. இவ்வாறு வெளிடப்படும் நிறுவன முடிவுகள் குறைவான 'அலகு பங்கின் வருவாய்' (EPS - Earlings per Share) என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனாலும் பங்குகளின் விலை குறையலாம். எனவே அதிக கடன் வாங்கிக் காலம் தள்ளும் நிறுவனங்களை அதிக பணவீக்க காலங்களில் தவிர்ப்பது உசிதம்.

முடிவிற்கு வந்துவிட்ட இக்கட்டுரையைப் படித்தவர்களிடம் இனி மேல் யாரும் பணவீக்கம் குறித்து பேசி ஏமாற்ற முடியாத அளவு பொருளாதார துறை அறிமுகம் கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி எமக்கு இருக்க வாய்ப்பில்லை. அது கூடப் பரவாயில்லை. எவரேனும் 'பணவீக்கம்னா... பணத்தை எங்க மாமா பணத்தை அடிச்சுட்டாரு. அதனால அதுக்கு வீங்கிருச்சு' என்று கடி ஜொக் சொன்னால், அதை ஊக்குவிக்காதீர்.

பங்கு வணிகம்

முதல் பதிவு. சோதனை பதிவு